Thursday, April 14, 2011

காதல் என்பது எல்லோருக்கும் வருவது ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதன்று!



ஏதோ ஒரு தைரியத்தில் காதலித்து விட்டு பிறகு பிரச்சனைகளை எதிர்கொள்ள தெரியாமல், பிரிய வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களை என் உளவியல் ஆலோசனையின் போது காண்கிறேன்.

அவர்களின் காதல் உண்மையாய் இருப்பினும்,  திருமணத்தில் இணைய 'காதல்' ஒன்று மட்டும் போதாது என்று நான் கருதுகிறேன்.


உளவியல் பூர்வமாக சிந்தித்த வகையில், காதலிக்கும் இருவருமே காதல் திருமணத்திற்கு உரிய பின்வரும் விஷயங்களை பெற்றிருத்தல் வேண்டும்.


இருவரில் ஒருவருக்கு மட்டும் இவை இருந்தாலும், அக்காதல் திருமணத்தில் சேராது,  நினைவில் மட்டுமே நின்று போகலாம். ஏனெனில் காதல் என்பது இருவர் சார்ந்தது. (நிஜ வாழ்வில் ஒரு தலைக்காதல் மனச்சோர்வையே பெற்றுத்தரும்)


1. இணைந்திருக்கும் உறுதி: ஒருவரை ஒருவர் புரிந்து, கருத்து வேறுபாடுகள் சகஜம் என்பதை உணர்ந்து, என்ன நடந்தாலும்,  இறுதி மூச்சு வரை இணைந்து வாழ வேண்டிய மனவுறுதி. அவ்வுறுதி இல்லாமல் போனால், உப்பு பெறாத விஷயங்களுக்காக காதல் காணாமல் போய் விடும் அபாயம் உண்டு.


2. பெற்றோரை, குடும்பத்தினரை, சமூகத்தை ஆதரவு தரச்செய்ய/ எதிர்த்து திருமணம் செய்ய திறமை: கிட்டத்தட்ட எப்போதுமே பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகம் காதல் திருமணங்களை ஆதரிப்பதில்லை. பல போராட்டங்களுக்கு பிறகே அவர்களிடமிருந்து சம்மதம் கிடைக்கிறது. சம்மதம் கிடைக்க போராட முடியாமலும் போகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில்,பெற்றோரை, குடும்பத்தினரை, சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்யவாவது, திறமை இருக்க வேண்டும். திருமணத்திற்கு உண்டான சட்ட நெறிமுறைகளை பின்பற்றி, சரியானவர்களின் உதவியை பெற்று திருமணம் செய்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.


ஆகவே பெற்றோரை, குடும்பத்தினரை, சமூகத்தை ஆதரவு தரச்செய்ய அல்லது அவர்களை எதிர்த்து திருமணம் செய்ய-இந்த இரண்டில் ஏதாவது ஒரு திறமை இருக்க வேண்டும். மேலும் காதல் திருமணங்களைப் பற்றிய சமூகப்பார்வையும், அதன் நிறைகுறைகளை அறிந்து இருத்தலும் அவசியம்.


3. பொருளாதார சுதந்திரம்:  தன் சொந்தக்காலில் நின்று தனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்காவது காதலர்கள் இருக்க வேண்டும். திடீரென பெற்றோரிடமிருந்து பிரிய நேரிட்டால், அந்நெருக்கடி நிலையை சமாளிக்க போதுமான அளவு பொருளாதார ஆதரவு இருப்பது அவசியம்.


வேலைக்குரிய தகுதிகளை பெறாது, படிப்பின் போதே திருமணம் செய்ய முற்படுவது, வேலையில்லாத போது திருமணம் செய்து கொள்வது ஆகியவை ஆழமாய் சிந்தித்து செய்யப்பட வேண்டியவை. ஆணாயினும், பெண்ணாயினும், தன் துணையின் பொருளாதார தேவைகளை அறிந்து, அவற்றையும் பூர்த்தி செய்ய ஆயத்தமாய் இருப்பது மிக நல்லது.


4. எதையும் சந்திக்க தயாராய் இருக்கும் ஆளுமை: பிரச்சனைகள் வரும் போது, அவற்றை சவாலாய் எடுத்து தீர்வுகாணும் மனவலிமை, மற்றவர்களை விட தன் கையையே அதிகமாக நம்பி இருத்தல், முடிந்தவரை யாரும் புண்படா வண்ணம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளல், வாழ்க்கை மீது ஒரு கொள்கை பிடிப்பு போன்ற பண்புகளை கொண்ட ஆளுமையை பெற்றிருத்தல் சாலச்சிறந்தது.


காதல் என்பது எல்லோருக்கும் வருவது ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதன்று
இந்த உண்மையை புரிந்துகொள்ளாது, பல காதல்கள் திருமணத்தைக் காணாது காதல்களாய் மட்டுமே நின்று விடுவதை என்னவென்று சொல்வது???

No comments:

Post a Comment