Wednesday, June 6, 2012

எதிர்பாராத அதிர்ச்சியான நிகழ்வுகளால் ஏற்படும் மனக் கஷ்டங்களும், பொதுவான தீர்வுகளும்


நாம் ஏதாவது ஒரு அதிர்ச்சியை சந்திக்கும் போது, நடக்கும் விஷயங்களை குப்லர் ராஸ் Kubler Ross என்ற மன நல மருத்துவர் சோகத்தின் நிலைகள் (Stages of Grief) என்ற கருத்தாக்கத்தில் கூறியுள்ளார். இந்த கருத்தாக்கத்தை நமக்கு பிடித்தவர்கள் எதிர்பாராத விதத்தில் நம்மை விட்டு பிரிந்து போவது அல்லது திடீரென வேலை விட்டு நீக்கப்படுதல், புகையிலை பழக்கத்தை வேறு வழி இல்லாமல் திடீரென விட்டு விடுதல்/ஏதோ ஒரு  நோயால் விட்டுவிட வேண்டிய கட்டாயம் போன்ற எந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த கருத்தாக்கத்தை, நாங்கள் உளவியலாளர்களாக எதிர்பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் மனக்கஷ்டங்களை புரிந்து கொள்ள பயன்படுத்துகிறோம். பின்வரும் 5 நிலைகளில் ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று பார்த்து, அதற்கேற்றவாறு உளவியல் ஆலோசனை அளிக்கிறோம்.

சோகத்தின் நிலைகள்:
  1. மறுப்பு கூறுதல் (Denial) அந்த குறிப்பிட்ட நிகழ்வை நம்பாமல் இருப்பது
  2. கோபம் (Anger) – ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரி..? என்பது போன்ற விடையளிக்க முடியாத கேள்விகள், அதன் காரணமாக தன் மீதும், தன்னை சுற்றி இருப்பவர்கள் மீதும் கோபம், எரிச்சல், வெறுப்பை காட்டுதல்
  3. பேரம் பேசுதல் (Bargaining) ஏதாவது ஒரு அதிசயம் நடந்து எல்லாம் சரியாகி விடாதா?, எல்லாம் பழைய படி மாறி விடாதா? என எதிர்பார்த்து இருப்பது
  4. மனச்சோர்வு அடைதல் (Depression) – ஒன்றும் நடக்காது போலிருக்கிறது, என்னால் ஆவது ஒன்றுமில்லை என வாழ்வில் நம்பிக்கை இழப்பது
  5. ஏற்றுக்கொள்ளல் (Acceptance) கடைசியாக ஏற்றுக்கொள்வது. என்ன நடந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, பிரச்சனைகளை சமாளிக்க என்னை தயார்படுத்திக் கொள்வேன், அதற்கான முயற்சிகளையெல்லாம் எடுப்பேன் என்ற நிலைக்கு வருவது.

இதனை ஆங்கிலத்தில் DABDA என்று சுருக்கமாக கூறுவது உண்டு. இந்த 5 நிலைகளும் அடுத்தடுத்து வரிசையாக வரவேண்டும் என்பதில்லை. மாறி மாறி கூட வரலாம், ஒன்றிரண்டு படி நிலைகள் விட்டுவிட படலாம்.

ஒவ்வொரு நிலைக்குமான, பொதுவான உளவியல் ஆலோசனைகள் பின்வருமாறு:
  1. மறுப்பு கூறுதல் (Denial) உங்கள் மனக்கஷ்த்தின் காரணங்களைப் பற்றி உங்களுக்குள்ளேயும், விஷயம் தெரிந்தவர்களிடமும் கேளுங்கள், தெரிந்து கொள்ளுங்கள்,  அவர்கள் சொல்வதை நம்புங்கள்.
  2. கோபம் (Anger) – உங்களைப் போல பலரும் இருக்கிறார்கள், கோபமும் உங்களை சீக்கிரம் மனக் கஷ்டத்திலிருந்து விடுபட செய்யாது.
  3. பேரம் பேசுதல் (Bargaining) -  நிகழ் காலத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள், எந்த ஒரு அதிசயமும் நிஜ வாழ்வில் பொதுவாக நடப்பதில்லை.
  4. மனச்சோர்வு அடைதல் (Depression) – உங்கள் கஷ்டங்களைப் பற்றி நம்பிக்கையான ஒருவரிடம் பேசுங்கள். கஷ்டப்பட்டு சரியான நேரத்திற்கு, சரியான அளவிற்கு சாப்பிடுங்கள்,  நடைப்பயிற்சி/உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டை மீறி உங்கள் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டால், மனநல மருத்துவரை/உளவியல் ஆலோசகர்களை அணுகுங்கள்
  5. ஏற்றுக்கொள்ளல் (Acceptance) நம்பிக்கையுடன் இருங்கள்

உளவியலாளர்களாக எங்கள் வேலை, இந்த 5 படி  நிலைகளையும், ஒருவர் எவ்வாறு சமாளித்து தாண்டி வர உதவி செய்வது என்பது தான்.

நீங்கள் இது போன்று எதிர்பாராத விதத்தில், ஏதாவது ஒரு நிகழ்வில் சிக்குண்டிருந்தால், இந்த நிலைகளை பற்றி சிந்தித்து பாருங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். அதற்கான உளவியல் ஆலோசனை உங்களுக்கு ஒத்து வருகிறதா என்று பாருங்கள். இல்லையெனில், உளவியல் ஆலோசகரை சந்தித்து, உங்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

பொதுவாக எதிர் பாராத நிகழ்வுகளால் ஏற்படும் சோகம் என்பது 1 மாதம் வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால், பல மன நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு. மன நோய்களிலிருந்து உங்களை காத்துக் கொள்ள, உளவியல் ஆலோசகரை/மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment