Saturday, April 9, 2016

உங்கள் குழந்தைகள் வம்புத்தொல்லைக்கு உள்ளாகிறார்களா?



வம்புத்தொல்லை என்பது பல வகுப்புகளில், பல குழந்தைகளுக்கு நிகழும் நிகழ்வாக இருக்கிறது. வம்புத்தொல்லை என்பது அடிப்பது, திட்டுவது, தள்ளி விடுவது, மனக்கஷ்டம் கொள்ளச்செய்வது, பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவது, கேலி செய்வது, பயமுறுத்துவது, பிடிக்காததைச் செய்யக் கட்டாயப்படுத்துவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த வம்புத்தொல்லை நிறைய குழந்தைகளை மிக அதிக அளவில் பாதிக்கிறது. மேலும் பெரும்பான்மையான குழந்தைகள் அவ்வபோது இவ்வாறான வம்புத்தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல குழந்தைகளால் இந்த வம்புத் தொல்லைகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய கவலையிலேயே படிக்காமல், பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

அது போக அதிகம் பேர் படிக்கும் வகுப்புகளில், ஆசிரியர்களால் குழந்தைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போகிறது. ஆசிரியர்களிடம் போய்க் குழந்தைகள் சொல்லலாம் என்றால் பல ஆசிரியர்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம் ஏற்பட்டு, நேரமின்மை காரணமாக எல்லோரும், என்ன நடந்தது என்று பொறுமையாய் விசாரிக்க முடியாமல் எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு வம்புத்தொல்லைகள் தொடர மவுனச் சாட்சிகளாக இருந்து போகிறார்கள்.   

இதனால் ஆசிரியரிடம் சொல்வதால் ஒன்றும் பயனில்லை என்று நினைத்துக்கொண்டு குழந்தைகள் தங்களுக்குள்ளேயே அந்த சோகத்தை வைத்துப் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் பள்ளிக்குச் செல்வது ஒரு சுகமான அனுபவமாய் இல்லாது, இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து நினைத்து பள்ளி என்பது பயமுறுத்தும் இடமாக மாறிப்போகிறது.

ஏன் சில குழந்தைகள் மற்றவர்களை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும், தன் அதிகாரத்தை மற்றவர்கள் மீது காண்பிக்கவும் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் வம்புத்தொல்லைக்கு மற்றவர்களை ஆளாக்கும் குழந்தைகளின் குடும்பத்தில் அவ்வபோது சண்டைகளும், கோபதாபங்களும் நடப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தங்கள் மீது குடும்பத்தினரால் செலுத்தப்படும் அதிகாரத்தை வேறு யார் மீதாவது காட்டவும், தன் குடும்பத்தினரால் கொடுக்கப்படாத முக்கியத்துவத்தைப் பெறவுமே குழந்தைகள் அவ்வாறு நடந்து கொள்கின்றன.

வம்பு தொல்லைக்கு ஆளாக்கும் குழந்தைகள் முன்பு வேறு யாராவதால் வம்பு தொல்லைக்கு ஆளாக்கவும் பட்டிருக்கலாம். அதே போல் ஒரு குறிப்பிட்ட குழந்தை வம்புத்தொல்லைக்கு மற்றவர்களை ஆளாக்குகிறது என்றால், அந்தக் குழந்தை வம்புத்தொல்லைக்கு என்றுமே ஆளாகாது என்று கிடையாது.

வம்புத்தொல்லைக்கு எந்தக் குழந்தைகள் ஆளாகின்றன என்று பார்த்தால், யார் மற்ற யாருடனும் அதிகமாகப் பழகாமல் ஒதுங்கி இருக்கிறார்களோ, யாரை வம்புத்தொல்லைக்கு ஆளாக்கினால், எதிர்க்கத் தைரியம் இல்லாமல் இருப்பார்களோ, யாரைச் சீண்டினால் மனக்கஷ்டம் கொள்வார்களோ, யார் குறைந்த தன்மதிப்பீடு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவர்கள்தான் எளிதில் வம்புத்தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

வம்புத்தொல்லை பிரச்சனையைச் சமாளிப்பது எப்படி?
உங்கள் குழந்தை வம்புத்தொல்லைக்கு ஆளாக்கும் குழந்தையாய் இருந்தால், உங்கள் குடும்பச் சூழ்நிலையைச் சற்று உற்றுநோக்கிப்பாருங்கள்.

குடும்பத்தில் அவ்வபோது கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் நடந்தால், குழந்தைகள் அதனைப் பார்த்து வளரும் போது, அவர்களை அறியாமல் வாழ்க்கை என்பது சண்டை சச்சரவுகளுடன் இருந்தால்தான் அது சுவாரஸ்யம் என்ற ஒரு நம்பிக்கை உருவாகி விட வாய்ப்பு உண்டு. ஆகவே குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களையத் தகுந்த நடவடிக்கைகளைக் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும். வேண்டுமானால், உளவியல் ஆலோசகரின் உதவியைப் பெற்றுக் குடும்பச் சூழலை மேம்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் இருப்பதே பாதி பிரச்சனைகளைக் களைந்து விடும். மேலும் மற்றவர்களை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குவதால்நல்லது நினைக்கும் நண்பர் வட்டம் அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போவதைச் சொல்லிப் புரியவையுங்கள்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் வம்புத்தொல்லைகள் செய்து, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதை விட நல்ல முறையில் மற்றவர்களுக்கு உதவி செய்தும், போட்டிகளில் கலந்து கொண்டும், பொறுப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சரியாக நிறைவேற்றுவதன் மூலமும் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும், தவறான முறையில் பெறப்படும் கவனம் தற்காலிகமானது, எதிர்மறையானது என்றும் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள்.
எல்லோரும் சமமானவர்கள், யாரும் யாருக்கும் குறைவானவர்களும் அல்லர், மேலானவர்களும் அல்லர் என்ற மதிப்பீட்டையும், மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளவும், மற்றவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கவனிக்கவும் பயிற்சி கொடுங்கள்.

முடிந்தவரை மற்றவர்களைக் கஷ்டப்படுத்தாமலும், அதே நேரத்தில் தங்களைக் கஷ்டப்படுத்தாமலும் தங்களின் கருத்துகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவ்வாறே நடந்துகொள்ளவும் கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தை வம்புத்தொல்லைக்கு ஆளாகும் குழந்தையாய் இருந்தால், பின்வரும் விஷயங்களைச் செய்யுங்கள்.

மற்றவர்கள் உங்கள் குழந்தையை வம்புத்தொல்லை செய்கிறார்கள் என்றால், அது உங்கள் குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்பதை உறுதியான குரலில் தைரியமாக அந்த நபரிடம் சென்று சொல்ல உங்கள் குழந்தையைத் தயார்படுத்துங்கள். அப்படியும் அந்தக் குறிப்பிட்ட நபர் கேட்கவில்லை என்றால், அந்த நபரை முழுவதுமாகத் தவிர்த்து விடச் சொல்லுங்கள், அவர்கள் வம்புத்தொல்லை செய்வதை எந்தக் காரணம் கொண்டும் கண்டுகொள்ளக்கூடாது என்றும், கண்டுகொண்டால் அவர்கள் மேலும் மேலும் கேலி செய்ய வாய்ப்பு அதிகம் என்றும் கூறுங்கள். இப்படியெல்லாம் செய்தும் அந்த நபர் தொடர்ந்து வம்புத்தொல்லை செய்து கொண்டே இருந்தால், நம்பிக்கையான ஆசிரியரிடமோ, பள்ளியின் முதல்வர்/தலைமை ஆசிரியரிடமும் சொல்லச் சொல்லுங்கள். மிக முக்கியமாக வம்புத்தொல்லைக்கு ஆளாகும் நாட்களில் உங்கள் குழந்தைகள் அது பற்றி உங்களிடம் வந்து தைரியமாகச் சொல்ல 
அவர்களுக்குச் சுதந்திரம் தாருங்கள்.

முடிந்தவரைக் குழந்தைகளையே இந்தப் பிரச்சனையைக் கையாளவும், பேசித்தீர்த்துக் கொள்ளவும் பயிற்சி கொடுங்கள். முடியாமல் போகும் பட்சத்தில், நீங்கள் அதில் தலையிட்டுத் தீர்வு காண முயலலாம்.

உங்கள் குழந்தைகளின் நல்ல விஷயங்களைப் பாராட்டுங்கள். அவர்களின் குறைகளைக் களைய அல்லது ஏற்றுக்கொள்ள உங்களை முதலில் தயார் செய்து கொண்டு, உங்கள் குழந்தைகளையும் தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளவும், தன் குறைகளை ஏற்றுக்கொள்ளவும் பயிற்சி கொடுங்கள். மற்றவர்கள் அவர்களை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதனால் அவர்கள் மற்றவரை விடக் குறைவானவன்/ள் என்று நினைப்பு எழாமல் இருக்கவும், அதனால் அவர்களின் தன்மதிப்பீடுக்கு எந்த ஒரு குறைவும் வராமலும் பார்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தையை வம்புத்தொல்லைகள் செய்பவர்களை எதிர்த்து நிற்க, நல்ல நண்பர்களை அவர்களுடன் சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். தேவையான போது அவர்களின் நண்பர்களுக்கு உதவி செய்யச் சொல்லுங்கள், அப்போதுதான், உங்கள் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை எனில் அவர்கள் உதவி செய்வார்கள்.

மற்றவர்கள் உங்கள் குழந்தைகளை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதற்காக, மீண்டும் அவர்களைக் கேலி செய்வது, அடிப்பது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, பட்டப்பெயர் வைத்து அழைப்பது போன்றவற்றைச் செய்யவே செய்யக்கூடாது என்று ஆலோசனை சொல்லுங்கள்.

மேலும் பள்ளிகளில் வம்புத்தொல்லைகள் இல்லாமல் இருக்க, உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டிருக்கிறாரா, ஆசிரியர்களுக்கு இது பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் உரிய நடவடிக்கைகள் எடுக்கச்சொல்லி பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் மூலம், பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வையுங்கள்.

இவற்றையெல்லாம் செய்ய முடியாமல் போனாலோ அல்லது இவற்றை எல்லாம் செய்தும் மீறிப் பிரச்சனைகள் தீராமல் போனாலோ, தயங்காமல், ஓர் உளவியல் ஆலோசகரை அணுகி உதவி பெற்றுக்கொண்டு உங்கள் குழந்தைகளின் வாழ்வை வளமாக்குங்கள். வாழ்க வளமுடன்!


Sunday, November 16, 2014

லீடருக்கும் பாஸுக்கும் என்ன வித்தியாசம்? - 2

பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பதவியில் வேலைபார்த்து ஓய்வு பெற்ற ஒரு நண்பரை சந்தித்து இந்தத் தொடர் பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் Distress Vs Trust என்ற தலைமைத்துவ கருத்தாக்கம் பற்றி சொன்னார். எந்த உளவியல் புத்தகத்திலும் இந்தக் குறிப்பிட்ட கருத்தாக்கம் பற்றி நான் படித்திருக்கவில்லை. Popular Psychology அல்லது Common Sense Psychology என்று குறிப்பிடப்படும் பொது அறிவு உளவியலில் இந்த கருத்தாக்கம் இருந்து வந்துள்ளது என புரிந்து கொண்டேன்.

அவர் கூற்றுப்படி, முதலில் நமக்கு கீழ் வேலைபார்ப்பவர்களை நாம் நம்ப வேண்டும். அதுவே டிரஸ்ட் மாடல். நான் முதல் பகுதியில் சொன்னது போல், மனிதர்கள் அனைவருமே அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். ஒருவருக்கு முறையாக பயிற்சி கொடுத்துவிட்டால், அவர் கொடுக்கப்பட்ட விஷயத்தில் ஞானம் உள்ளவர் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் அந்தக் குறிப்பிட்ட வேலையை அவரிடம் நம்பிக் கொடுத்துவிட்டு, என்றைக்குள் முடிக்க வேண்டும் என்ற  நேரத்தையும் சொல்லிவிட்டு இருந்துவிட வேண்டியதுதான். 

இதனை செய்ய, தனக்கு கீழ் வேலைபார்ப்பவரின் பலம் என்னவென்று தலைவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அரைகுறை ஞானம் இருப்பவரென்றால், முறையான பயிற்சி கொடுத்து முழு ஞானத்தை வர வைக்க வேண்டும்.
நிறுவனத்திற்கு உரிய வேலையை பார்ப்பது மட்டுமே ஒரு தலைவரின் பணி கிடையாது. தனக்கு கீழ் வேலைபார்ப்பவர்களின் பின்புலம் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் நன்றாக வேலை செய்ய அவர்களது பிரச்சனைகள் குறைவாகவும், மனநலனும் உடல் நலனும், குடும்ப நலனும் நன்றாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தலைவர் தனக்கு கீழ் வேலைபார்ப்பவர்களிடம் அன்புடன் பேச வேண்டுமே! 
சரி! இதை படித்துவிட்டு, தலைவர் ஒருவர்,  உடனே தனக்கு கீழ் வேலைபார்ப்பவர்களிடம் போய், “எப்படி இருக்கிறீர்கள்? வீட்டில் எல்லாம் நலமா?” என்றெல்லாம் கேட்டால் உடனே கீழ் வேலைபார்ப்பவர்கள் எல்லாவற்றையும் சொல்லிவிடப்போவதில்லை ஏனெனில் அன்பாக அக்கறையாக விசாரிப்பது என்பது ஒரு திறமை அல்ல அது ஒரு பண்பு. வளர்த்துக்கொள்ளக் கூடிய பண்புதான்!
ஏன் மற்றவர்களை அன்புடன் விசாரிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மனதுக்குள் விடையளித்தால் அந்தப் பண்பை வளர்த்துக்கொள்ள முடியும். தனக்கு கீழ் வேலை பார்ப்பவரின் பார்வையிலிருந்து நிறுவனத்தில் நடப்பதை பார்க்க முடிந்து, வேலைகள் எவ்வளவு கஷ்டம் அல்லது எளிது என புரிந்துகொள்ள அவசியம் அவர்களை விசாரிக்க வேண்டும்.  நிறுவனத்தின் வேலைகளுக்காக விசாரிக்காது, அவர்களின் நலம் விரும்பியாக அன்புடன் விசாரித்தால் மட்டுமே அவர்கள் தங்கள் தலைவரிடம் உள்ளவைகளை உள்ளபடி கூறுவார்கள்.

உள்ளதை உள்ளபடி கூற, நான் என்ன செய்தாலும், சொன்னாலும் என்னை தவறாக நினைக்காது என் தலைவர் என்னை ஏற்றுக்கொள்வார், நான் சொல்வதை யாரிடமும் போய் சொல்லிவிட மாட்டார்,  நான் பேசிய விஷயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல்  தேவையான உதவிகள் செய்வார் என்ற நம்பிக்கைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமானால், பதவி, படிப்பு, அனுபவம் என எல்லாவற்றையும் தாண்டி அனைவரும் சமம் என்ற தத்துவம் தலைவரின் மனதில் இருக்க வேண்டியது அவசியம்.

அன்புடன், பரிவுடன் பேசும் தலைவர்கள் பதவியை விட்டு போன பிறகும் மரியாதை பெறுகிறார்கள். கீழ் வேலை பார்ப்பவர்கள் நிறுவனம் மாறினாலும் தொடர்பில் இருப்பார்கள். பிரச்சனை என்று ஏதாவது வந்தால் உடனே ஓடி வருவார்கள். அவர்கள் தலைவரின் நலம்விரும்பிகள் ஆகி இருப்பார்கள். இதுதான் முதலில் குறிப்பிட்ட டிரஸ்ட் மாடல்.

டிஸ்ட்ரெஸ் மாடல் என்பது நம்பிக்கை ஏதும் வைக்காமல் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வேலைகளை செய்ய வைப்பது. ஆரம்பத்தில் வேலைகளை சீக்கிரமாய் முடிக்க இந்த மாடல் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் இந்த மாடலை பின்பற்றும் தலைவர்கள், கீழ் வேலை பார்ப்பவர்களால்  எதிரிகளாக பார்க்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

நிதர்சனத்தில் முழுவதுமாக டிரஸ்ட் மாடலை 100% பயன்படுத்த முடியாது. ஏனெனில் மனிதர்கள் வித்தியாசனமானவர்கள். ஏற்கனவே டிஸ்ட்ரெஸ் மாடல் கொண்ட தலைவர்களின் கீழ் வேலை பார்த்தவர்கள், டிரஸ்ட் மாடல் தலைவர்களை புரிந்து கொள்ளாமல் கூட போகலாம். சில நேரங்களில் அவசரமாய் வேலையை முடிக்க வேண்டுமானால் டிஸ்ட்ரெஸ் மாடல் பயனுள்ளதாய் இருக்கலாம்.

இதெல்லாம் போக நிறுவனத்தை நடத்தும் தலைவர், அதாவது தலைவருக்கெல்லாம் தலைவர் என்ன மாடல் பின்பற்றுகிறாரோ அதே மாடல் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். வீட்டிலும், நிறுவனத்திலும் டிரஸ்ட் மாடலை பெரும்பாலான நேரங்களில் முடிந்த வரை பயன்படுத்த முயற்சி செய்வோம்.

-தொடரும்.

லீடர்-க்கும் பாஸ் (Boss)-க்கும் என்ன வித்தியாசம்? - 1


“மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்”
-கார்ல் ரோஜர்ஸ், உளவியலாளர்
தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத இந்த மேற்கோளை எதற்காக முதல் வரியாக குறிப்பிட்டிருக்கிறேன் என்ற கேள்விக்கான காரணத்தை கடைசி பத்தியில் சொல்கிறேன். அதற்காக நேராக கடைசி பத்திக்கு செல்லாமல் தொடர்ந்து படியுங்களேன்!

கற்றல் பொதுவாய்  நான்கு விதங்களில்  நிகழ்வதாக உளவியல் சொல்கிறது. (இதுவும் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பது போல் தெரியலாம்!)
1. பயிற்சியின் மூலம் பழக்கப்படுத்தப்படுதல் (Classical Conditioning)
2. பார்த்து கற்றுக்கொள்ளல் (Observational Learning)
3. நன்மை தீமைகளை அறிவின் மூலம் பகுத்து உணர்தல் (Insight Learning)
4. நன்மை தீமைகளை செய்து பார்த்து உணர்தல் (Operant Conditioning)
மேற்சொன்னது நான் 6 வருடத்திற்கு முன் என் முதுநிலை உளவியல் படிப்பில் தேர்வுக்காக படித்தது! நன்றாக நடத்திய ஆசிரியரின் புண்ணியத்தால் இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பண்ணிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பகுதி நேர வேலைக்கு செல்ல ஆரம்பித்தலிருந்து இன்று வரை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு விதமான தலைவர்களுக்கு கீழ் நான் வேலை பார்த்திருக்கிறேன்.

இந்த 10 ஆண்டுகளில் நான் வேலை பார்த்த நிறுவங்களில் சில நிறுவனங்களில் எனக்கு அமைந்த சில பாஸ் (Boss) வகையிலான தலைவர்களுடன் எனக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
      (i)           முறையான பயிற்சி என்று எனக்கு எதுவும் கொடுக்கப்படமாட்டார்கள். ஏன் என்று கேட்டால் அதெல்லாம் வேலை செய்யும் போது தானாக கற்றுக்கொள்வாய், எதுவாக இருந்தாலும் என்னை கேட்டு செய் என்று சொல்லி விடுவார்கள். ஏதாவது தவறு செய்தால் உடனே குறுகிய கால உடனடி பயிற்சி என்ற பெயரில் நான் செய்த தவறுகளை குத்திக் குத்திக் காண்பிப்பார்கள்.
    (ii)            எனக்கு முன்மாதிரியாகவே இருக்கமாட்டார்கள். கொள்கைகள் என்று எதுவும் இல்லாது தனக்கு தோன்றுவதையெல்லாம் செய்யுமாறு எனக்கு கட்டளை இடுவார்கள். அவர் ஒரு முறை சொன்னதை அவர் வகுத்த கொள்கையென கொண்டு செயல்பட்டால், ஏன் நீயாக கருதிக்கொள்கிறாய் என்று பின்னர் கேள்வி கேட்பார்கள்.
   (iii)            ஏன் ஒன்றை செய்ய வேண்டாம் என்கிறார், ஏன் வேறு ஒன்றை செய்யச்சொல்கிறார் என்ற கேள்விகளுக்கு விடைகளை சொன்னதே கிடையாது. அவர்களது முடிவுகளை என் அறிவின் மூலம் பகுத்து ஆராய எனக்கு வாய்ப்பளிக்கவே மாட்டார்கள். நமக்குத்தான் சரியாய் வேலை செய்ய தெரியவில்லை, ஆகவே ஒவ்வொரு முறையும் அவர்களை கேட்டே செய்து விடலாம் என்று கேட்கப்போனால் “ஏன் ஒவ்வொரு முறையும் என்னை கேட்டு செய்கிறாய், உனக்கு சொந்த புத்தி கிடையாதா?” என்று சொல்லாமல் சொல்வார்கள்.
  (iv)            சரி! நாமாக செய்து பார்த்து கற்றுக்கொள்ளலாம் என்றால், ஓரிரு தவறுகள் நடக்கும். அப்படி தவறுகள் நிகழ்வது சகஜம்தான் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னை சமாதானப்படுத்திக்கொள்ளும் வேளையில் வந்து விழும் “என்னைக் கேட்டுதானே செய்ய சொன்னேன், நீயாக எதற்கு செய்தாய்?!” என்ற பழைய அத்தியாயம். எப்போது நான் தவறு செய்வேன், உட்புகுந்து தன் அதிகாரத்தை நிலை நாட்டலாம் என்று காத்திருப்பார்கள்.

இவை தொடந்து நடக்க, ‘கேட்டு செய்-சுயமாய் செய்-கேட்டு செய்’ என்ற சுழலில்  நான் சிக்கி சின்னாபின்னம் ஆகி அங்கிருந்து ஓடினால் போதும் என்று சம்பளத்தைக் கூட வாங்காமல் ஓடி வந்துவிடுவேன்.
ஆக உளவியல் கூறும் நான்கு கற்றல் முறைகளில் ஒன்றில் கூட எனக்கு கற்றல் நிகிழவில்லை. முறையான, முழுமையான பயிற்சி அளிக்கப்படவில்லை. முன்மாதிரியாகவோ, கொள்கை ரீதியாகவோ வழிகாட்டிகள் யாரும் இல்லை. சுயமாய் சிந்தித்து செயல்பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. செய்து கற்றுக்கொள்ளலாம் என்றால் அதில் சகஜமாக நிகழ்ந்த தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டன.

ஆக தலைவர் என்றால்
      (i)            பின்பற்றுபவருக்கு முறையான, முழுமையான பயிற்சி அளிப்பதற்கான திறன் இருக்க வேண்டும்.
    (ii)            பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரியாகவும், சீரான கொள்கைகளுடனும் இருக்க வேண்டும்.
   (iii)            ஏன் ஒன்றை செய்ய வேண்டும், இன்னொன்றை செய்யக்கூடாது என்று அவர்களது கருத்தை பின்பற்றுபவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களில் கருத்துக்களை அறிவின் மூலம் பகுத்து ஆராய பின்பற்றுபவருக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.  
  (iv)            முறையான, முழுமையான பயிற்சி அளிக்க முடியாமல் போனால், வேலையை செய்யும் போது பல தவறுகள் நடக்கும், அப்படி தவறுகள்  நிகழும் போது  அவற்றைப் போட்டு குத்திக் குடையாது சரியான முறையை கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு முறையாக பயிற்சி தர வேண்டும். பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறாது, அழுத்தங்கள் தராது வேலையைக் கற்றுக்கொள்ள போதுமான நேரமும், சுதந்திரமும் தர வேண்டும்.
இந்த நாடாகட்டும், உங்கள் வீடாகட்டும், உங்கள் வேலை பார்க்கும் இடமாகட்டும். இந்த நான்கு விஷயங்களையும் உங்கள் தலைவர் செய்கிறாரா? ஆம் எனில் அவர் தலைவர். இல்லையெனில் அவர் தலைக்கன தலைவர்.

கடைசியாக ஒரு விஷயம் “என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. எப்போது அந்தத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதோ அப்போது ஒவ்வொருவரும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள தொடங்குவார்கள்.


ஒருவரை  நீங்கள் நம்பி அவர் உங்கள்  நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை எனில் அவருடைய “என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்ற தேவை நிறைவேறவில்லை என்று பொருள்.  நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவரது அந்தத் தேவையை உங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை எனில் அவர் வளர்ந்த விதத்திலோ, குடும்பத்திலோ வேறு பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட மன நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால் அவர்கள் தேறி உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக  நிச்சயம் நடந்துகொள்வார்கள். ஏனெனில் “மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்!”

Friday, November 14, 2014

லீடருக்கும் பாஸுக்கும் என்ன வித்தியாசம்? தி இந்து - வெற்றிக்கொடி 10/11/2014

கற்றல் பொதுவாய் நான்கு விதங்களில் நிகழ்வதாக உளவியல் சொல்கிறது.
1. பயிற்சியின் மூலம் பழக்கப்படுத்தப்படுதல் 
2. பார்த்துக் கற்றுக்கொள்ளல் 
3. நன்மை தீமைகளை அறிவின் மூலம் பகுத்து உணர்தல் 
4. நன்மை தீமைகளைச் செய்து பார்த்து உணர்தல் 

நான் ஆறு வருடத்திற்கு முன் என் முதுநிலை உளவியல் படிப்பில் தேர்வுக்காகப் படித்தது! நன்றாக நடத்திய ஆசிரியரின் புண்ணியத்தால் இன்னும் ஞாபகம் இருக்கிறது!

அனுபவங்கள்
12- வகுப்பு முடிந்தவுடன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து 10 ஆண்டுகள் பல நிறுவனங்களில் பலவிதமான தலைவர்களுக்குக் கீழ் நான் வேலை பார்த்திருக்கிறேன். சில நிறுவனங்களில் எனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
(i) முறையான பயிற்சி என்று எனக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் அதெல்லாம் வேலை செய்யும் போது தானாகக் கற்றுக்கொள்வாய், எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுச் செய் என்று சொல்லி விடுவார்கள். ஏதாவது தவறு செய்தால் உடனே குறுகிய கால உடனடி பயிற்சி என்ற பெயரில் நான் செய்த தவறுகளைக் குத்திக் குத்திக் காண்பிப்பார்கள்.
(ii) எனக்கு முன்மாதிரியாகவே இருக்கமாட்டார்கள். கொள்கைகள் என்று எதுவும் இல்லாது தனக்குத் தோன்றுவதையெல்லாம் செய்யுமாறு எனக்குக் கட்டளை இடுவார்கள். அவர் ஒரு முறை சொன்னதை அவர் வகுத்த கொள்கையெனக் கொண்டு செயல் பட்டால், ஏன் நீயாகக் கருதிக்கொள்கிறாய் என்று பின்னர்க் கேள்வி கேட்பார்கள்.
(iii) ஏன் ஒன்றைச் செய்ய வேண்டாம் என்கிறார், ஏன் வேறு ஒன்றைச் செய்யச் சொல்கிறார் என்ற கேள்விகளுக்கு விடைகளைச் சொன்னதே கிடையாது. அவர்களது முடிவுகளை என் அறிவின் மூலம் பகுத்து ஆராய எனக்கு வாய்ப்பளிக்கவே மாட்டார்கள். நமக்குத்தான் சரியாய் வேலை செய்யத் தெரியவில்லை, ஆகவே ஒவ்வொரு முறையும் அவர்களைக் கேட்டே செய்து விடலாம் என்று கேட்கப்போனால் “ஏன் ஒவ்வொரு முறையும் என்னைக் கேட்டுச் செய்கிறாய், உனக்குச் சொந்தப் புத்தி கிடையாதா?” என்று சொல்லாமல் சொல்வார்கள்.
(iv) சரி! நாமாகச் செய்து பார்த்துக் கற்றுக்கொள்ளலாம் என்றால், ஓரிரு தவறுகள் நடக்கும். வந்து விழும் “என்னைக் கேட்டுத்தானே செய்யச் சொன்னேன், நீயாக எதற்குச் செய்தாய்?!” என்ற பழைய அத்தியாயம். எப்போது நான் தவறு செய்வேன், உட்புகுந்து தன் அதிகாரத்தை நிலை நாட்டலாம் என்று காத்திருப்பார்கள்.

இவை தொடர்ந்து நடக்க, ‘கேட்டுச் செய்-சுயமாய் செய்-கேட்டு செய்’ என்ற சுழலில் நான் சிக்கிச் சின்னாபின்னம் ஆகி அங்கிருந்து ஓடினால் போதும் என்று சம்பளத்தைக் கூட வாங்காமல் ஓடி வந்து விடுவேன்.

கற்றல் இல்லை
உளவியல் கூறும் நான்கு கற்றல் முறைகளில் ஒன்றில்கூட எனக்குக் கற்றல் நிகழவில்லை. முறையான, முழுமையான பயிற்சி அளிக்கப்படவில்லை. முன்மாதிரியாகவோ, கொள்கை ரீதியாகவோ வழிகாட்டிகள் யாரும் இல்லை. சுயமாய்ச் சிந்தித்துச் செயல்பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. செய்து கற்றுக்கொள்ளலாம் என்றால் அதில் சகஜமாக நிகழ்ந்த தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டன.

தலைவர் என்றால்
(i) பின்பற்றுபவருக்கு முறையான, முழுமையான பயிற்சி அளிப்பதற்கான திறன் இருக்க வேண்டும்.
(ii) பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரியாகவும், சீரான கொள்கைகளுடனும் இருக்க வேண்டும்.
(iii) ஏன் ஒன்றைச் செய்ய வேண்டும், இன்னொன்றைச் செய்யக் கூடாது என்று அவர்களது கருத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களில் கருத்துகளை அறிவின் மூலம் பகுத்து ஆராயப் பின்பற்றுபவருக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.
(iv) முறையான, முழுமையான பயிற்சி அளிக்க முடியாமல் போனால், வேலையைச் செய்யும் போது பல தவறுகள் நடக்கும், அப்படித் தவறுகள் நிகழும்போது அவற்றைப் போட்டுக் குத்திக் குடையாது சரியான முறையைக் கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு முறையாகப் பயிற்சி தர வேண்டும். பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறாது, அழுத்தங்கள் தராது வேலையைக் கற்றுக்கொள்ளப் போதுமான நேரமும், சுதந்திரமும் தர வேண்டும்.

இந்த நாடாகட்டும், உங்கள் வீடாகட்டும், உங்கள் வேலை பார்க்கும் இடமாகட்டும். இந்த நான்கு விஷயங்களையும் உங்கள் தலைவர் செய்கிறாரா? ஆம் எனில் அவர் லீடர். இல்லையெனில் அவர் பாஸ். அதிலும் தலைக்கனம் கொண்ட பாஸ்.
- இராம. கார்த்திக் லெட்சுமணன், உளவியல் ஆலோசகர்
karthik.psychologist@ymail.com
இணையப்பதிப்பு: http://tamil.thehindu.com/general/education/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article6581463.ece?homepage=true

Saturday, November 8, 2014

தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? - ஓர் உளவியல் பார்வை

ஏன் ஒருவர் தவறான வழியில் பணம் தேடுகிறார்?  ‘பிறர் தவறான வழியில் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது’,     ‘சரி அவ்வாறு சம்பாதித்து பார்க்கலாமே என்று ஒரு முறையோ, சில முறைகளோ செய்த போது வந்த நல்ல விளைவுகளால்’ என இரண்டு காரணங்களை சொல்ல முடியும்.

உண்மையில் தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் அவர்களுக்குள் “தவறான வழியில் வரும் பணம் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்ற மாயை ஏற்படுகிறது. உழைக்காமல் கிடைக்கும் பணம் அவரது மனசாட்சியில் ஆரம்பத்தில் சில உறுத்தல்கள் ஏற்படுத்தும்போது “எல்லோரும்தான் இப்படி பணம் சம்பாதிக்கிறார்கள். நான் நேர்மையாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது” என திரும்ப திரும்ப தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்கள்.

“லஞசம் வாங்கிய அதிகாரி கைது” என்று தொலைக்காட்சிகளில் செய்தி வரும்போதும், தங்களுக்கு தெரிந்தவர்கள் தவறான வழியில் சொத்து சேர்த்து பிடிபடும் போதும், “இதெல்லாம் எனக்கு நடக்காது”, “அவன் கவனக்குறைவாக, பேராசைப்பட்டு லஞ்சம் வாங்கியிருக்கிறான், அதனால்தான் மாட்டிக்கொண்டான்” என்று பலவாறு தங்களுக்கு சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். தவறான வழியில் பணம் சம்பாதித்து இப்போது மாட்டிக்கொண்ட அனைவருமே ஒரு காலத்தில் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று இவர்களுக்கு தெரியாது.

பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம்,  நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்று கிடையவே கிடையாது. பணத்திற்கு மயங்காத மக்களும், விஷயங்களும் இன்றும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் என்றும் போல் இன்றும் ஒரு நியதியுடன்தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதுதான் “தீதும் நன்றும் பிறர்தர வாரா!”

தவறான வழியில் பணம் சேர்ப்பவர்களுக்கு எதிரிகள் வளர்ந்து கொண்டே போகிறார்கள். ஏனெனில் உரியவர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை ஒருவரே எடுத்துக்கொள்கிறார் என்றால் அந்த உரியவர்கள் எதிரிகளாய் ஆகிறார்கள். அந்த எதிரிகளுக்கு ஒரு காலம் வரும்போதோ அல்லது உலக நியதியின்படி மனசாட்சி திரும்பத்திரும்ப தவறு எனச் சொல்லச் சொல்ல விடாமல் செய்த தவறுகளுக்கான தண்டனையை தங்கள் வாழ்நாளின் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் அனுபவிக்கிறார்கள். அந்த தண்டனைகள் ஒரு தனிமனித/அந்தரங்கமான/ அக உள்ளுணர்வு சார்ந்த தண்டனையாய் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக ‘வலி’ என்பதை கூறலாம். வலி என்பது அனுவிப்பவரால் மட்டுமே உணரக்கூடியது. அதனை மற்றவர்கள் அளந்து அறிய முடியாது. அது போலவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு “இப்படி தவறான வழியில் சொத்து சேர்த்த இவர் இன்னும் நன்றாகத்தானே இருக்கிறார்” என்று கூட தோன்றலாம்.  ஆனால் உண்மை நிலை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

உளவியல் பூர்வமாக பார்த்தால், இவ்வாறு தங்கள் மனசாட்சிக்கு எதிராக நடந்து கொள்பவர்களின் வாழ்க்கையி; “பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்ற வகையிலான சில மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கும் அல்லது “பணம் மட்டும் இருந்திருந்தால் என் குழந்தைகளை நான் பெரிய பள்ளியில் சேர்த்திருப்பேன்” என்ற வகையில் அவர்கள் வாழ்க்கையில் நடந்தவைகளை மோசமான நிகழ்வுகளாக அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள்.  

தொடந்து தவறான வழியில் பணம் சேர்க்க சேர்க்க, அவர்களுக்கு எதிரிகள் கூடிக் கொண்டே போகிறார்கள். எதிரிகள் அதிகரிக்க அதிகரிக்க சம்பந்தப்பட்ட நபருக்கு பயம் தொற்றிக்கொண்டு விடும். தான் பயப்படுகிறோம் என்று தெரிந்தால், இது வரை சேர்த்தெல்லாம் போய் விடும் என்று உணர்ந்து, பொய்யாய் தைரியமாக இருப்பது போல் நடிக்கத்தொடங்குகிறார்கள். எந்த அசம்பாவிதமும் தங்களைச் சுற்றி நடக்காவிடில், கொஞ்ச நாட்களுக்கு பின் மீண்டும் தைரியம் கொள்கிறார்கள். ஏதாவது நடந்துவிட்டால், மீண்டும் நடிக்கத்தொடங்கி விடுகிறார்கள்.

இது தெரியாத பலர் அவர்களைப் பார்த்து தவறான வழியில் பணம் சேர்க்கத் தொடங்குகிறார்கள். இந்தப் பலருக்கு தெரியாது ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவர்களைப் போல் இவர்களும் மனசாட்சியின் சுழலில் சிக்கி நிம்மதி இழக்கப் போகிறார்க்ள் என்று!

தண்டனைகள் என்பவை  நீதித்துறையால் தரப்படவில்லையென்றாலும், உலக நியதிப்படி தரப்படுகிறது. தண்டனை என்பது வாழ்க்கை முறை சார்ந்த நோயாகவும், விபத்துக்களாகவும், இயற்கை சீற்றங்களாகவும், சொத்து சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ வைக்க ஆசைப்பட்ட குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் நேரும் எதிர்பாராத நிகழ்வுகளாகவும் இருக்க முடியும்.

எடுத்துக்காட்டாக நடந்தோ அல்லது சைக்கிளிலோ போய்கொண்டிருந்த ஒருவர் லஞ்சம் வாங்கி பைக் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இப்போது தெருமுனைக்கு செல்வதானால் கூட அந்த பைக்கில்தான் செல்வார்.  முன்பெல்லாம் நடந்துகொண்டிருந்ததால் வராத சர்க்கரை வியாதி இப்போது திடீரென அவரை தாக்கி விட்டது.  பிடித்த உணவு வகைகளை உண்டு களிக்க லஞ்சம் வாங்கிய அவர் இப்போது கோதுமை, கேழ்வரகு என்று சில குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். லஞ்சம் வாங்கி அதிக பணம் சேர்த்திருக்கும் அவர் சிறிய மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோவா போகப்போகிறார்? நிச்சயம் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குத்தான் போவார். அப்படிப்போகும் போது மருத்துவத்திற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி வரும். உண்மையில் உட்கார்ந்து யோசித்துப்பார்த்தால் லஞ்சம் வாங்கியதால் ஏற்பட்ட நன்மை என்று எதுவுமே இல்லையென்று அவருக்கு புரிந்துவிடும். ஆனால் அவ்வாறு உட்கார்ந்து அவர் யோசிக்கப்போவதில்லை, அப்படியே யோசித்தாலும் அந்த ஞானம் அவர்களுக்கு வராது. ஒரு வேளை ஞானம் வந்து விட்டால், உடனேயே லஞ்சப்பணத்தில் வாங்கிய அந்த பைக்கை விற்று, தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்து விட்டு மீண்டும் சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லத்தொடங்கியிருப்பார்.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் மாறாக ஜாதகம் பார்க்க போவது, மருத்துவத்திற்கு வேண்டி இன்னும் அதிக லஞ்சம் வாங்குவது போன்றவற்றையும், அதிக பட்சம் கோயிலுக்கு போய் உண்டியலில் பணம் போடுவது என்று சம்பந்தம் இல்லாதவற்றையே செய்து கொண்டிருப்பார்கள்.

-வெகு நாட்களுக்கு பின், அரை மணி நேரத்தில் தூக்கம் வராமல் எழுதிய கட்டுரை. இந்த தூக்கத்தை தடுக்கும் சிந்தனைகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்!

Monday, February 18, 2013

சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சாத்தியமே!

ஆங்கிலம் எளிது
ஆங்கிலத்தில் பேசுவது என்பது தமிழக இளைஞர்களில், பெரும்பாலோனோர்க்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. தமிழ் வழியில் படித்தாலும் சரி, ஆங்கில வழியில் படித்தாலும் சரி, ஆங்கிலத்தில் பேசுவது என்பது கஷ்டமாகவே உள்ளது. இதற்கு காரணங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்தால், அவற்றை எப்படி சரி செய்வது என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு பள்ளிக்கல்வியில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் என்பது ஒரு பாடம் என்பது போல் பாடத்திட்டங்கள் உள்ளன. 
மேலும் ஆங்கிலம் என்பது ஒரு அறிவு என்று பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் இங்கிலீஷ் நாலேட்ஜ் என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி சொல்வது முற்றிலும் தவறு! ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அறிவு பெற அந்த பாடத்தை படிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட மொழியில் புலமை பெற அந்த மொழியை படிக்க கூடாது. கற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால், மொழியை கற்றுக்கொள்ளும் விதமும், பாடத்தை படிக்கும் விதமும் வெவ்வேறு. எடுத்துக்காட்டாக, வேதியியல் பாடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வேதியியலில் அறிவு பெற, வேதிப்பொருட்கள், சமன்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் முறை போன்றவற்றைப் புத்தகத்தை படித்தோ அல்லது ஆசிரியர்கள் மூலமோ தெரிந்து கொள்ள  வேண்டும். 

ஆனால் நமது தாய் மொழியை கற்றுக்கொள்ள புத்தகங்களையோ அல்லது ஆசிரியர்களையா நாடினோம்? இல்லையே!
எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்வதில் நான்கு பகுதிகள் உள்ளன.
1.       கவனிப்பது (Listening)
2.       பேசுவது (Speaking)
3.       படிப்பது (Reading)
4.       எழுதுவது (Writing)
நமது தாய் மொழியை கற்றுக்கொள்ள, முதலில் நாம் ‘கவனிக்க’ தொடங்கினோம். நமது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் நம்மைச் சுற்றி பேசுவதை புரியாமல் கவனித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கி ‘பேச’ தொடங்கினோம். பேசும் போது அப்படியே சரளமாக வாக்கியங்களில் நாம் பேசத் தொடங்கவில்லை. முதலில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்துக்கள் உள்ள எளிய சொற்களை நாம் கற்க தொடங்கினோம். எடுத்துக்காட்டாக வா, போ, பூ,  அம்மா, அப்பா, அண்ணா, மாமா, தண்ணீ, காக்கா, நாய் போன்றவை. பிறகு எளிய வாக்கியங்களை வினைச்சொற்கள் கொண்டு பேசினோம். அப்போது பேசுவதில் நாம் செய்த தவறுகளுக்கு தண்டனைகள் கிடைக்கவில்லை, யாரும் கேலி செய்யவில்லை. நாம் சரி செய்யப்பட்டோம். இதற்கெல்லாம் பிறகுதான் படிப்பதும், எழுதுவதும் வந்தன. 

ஆனால் நம்மில் பலர் எப்படி ஆங்கில மொழியை கற்றுக்கொண்டோம்? முதலில் படிக்க, எழுதத்தொடங்கி பேச வந்தால், தவறாக பேசினால் கேலி செய்வார்கள் என நினைத்து நினைத்தே ஆங்கிலத்தில் பேசாமல் இருந்து விடுகிறோம். கடைசியில் ஆங்கிலத்தை கவனித்தல் என்பது பலருக்கு வாய்ப்பதே இல்லை. 

ஆக ஒரு மொழியை கற்க வேண்டிய முறையில் ஆங்கிலத்தை நாம் கற்காததும், ஒரு பாடத்தை படிப்பது போன்று ஆங்கிலத்தை படித்ததும்தான் இப்போது நாம் ஆங்கிலம் பேச முடியாமல் போவதற்கு அடிப்படை காரணங்கள். 

எனவே ஆங்கிலம் பேச தொடங்குவதற்கு முன்பாக ஆங்கிலத்தை கவனிக்க தனக்கு பொருத்தமாக உள்ள வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆங்கிலத்தை அதிகம் கேட்டிராதவர்கள் வெளிநாட்டு ஆங்கில செய்தி அலைவரிசைகளைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. அவ்வாறு செய்தால், ‘அய்யோ, ஒன்றும் புரியவில்லை’ என்று நம்பிக்கை இழந்து விட வாய்ப்பு உண்டு. இருக்கும் வழிகளில் உங்களுக்கு பொருத்தமான, உங்களுக்கு கேட்டால் புரியும் வகையில் உள்ள வழியை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். இன்று ஆங்கில மொழியை கவனிக்க பல வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பல தமிழ் அலைவரிசைகளில், ஆங்கிலச் செய்தியை தமிழர்கள் வாசிக்கிறார்கள். அந்த ஆங்கிலம் ஓரளவுக்கு எல்லோருக்கும் புரியும், அதே போல் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களை தமிழ் அல்லது ஆங்கில ‘சப் டைட்டில்’ உடன் பார்க்கலாம். 

கேட்க கேட்க, ஆங்கில மொழியின் உச்சரிப்புகளும், வாக்கிய அமைப்புகளும் உங்களுக்கு ஓரளவுக்கு பரிச்சயமாகி விடும். எந்த மொழியிலும் ஆரம்பத்தில் பேசுவதற்கு தேவை சொற்களும், எளிமையான வாக்கியங்களை அமைக்க இலக்கணமும்.
ஆங்கிலச் சொற்களுக்கு நம் இந்தியர்களிடம் பஞ்சமே இருக்காது.  நாம் பயன்படுத்தும் சொற்களில் ஆங்கிலச் சொற்கள் பல இருக்கின்றன. அவற்றை வைத்து கொஞ்சம் இலக்கணத்தையும் கற்றுக்கொண்டு இரண்டு, மூன்று வார்த்தைகள் கொண்ட எளிய வாக்கியங்களில் தொடங்கி, பின்னர் எளிமையாக கேள்வி கேட்க கற்றுக்கொண்டால் ஆங்கிலத்தில் பேசும் கலையை கற்றுக்கொள்ளலாம். 

பேச்சு பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு ஆங்கிலத்தை கவனிக்கவும், இலக்கணம் கற்றுக்கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பேசவும் உதவலாம். அவ்வாறான வகுப்புகளுக்கு போக முடியவில்லை எனில், ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் அவ்வபோது ஆங்கிலத்தில் உரையாடியும், கவனித்தும் வரலாம். ஆங்கிலம் எழுதப்படிக்க தெரியாத பலர், மற்றவர்களிடம் உரையாடியே ஆங்கிலம் கற்றுக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மற்றவர்களிடம் உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், உங்களுடன்  நீங்களே ஆங்கிலத்தில் பேசலாம். நீங்கள் உங்களுக்குள் சிந்திப்பதை ஆங்கிலத்தில் செய்யலாம். 

உங்களுக்கு தெரியாத வார்த்தைகளை, ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் கேட்டோ அல்லது உங்கள் தாய்மொழியில் உள்ள சொற்களுக்கு நிகரான ஆங்கில வார்த்தைகளை அளிக்கும் சொல்லகராதிகளை பார்த்தோ தெரிந்து கொள்ளலாம். 

தொடந்து இவ்வாறு ஆங்கிலத்தை கவனித்தும், கூச்சப்படாமல், குற்ற உணர்வில்லாமல் ஆங்கிலத்தை பேசியும் வந்தால் நாளைடைவில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சாத்தியமே!

குறிப்பு: பலரும் ஆங்கில அறிவு (English knowledge)  என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், ஆங்கிலத்தில் புலமை (English fluency) என்பதுதான். ஆகவே ஆங்கிலத்தில் புலமை பெற புத்தகங்கள் கொண்டு தேர்வுக்காக படிப்பது போல படிக்காமல், கவனிக்கவும், பேசவும் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்!