Tuesday, January 1, 2013

மாற முடியுமா? அல்லது மாற்ற முடியுமா?



என்னிடம் உளவியல் ஆலோசனைக்கு வரும் பலரும் தன் குடும்பத்தினர் ஒருவரை மாற்ற முயற்சித்து அதில் தோல்வி அடைந்து பின்னர் உளவியல் ஆலோசகராக என்னால் அவர்களை மாற்றமுடியும் என நினைத்து வருகிறார்கள்.

அன்பின் மூலம் மற்றவர்களை மாற்ற முடியும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் உண்மை என்னவெனில் அன்பிற்காக மாறுவது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடுவது கிடையாது. அன்பிற்காக மாற வேண்டும் என்ற கட்டாயம் உறவில் திணிக்கப்படும் போது, உறவு கொஞ்சம் கொஞ்சமாக கசக்கத்தொடங்குகிறது. அன்பு என்பது கட்டாயங்களற்றது. உள்ளதை உள்ள படியே ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான அன்பு. கட்டாயங்கள் திணிக்கப்பட்ட அன்பு, வியாபாரமயமாகிறது.  நீ இப்படி மாறினால் மட்டுமே என் அன்புக்கு உரியவன்/ள் என்று கூறுவது நியாமற்றது.

அன்பிற்காக மாறுவது என்று நினைத்துக்கொண்டு, தன்னைத்தானே கட்டாயப்படுத்தி மாறுவது என்பது தன்னை இழந்து, தன்னம்பிக்கையை இழந்து, அதனால் தன் மீதும், மற்றவர்கள் மீதும் உள்ள பார்வை மாறி, உங்களை விரக்தி அடையச்செய்யும். வேண்டுமானால் அன்பு, உங்களை  நீங்களே மாற்றிக்கொள்ள ஒரு துண்டுகோலாய், தொடக்கமாய் இருக்கலாம். அப்போது உங்கள் உள்ளுணர்வு மாற்றத்திற்கான தேவையை உங்களுக்கு உணர்த்தி உங்களை வழிகாட்டும். அப்படி நீங்கள் உங்களுக்குள் செய்யும் மாற்றமே நிரந்தரமாய் இருக்கும்.

உளவியல் என்ன சொல்கிறது என்றால், பெரியவர்களாக வளர்ந்து விட்ட யாருடைய குண நலன்களையும் மற்ற யாரும் மாற்றமுடியாது. அவரவர் தாங்களாகவே தன் குண நலன்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே, அவர்கள் மாற நாம் உதவி செய்ய முடியும். குண நலன்களில் மாற்றம் என்பது குழந்தை பருவத்தில் மட்டுமே அதிகபட்சம் சாத்தியம். சிக்மண்ட் பிராய்ட் முதல் இன்னும் பல உளவியல் அறிஞர்கள் குண நலன்கள் என்பவை அதிகமாக குழந்தைப்பருவத்தில் உருவாகிவிடுகின்றன என்று கூறுகிறார்கள். எனவே அவரவர் குழந்தைப்பருவ அனுபவங்களைப் பொறுத்து அவரவர் குண நலன்கள் உருவாகியிருக்கின்றன. ஒருவரின் குணநலன் மாறவேண்டுமானால், அவர்களது குழந்தைப்பருவ அனுபவங்களை மிஞ்சும் அளவிற்கு, அவர்களின் புதிய வாழ்க்கை அனுபவங்கள் இருக்க வேண்டும், அதன் காரணமாக அவர்களுக்கு தங்கள் மீதும், மற்றவர்கள் மீதும், இந்த உலகின் மீதும் ஏற்கனவே இருந்த பார்வை மாறி இருக்க வேண்டும்.

உளவியல் ஆலோசனையின் போது, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை வேறு வகையில் பார்க்க உதவி செய்வதன் மூலம் மாற்றத்திற்கான விதையை விதைக்கிறோம். அந்த விதை வளர வளர, அவரவர் மாற, அவர்களது வேண்டுகோளின் பேரில் உதவி செய்கிறோம்

குண நலன்கள் மாற வேண்டுமானால், நடத்தையில் மாற்றம் ஏற்பட வேண்டும். நடத்தையில் ஏற்படும் மாற்றம் என்பது 5 படி நிலைகளில் நடப்பதாக ப்ரொச்சஸ்கா & டிகிளமண்ட் ஆகிய புகழ் பெற்ற உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
1.       சிந்தனைக்கு முந்திய நிலை:  நடத்தையில் மாற்றம் செய்ய வேண்டியதே இல்லை என்ற எண்ணம் இருக்கும் நிலை
2.       சிந்தனை நிலை: நடத்தையில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும் நிலை
3.       தயார்படுத்தும் நிலை: நடத்தையில் மாற்றம் செய்ய தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நிலை
4.       மாற்றம் செய்யும் நிலை: நடத்தை மாற்றத்தை உண்மையில் செய்யும் நிலை
5.       மாற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும் நிலை: செய்துள்ள நடத்தை மாற்றத்தை வாழ்க்கை முழுவதுற்குமாக தக்க வைத்துக்கொள்ளும் நிலை
இந்த கோட்பாட்டின் படி, உளவியல் ஆலோசனைக்கு வரும் ஒருவர் எந்த படி நிலையில் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த ஆலோசனை அளிக்கப்பட்டு ஒரு படி நிலையிலிருந்து, அடுத்த படிநிலைக்கு கொண்டுவர உதவி செய்கிறோம்.  ஒரே ஒரு சந்திப்பின் மூலம் ஒருவரை ‘சிந்தனைக்கு முந்தைய நிலையிலிருந்து’, ‘மாற்றம் செய்யும் நிலைக்கு’ கொண்டுவர முடியாது. ஒரு சந்திப்பில் சிந்தனைக்கு முந்திய நிலையில் இருக்கும் ஒருவரை, சிந்தனை நிலைக்கு கொண்டுவர உதவி செய்தால் அதுவே வெற்றி தான். பல நேரங்களில் மாற்றம் செய்யும்  நிலைக்கு பிறகு, அதற்கு முந்தய படிநிலைகளுக்கு சிலர் சென்றுவிடுவது உண்டு. அப்படிப்பட்டவர்களை மீண்டும் ஒவ்வொரு படிநிலையையும் தாண்ட உதவி செய்து, ‘தக்கவைத்து கொள்ளும் நிலைக்கு’ அவர் வந்த பிறகு தான், நடத்தை மாற்றம் உண்மையில் நிகழ்கிறது. எனவே மாற்றம் நிகழ கொஞ்ச காலம் பிடிக்கும். பொறுமை தேவை.
முக்கிய குறிப்பு: அவரவர் வழியில் வாழ அவரவருக்கு உரிமை உண்டு. ஒருவர் மாற வேண்டுமானால் அவரது அனுபவம் மாற வேண்டும். மற்றவர்களை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்து அதற்காக மெனக்கெட்டு ஏதாவது செய்து கொண்டே இருந்தால், கடைசியில் நீங்கள் தான் விரக்திக்கு ஆளாவீர்கள். மாற வேண்டிய விஷயங்களில் ஒருவர் மாறவில்லை என்று நீங்கள் கருதினால், வாழ்க்கையும் உலகமும் தக்க அனுபவம் கொடுத்து அவர்களை மாற வைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாற வேண்டும் என்று நினைத்து உதவி கேட்டால் மட்டுமே நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முடியும்.
 

Published in In and Out Chennai To read Click http://2.bp.blogspot.com/-lGbxJmvo04Q/UOMrS-n5V0I/AAAAAAAABKA/VdTr0whCEFY/s1600/blog5.jpg and ZOOM.

No comments:

Post a Comment