Wednesday, February 8, 2012

புற்றுநோயைப் பற்றிய தவறான கருத்துக்கள்(Myths about Cancer)



1.       தவறான கருத்து: புற்றுநோயை குணப்படுத்த முடியாது.
உண்மை:புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால், முறையான மருத்துவ சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும்.

2.       தவறான கருத்து: எல்லா வகையான புற்றுநோய்களின் முடிவு இறப்பு தான்.
உண்மை:சில குறிப்பிட்ட வகையான புற்று நோய்களாலும், முற்றிய நிலை புற்றுநோய்களாலும்,  இறப்பு ஏற்படலாம்.

3.       தவறான கருத்து: புற்றுநோய் என்பது எப்போதுமே வலி தரக்கூடியது.
உண்மை: ஆரம்ப நிலை புற்றுநோய்களில் வலி இருக்காது. முற்றிய நிலையில் மட்டுமே வலி ஏற்படும்.வலியை போக்க சிறந்த வலி நிவாரணி மருந்துகள் உள்ளன.

4.       தவறான கருத்து: புற்றுநோய் என்பது ஏழைகளின் நோய்.
உண்மை:புற்றுநோய் எந்த ஒரு வேறுபாடுமின்றி எல்லா பொருளாதார வர்க்கத்தினருக்கும் ஏற்படுகிறது. புற்றுநோய் விழிப்புணர்வு ஏழைகளிடத்தில் குறைவாக இருக்கிறது.

5.       தவறான கருத்து: புற்றுநோய் தொற்றக்கூடியது
உண்மை:புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருடன் பேசுவதாலோ, பழகுவதாலோ, அவர்களின் பொருட்களை பயன்படுத்துவதாலோ புற்றுநோய் தொற்றாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ஒதுக்கி வைப்பது மிகவும் தவறானது.

6.       தவறான கருத்து: புற்றுநோய் கிருமியால் ஏற்படுவது.
உண்மை:புற்றுநோய்க்கு எந்த ஒரு கிருமியும் காரணம் கிடையாது. நம் உடலிலுள்ள சாதரண செல்களே, திடீரென புற்றுநோய் செல்களாக மாற்றம் அடைகின்றன. சில கிருமிகள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுத்தலாம்.

7.       தவறான கருத்து: பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் நபர்களுக்கு, புற்று நோய் ஏற்படாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மெலிந்து உடல் நலமில்லாதவர்களாகவே இருப்பார்கள்.
உண்மை:உடல் நலம் நன்றாக இருப்பவர்களுக்கும் புற்று நோய் ஏற்படலாம். ஆரம்ப நிலையில், எல்லோரையும் போல அவர்களும் நல்ல உடல் நலத்தோடு தான் இருப்பார்கள். முற்றிய நிலையிலேயே,  உடல் நலமின்றி மெலிந்து காணப்படுவார்கள்.

8.       தவறான கருத்து: எல்லா கட்டிகளும், கொப்புளங்களும் புற்றுநோய் கட்டிகள் தான்.
உண்மை:எல்லா கட்டிகளும், கொப்புளங்களும் புற்றுநோய் கட்டிகளாக இருக்க வேண்டுமென்று கிடையாது. அதிக நாள் ஆறாத, திரும்பத் திரும்ப ஏற்படும் கொப்புளங்கள், இரத்தம் வடிந்து கொண்டே இருக்கும் காயங்கள்/கொப்புளங்கள், வளரும், கடினமாகும் வீக்கங்கள் ஆகியவை புற்றுநோயாக இருக்கலாம்.

9.       தவறான கருத்து: புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமே புற்றுநோய் ஏற்படும்.
உண்மை:புகை பிடிக்கும் பொது அருகிலிருந்து அதை சுவாசிப்பதாலும் புற்றுநோய் ஏற்படலாம். பெண்களும் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படலாம்.

10.     தவறான கருத்து: புற்றுநோயை தடுக்க முடியாது
உண்மை:புற்று நோயை நிச்சயமாக தடுக்க முடியும். சரிவிகித சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, அமைதியான வாழ்க்கை முறை, புகையிலை/மது போன்றவற்றை தொடாமலிருத்தல், தொடர் இடைவெளிகளில் பரிசோதனை செய்துகொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடித்தலின் மூலம் புற்றுநோயை தடுத்துக் கொள்ள முடியும்.

11.     தவறான கருத்து: புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு, சாதாரணமான நலமுடன் இருக்க முடியாது.
உண்மை:புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் வழக்கமான செயல்களில் ஈடுபடலாம். பெரியக் கட்டுபாடுகள் ஒன்றும் இருக்காது. தன்னம்பிக்கை மிக அவசியம்.

12.     தவறான கருத்து: பான் மசாலா, சிகெரெட் வடிவில் இருக்கும் மூலம் புகையிலையால் மட்டுமே புற்று நோய் ஏற்படலாம்.
உண்மை:புகையிலை எந்த வடிவில் இருந்தாலும் அது புற்றுநோய் உருவாக காரணமாகலாம். பீடி, மாவா, ஹான்ஸ், மூக்குப் பொடி போன்றவற்றில் இருக்கும் புகையிலையாலும் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

13.     தவறான கருத்து: எல்லா புற்றுநோய் மருந்துகளும், தலைமுடிகளை உதிர வைக்கும்.
உண்மை:ஒரு சில புற்றுநோய் மருந்துகள் மட்டுமே தலைமுடிகளை உதிர வைக்கும். அதுவும் தற்காலிகமானதே. சிகிச்சை முடிந்த சில காலத்தில் மீண்டும் முடி வளர்ந்து விடும்.

14.     தவறான கருத்து: புற்றுநோய் தலைமுறை தலைமுறையாய் வரும் ஒரு நோய்.
உண்மை:எல்லா வகையான புற்றுநோய்களும் தலைமுறை தலைமுறையாய் வராது. மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்கள் தலைமுறை தலைமுறையாய் வர வாய்ப்பு உண்டு. இருந்தாலும், சிகிச்சை அளித்து குணமாக முடியும். விழிப்புணர்வு, பரிசோதனை, கவனம் ஆகியவை அவசியம்.

15.     தவறான கருத்து: எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நபருக்கு புற்றுநோய் வராது.
உண்மை :புற்றுநோய்க்கு பல விதமான காரணங்கள் உண்டு. புகையிலை, மது ஆகியவை அவற்றில் ஒரு வகையான காரணம் மட்டுமே. 

16.     தவறான கருத்து: மன அழுத்தம் புற்று நோயை உருவாக்குகிறது.

உண்மை: மன அழுத்தம், நோய் எதிர்ப்பாற்றலை குறைத்து விடுகின்றன. அது போக மன அழுத்தத்தை போக்க பலரும் மது, புகையிலை போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம் புற்று நோயை நேரடியாக உருவாக்குகிறதா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 


நன்றி: மரு. சதீஷ் பத்மநாபன், புற்றுநோய் மருத்துவர், கேன்ஸர் இன்ஸ்டிடியூட், அடையாறு, சென்னை