ஆராய்ச்சி மாணவனாக இருப்பது, என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று எனக்கு கற்றுக் கொடுக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும், என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், என்ன செய்தால் அது தீமையில் முடியலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு ‘ஆய்வு முறை பாடம்’ (Research Methodology) எளிதில் விடையளிக்கிறது.
முதலில் ‘என்ன விஷயம் பற்றி நான் முடிவுகள் எடுக்க வேண்டும்’ என்பதை நான் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதைத் தான் ஆய்வு மொழியில் Research Problem என்கிறார்கள்.
அந்த Research Problem தொடர்பான எல்லா விஷயங்களைப் பற்றியும் புத்தகங்கள், முன்னர் செய்யப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகள், அக்குறிப்பிட்ட விஷயத்தின் நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துக்கள் என பல வழிகளில் நான் தெரிந்துகொள்கிறேன். இதைத் தான் ஆய்வு மொழியில் Review of Literature என்கிறார்கள்.
பின்னர் நான் என்ன முடிவு எடுத்தால் நல்லது என்று Review of Literature முலம் பெற்ற கருத்துக்கள் மூலம் ஒரு தற்காலிகமான முடிவுக்கு வருகிறேன். இதைத் தான் ஆய்வு மொழியில் Hypothesis என்கிறார்கள்.
அந்த தற்காலிகமான முடிவை (Hypothesis), பரிசோதனை செய்து பார்க்க நான் ஒரு சரியான ஆய்வு முறையை (Methodology) தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை நான் முன்னரே பெற்ற Review of Literature-ல் இருந்தோ, அல்லது ஒரு நல்ல வழிகாட்டியின் (Guide) துணையுடனோ நான் தேர்ந்தெடுக்கிறேன். அதன் மூலம் நான் எப்படி செய்தால் சிறப்பான, மிகச்சரியான முடிவு கிடைக்கும் என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட முறையை பயன்படுத்தி, நீதி நெறிகளை (Ethics) பின்பற்றி நான் ஆய்வை/பரிசோதனையை மேற்கொள்கிறேன்.
அதைத்தொடர்ந்து செய்த பரிசோதனையை பகுப்பாய்வு (Analysis) செய்ய வேண்டும். பகுப்பாய்வின் முடிவில் நான் தற்காலிகமாக எடுத்த முடிவு சரிதானா என்று தெரிந்துவிடுகிறது. சரி தான் எனில், அந்த முடிவை செயல்படுத்துகிறேன்.
எடுத்துக்காட்டாக, ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றுகிறது என்பதை கணக்கில் கொள்ளாமல், அவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்கிறேன். அவரைப் பற்றிய கருத்துக்களை பலரிடமிருந்தும் பெறுகிறேன். பிறகு இவர் இப்படிப்பட்டவராக இருக்கலாம் என்று தற்காலிக முடிவு எடுக்கிறேன். என் தற்காலிகமான முடிவு சரிதானா என்று தெரிந்து கொள்ள அவரிடம் பேசத் தொடங்குகிறேன். தேவைப்பட்டால், வெளிப்படையாக "நான் உங்களைப் பற்றி இப்படி நினைக்கிறேன். என் கருத்துக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்கிறேன். அவரின் பேச்சைக் கேட்ட பிறகு, நான் முன்னரே பெற்ற தகவல்களையும், அவரது கருத்துக்களையும் எந்த விருப்பும், வெறுப்புமின்றி (Objectivity) அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்கிறேன், பகுப்பாய்வு செய்கிறேன். முடிவில் 'அவர் இப்படிப்பட்டவர்' என்ற என் தற்காலிக முடிவை ஏற்றுக்கொள்கிறேன் அல்லது விட்டு விடுகிறேன்.
வழக்கமாக நாம் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், நமக்கு அவரைப்பார்த்தவுடன் என்ன தோன்றுகிற்தோ, அதையே உண்மை என நம்புவோம். மேற்கூறிய வகையில் அறிவியல் பூர்வமாக அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது, ஓரளவுக்கு உண்மைக்கு பக்கத்தில் நமக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.
எனக்கென்னவோ, பிரச்சனைகளை சரியான முறையில் தீர்க்க, முடிவுகளை எடுக்க இந்த ஆய்வு முறையை எல்லோரும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment