Friday, October 14, 2011

வாழ்வின் உண்மை! -‘செயல் விளைவு தத்துவம்’


உளவியல், சமூகவியல், தத்துவம், வேதாத்திரியின் மனவளக்கலை ஆகியவற்றை இத்தனை நாள் படித்ததன் மூலமும், வாழ்வில் நடைமுறைப்படுத்தி பார்த்ததன் மூலமும் பின்வரும் கருத்துக்களை வாழ்வின் உண்மை என எண்ணி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
.
எனக்கு தெரியும்! இதை ஒரு முறை படித்தால் உங்களால் முழுதாய் ஏற்றுக்கொள்ள முடியாது! முதல் முறை நீங்கள் இங்கு எழுதப் பட்டுள்ளவைகளை என் கருத்துக்கள் என நீங்கள் படிப்பீர்கள். இரண்டாம் முறை முறை படித்தீர்களானால், உங்கள் வாழ்வை தொடர்பு படுத்தி படியுங்கள்! உஙகளின் வாழ்வில் நெடு நாட்களாய் கேட்கப்பட்டு வரும் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்கும்!


உடலின் கருமையம்-பதிவுகளை பதியும் பதிவேடு
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒரு இடமான கருமையத்தில் பதிவாகிறது. நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது மனசாட்சியின் படியே வழி நடத்தப்படுகிறது. உங்கள் மனசாட்சி உறுத்தி, எச்சரிக்கை செய்வதை சட்டை செய்யாமல், நாம் செயல்படும்போது அது எதிர்மறை பதிவுகளை நம் கருமையத்தில் உண்டு செய்கிறது. நம் மனசாட்சியின் படி, நாம் செயல்படும் போது, அது நேர்மறை பதிவுளை கருமையத்தில் பதிய வைக்கிறது. வேதாத்திரியத்தில் கருமையம் என்பது முதுகுத்தண்டின் கீழ் உள்ளதாக சொல்லப்படுகிறது. என்னைப்பொருத்தவரை, உடலியல், உளவியல் படித்ததன் மூலம் எனக்கென்னவோ அக்கருமையம் மூளையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.


மனசாட்சியும் நீதி நெறிகளும்:
மனசாட்சி என்பது நம் வாழ்வின் வழிகாட்டி. அது நம் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி தனக்கென நீதி நெறிகளை உருவாக்குகிறது.

உளவில் கூறுவது போல், நம் மனசாட்சி அதிக அளவில் சிறு வயதில் உருவாகிறது. அவ்வபோது நம் வாழ்க்கையில் நடக்கும், பார்க்கும் விஷயங்கள் அந்த நீதி நெறிகளில் சில பல மாற்றங்களை உண்டு செய்கின்றன. இந்த மனமும், மனசாட்சியும் மூளையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஏனெனில் உடலியல் உளவியல் படி மூளை தான் நம் உடல், மன செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மூளையே!


நாம் தெரியாமல் செய்யும் தவறுகள்’, நம் மனசாட்சி சரி என்று சொன்ன பிறகே செய்யப்படுகின்றன. எனினும் தவறு தவறு தான், அது தெரியாமல் செய்தாலும், தெரிந்து செய்தாலும் அதற்கென எதிர்மறை பதிவுகள் உண்டாக்கத்தான் செய்யும். தெரியாமல் செய்த தவறுகளின் எதிர்மறை பதிவுகள் அளவில் குறைவாக இருக்கலாம். இப்பதிவுகளை சரியான அளவில் அலகு படுத்தி சொல்ல நான் இன்னும் ஞானம் பெறவில்லை.


பதிவுகளும் உடலியல் உளவியல் மாற்றங்களும்
நம் நேர்மறை பதிவுகள் உரிய நேரத்தில், நமக்கு சாதகமான, மகிழ்ச்சியான நிகழ்வுகளை நம் வாழ்க்கையில் உருவாக்குகிறது. உளவியல் வழியில் சொல்ல வேண்டுமானால், மகிழ்ச்சி ஏற்படுத்தும், பிரச்சனைகளை சமாளிக்கும், மற்றவர்களுடன் இணக்கமாக பழகும் இரசாயனங்களை உங்கள் உடலில் சுரக்க வைக்கிறது. அதன் விளைவாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் நமக்கு சாதகமாய் நடப்பதாய் உணர்கிறோம்.


நம் எதிர்மறைப் பதிவுகள் உரிய நேரத்தில், கஷ்டமான நிகழ்வுகளை, நம் வாழ்க்கையில் உருவாக்குகிறது. உளவியல் வழியில் சொல்ல வேண்டுமானால், இகழ்ச்சி ஏற்படுத்தும், பிரச்சனைகளை வாழ்வின் முடிவாக பார்க்கும், மற்றவர்களை எதிரியாக நினைக்கும் இரசாயனங்களை உங்கள் உடலில் சுரக்க வைக்கிறது. அதன் விளைவாக, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் எதிர்மறையாய் பார்க்கிறோம்.


தீதும் நன்றும் பிறர் தர வாரா
இங்கு உரிய நேரம் என்று சொல்லப்படுவதே வாழ்வை சுவாரஸ்யமாக்கும் அதிசயம். எந்த நேரத்தில் எவ்வகைப் பதிவுகள் அமலுக்கு வர வேண்டும் என்பதை கடவுள் நிர்ணயிக்கிறார் அல்லது இயற்கை விதி நிர்ணயிக்கிறது.

இதைத் தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்று கணியன் பூங்குன்றனார் கூறுகிறார். இந்த உண்மையை உணரும் போது, நாம் நமது செயல்பாடுகளில் கவனமாக இருக்கிறோம். நம் மனசாட்சிக்கு எதிராக செய்த தவறுகளை உணர்கிறோம், உரியவரிடம் அல்லது கடவுளிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உணர்ந்து, வருந்தி, திருந்தி மன்னிப்பு கேட்கும் போது, அது எதிர்மறை பதிவுகளை ஒரளவுக்கு கட்டுப்படுத்துகிறது.

என்ன தான் கடவுளிடம் வேண்டினாலும், கோயில் உண்டியிலில் லட்சம் லட்சமாக பணம் போட்டாலும், மக்களுக்கு நல்லது செய்தாலும், பரிகாரம் செய்தாலும் அந்த எதிர்மறை பதிவுகளை போக்கவே முடியாது.

இதனை படித்த பிறகு, உங்களுக்கு மேலும் சில கேள்விகள் எழலாம்.

ஏன் சில குழந்தைகள் பிறக்கும் போதே குறையுடன் பிறக்கின்றன? பிறக்கும் முன்னர் அக்குழந்தைகள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு எப்படி எதிர்மறை பதிவுகள் ஏற்படும்? என நீங்கள் கேட்கலாம்.

பிறக்கும் குழந்தை என்பது, தாய் தந்தையரின் பதிவை ஏற்றுக்கொண்டு பிறக்கிறது. அக்குழந்தையின் உடல் தாய் தந்தையரால் தரப்பட்டது.  ஆகவே தாய் தந்தையரின் நேர்மறை மற்றும் எதிர்மறை பதிவுகளை அக்குழந்தை ஏற்கிறது. அதன் விளைவாக அக்குழந்தையின் வாழ்வு அமைகிறது.

பல நல விஷயங்கள் செய்து, அதன் மூலம் ஓரளவுக்கு எதிர்மறை பதிவுகளின் தாக்கம் குறையும் போது, அக்குழந்தையும் நல்வாழ்வை வாழத் தொடங்கும். தன் குறைகளை நிறைகளாக்கி வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு தன் வாழ்வையும், பிறர் வாழ்வையும் வளப்படுத்தும்.


விதி என எதைக் குறிப்பிடுகிறோம்?
இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாது கஷ்டம் வரும் போது, ஏன் எனக்கு இந்த மாதிரி நடக்கிறது? என நாம் கேள்வி கேட்கிறோம். அதை விதி என்கிறோம். ஆனால் மகிழ்வான நிகழ்வுகள் நடக்கும் போது, நாம் அவ்வாறு கேள்வி கேட்பதில்லையே?! அம்மகிழ்ச்சியான தருணங்களில் வாழ நமக்கு உரிமை இருக்கிறதா எனக் கேட்பதில்லையே!

பிறர் வளம் பறிக்கிறோமே!
நம் வாழும் வாழ்வே, ஏதோ ஒரு வகையில் பிறர் வளம் பறித்து தானே நடத்தப்படுகிறது. ஒரு பெட் ரூம் உள்ள வீட்டில் வாழ்பவர் குறைந்த அளவில் பிறர் வாழும் இட வசதியினை பறிக்கிறார், பத்து பெட் ரூம் இருக்கும் வீட்டில் வாழ்பவர், அதிக அளவில் பிறர் வாழும் இட வசதியினை பறிக்கிறார். ஆகவே நம் வாழும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாது, எதிர் மறை பதிவுகள் ஏற்படத்தான் செய்யும். அந்த எதிர் மறை பதிவுகளை ஏற்றுக்கொண்டு, முடிந்த வரை நல்லது செய்து வாழுவோம்.

No comments:

Post a Comment