“ஒரு காலத்தில் மருத்துவத்துறை உள உயிரியல் வழியில் (psycho-biological paradigm) செயல்பட்டு வந்தது. மருத்துவ பணியாளர்கள் நண்பர்களைப் போலவும், நலம் விரும்பியைப் போலவும் இருந்தார்கள். உடலை பரிசோதிப்பதை போலவே மனதின் பிரச்சனைகளுக்கும் மதிப்பளித்து அதற்கான சொல் மருந்துகளையும் அவர்கள் அளித்தார்கள். ஆனால் இப்போதோ மருத்துவத்துறை உயிரி மருத்துவ வழிக்கு(bio-medical paradigm) மாறிவிட்டது.“
- Dr. G. Kilara, M.D. F.I.C.S, Director-Medical Services, Curie Centre for Oncology, Bangalore (முனைவர். பிருந்தா சீதாராம், புற்றுநோய் உளவியலாளர் எழுதிய Not out –Winning the Game of Cancer என்னும் நூலிலிருந்து)
மருத்துத்துறை நோயாளிகளை வெறும் உடலாக பார்க்கத் தொடங்கி விட்டது. இரக்கம், அன்பு ஆகியவை நோயாளிகளுக்கு தரப்பட்டால் மருத்துவ பணியாளராய் இருக்க முடியாது என்று மருத்துவத்துறை கூற ஆரம்பித்து விட்டது.
உலகளவில் பெரிதும் உளவியலாளர்களால் பயன்படுத்தப்படும் DSM என சொல்லப்படும் மன நோய்களின் தொகுப்பின் அடுத்த பதிப்பு, முழுக்க முழுக்க மருந்துகளை மட்டுமே சிகிச்சைக்கு பயன்படுத்துமாறு உயிரி மருத்துவ வழியில் (bio-medical paradigm) அறிவுறுத்த போவதாய் எனக்கு ஒரு அமெரிக்க உளவியலாளர் கூறினார். மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக இவ்வாறு செய்ய கட்டாயபடுத்தபடுகின்றனவாம். அப்படி மட்டும் DSM வந்துவிட்டால், உள உயிரியல் வழியில் (psycho-biological paradigm) செயல்பட்டு வரும் உளவியல் ஆலோசனை என்பது குப்பையில் போடப்படலாம்.
நான் படிக்கும் Cancer Institute-ல் நான் உள உயிரியல் வழியைப் (psycho-biological paradigm) பின்பற்றும் பல மருத்துவர்களை பார்க்கிறேன். நோயாளியிடம் பேசுவது 5 நிமிடமே என்றாலும், அதில் அவர்கள் கூறும் வார்த்தைகள் நோயாளிகளுக்கும், குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தருகிறது. இந்த திரைப்படத்தில் வரும் ‘கட்டிப்பிடி வைத்தியத்தை’, இந்த படத்தை பற்றி இயக்குனர் சிந்திக்காத காலத்திற்கு முன்பிருந்தே எங்கள் மருத்துவர்கள் கடைபிடித்து வந்திருக்கிறார்கள். தோளில் தட்டிக்கொடுப்பது, அன்பாய், பரிவாய், தெரியாத மொழியில் நான்கு வார்த்தை பேசுவது போன்றவை நடப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். இதற்கு விதி விலக்காக சிலரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.
Laughter Therapy என்ற சிரிப்பு சிகிச்சை முறை Reality Therapy என்ற புகழ் பெற்ற உளவியல் கருத்துருவின் வெளிப்பாடே. இயக்குனர் இவற்றையெல்லாம் தெரிந்து தான், அந்த படத்தை எடுத்தார் என்று சொல்ல முடியாது. ஆனாலும், பல உளவியல் காரணிகளை உள்ளே புகுத்தியிருக்கிறார்.
Resilience எனப்படும் ‘பிரச்சனைகளை சமாளித்து மீண்டு வரும் திறன்’ கொண்டவராக கதாநாயகனை முன் நிறுத்துகிறார். இனக்கவர்ச்சிக்கும், காதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அழகாக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி வெளிப்படுத்துகிறார்.
நோயின் தன்மையை மருத்துவர் கூறும் போது, நோயாளிக்கு ஏற்படும் மன விரக்தியை மிகச் சரியாக படம் பிடித்துக்காட்டுகிறார். உயிரை காப்பாற்றுவது நாங்கள் தான் என கர்வத்துடன் பேசும் சில மருத்துவர்களை சாடுகிறார்.
இதற்கெல்லாம் மேலாக “அனைத்து மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள், மாறும் உலகம் அவர்களை மாறச் செய்கிறது” என்ற கோட்பாட்டை கூறிய உளவியல் மேதை Carl Rogers-ன் வார்த்தைகளை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் செதுக்கியிருக்கிறார்.
அனைத்து message களையும் கனக்கச்சிதமாய் பாமரருக்கும் புரியும் வகையில் நகைச்சுவையுடன் கலந்து, காதலுடன் மெருகேற்றி வழங்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment