Sunday, September 16, 2012

ஆடு பலி ஆட்டம்- என் முதல் சிறுகதை


சாமி கும்பிடுவதற்காக என் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். என் பெரியப்பா ஊரில் மிகப்பெரிய தலைவர். பஞ்சாயத்து செய்பவர். கோயில் காரியங்களை முன் நின்று நடத்துபவர். அவர் பற்றி எனக்கு சிறு வயது முதலே நல்ல அபிப்ராயம் இருந்து வந்தது. சாமி கும்பிடுவது என்பது இரு வருடங்களுக்கு ஒரு முறை  நடக்கும் நிகழ்வு. தொடர்ந்து இரு முறை அதாவது நான்கு வருடங்களாக சாமி கும்பிடுவது யாரோ ஒருவரது இறப்பால், பெண் குழந்தை வயதுக்கு வந்ததால், குழந்தை பிறந்ததால் என்று தீட்டுகளால் தள்ளி தள்ளி போக, ஏன் இவ்வாறு தள்ளிப் போகிறது, அதற்கு என்ன பரிகாராம் செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய, கருப்பண்ண சாமியை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கருப்பண்ண சாமி உடுக்கை அடிக்கப்பட்டு, அழைக்கப்பட்டார். “ஏன் சாமி கும்பிடுவது தள்ளிப்போகிறது?” என்ற கேள்விக்கு, ஒரு தப்பு  நடந்து போச்சு அதனால தான் என்றும், அதற்கு பரிகாரமாக ஒரு மனித பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லியது. எனது பெரியப்பா உட்பட பலரும், கருப்பண்ண சாமியிடம் பல முறை வேண்டினார்கள், மனித உயிருக்கு பதிலாக ஆடுகள் இரண்டை வெட்டுவதாக சாமியிடம் சொன்னார்கள். சாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனது முடிவில் விடாப்பிடியாய் இருந்தது. சாமி கடைசியாய் சொன்னது, “நான் சொன்னப்டி நடக்கவில்லை என்றால் பெரிய சாபம் கொடுத்துவிடுவேன், அப்புறம் உங்கள் வம்சம் எதுவுமே தழைக்காது” என்ன செய்வது என்று அறியாமல் கையை பிசகிக்கொண்டே இருக்கையில், சாமி தானாக மலையேறி விட்டது. அந்த கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் எல்லோரும் இது பற்றி மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்க, சொந்த காரர்களின் மிகவும் வயது அதிகமான ஒருவர், தனது இளம்பிராயத்தில் இதே போல் சாமி கேட்டதை கொடுக்காமல் போய், ஊர் தலைவரின் இரு மகன்களும் இறந்து போனதையும், அதற்கு பிறகு ஒரு மனித உயிர் பலி கொடுத்தே, பரிகாரம் செய்ததனால், அந்த வம்சம் தழைத்தது எனவும் உண்மைக்கதை சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் வயதுக்கு மரியாதை கொடுத்து, மனித உயிர் பலி கொடுப்பது என்று வேறு வழியில்லாமல் முடிவு செய்யப்பட்டது.

எங்கள் குடும்பம் ஊரில் செல்வாக்கான குடும்பம். போலீஸ் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்கள் குடும்ப நண்பர்கள். என் பெரியப்பா என்ன சொன்னாலும் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். மனித உயிர் பலி சட்டப்படி தவறு என கூட்டத்தில் சிலர் கூறினாலும், பலர் சாமி குத்தம் ஆகிவிடும் என்பதையும், செல்வாக்கான நமது குடும்பம் மனித உயிர் பலி கொடுப்பதை போலிஸும், அரசும் கண்டுகொள்ளாது எனவும் கூறிக்கொண்டிருந்தார்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்த எனக்கு அங்கு நடந்தவை யாவும் அதிர்ச்சியை தந்தன. அந்த கூட்டத்தில் எனக்கு தோன்றியவற்றை பேச எனக்கு வாய் வரவில்லை. ஏதா நான்கைந்து பேர் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டு, கூட்டத்தில் முடிவு எடுத்ததாக கூறிக்கொண்டார்கள். அவர்கள் கையில் கோடி கோடியாக காசு வைத்திருப்பவர்களாம், இதெல்லாம் ஒரு கூட்டமா? எல்லோருக்கும் பேச வாய்ப்பு தரவில்லை. இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்றார். என்ன தான் முனைவர் படிப்புக்காக நான் படித்து கொண்டிருந்தாலும், நாங்கள் அவர்களுடன் ஒப்பிடப்பட்டால், ஏழை தான்.

என்ன கொடுமை சார் இது! என்று எனக்குள் நானே புலம்பி கொண்டிருந்தேன், என் அம்மாவிடம் மட்டும் தான் என் எண்ணங்களை என்னால் பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு காக்னிட்டிவ் டிசோனன்ஸ்-ல் சிக்கி கொண்டதாக உணர்ந்தேன். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. விதம் விதமாக கனவுகள், பலி கொடுக்க  நானே தேர்ந்தெடுக்கப்பட்டது போலவும், என்னை ஆடு மாதிரி மஞ்சள் தண்ணீர் ஊற்றி அழைத்து செல்வது போலவும் கனவு கண்டேன். நான் இறந்தே விட்டதாக கூட எனக்கு தோன்றியது. பிறகு கனவிவிலிருந்து விழித்துக்கொண்ட பிறகே அது கனவு என எனக்கு நினைவு தெரிந்தது.

உயிர் பலி யாரை கொடுப்பது என முடிவு செய்யும் நாளும் வந்தது, வயது வித்யாசமின்றி எல்லோர் பெயரும் சீட்டில் எழுதப்பட்டதாம். ஒரு குழந்தை சீட்டு எடுப்பதற்காக அழைக்கப்பட்டது. ஒரு சீட்டு எடுக்கப்பட்டது, எல்லோரும் வேண்டிக்கொண்டார்கள், தனது பெயரோ, தனது குடும்பத்தினர் பெயரோ வந்து விடக்கூடாது என. சீட்டில் இருக்கும் பெயர் படிக்கப்பட்டது. எங்கள் தங்கம் சித்தப்பாவின் பெயர் வந்தது.

 தங்கம் சித்தப்பா ஒன்றும் பெரிய ஆள் இல்லை.தண்ணியடித்து கொண்டும், எங்கள் சொந்தக்காரர்களின் பலரை ஏமாற்றிக்கொண்டும் திரிந்தவர். அவர் பெயர் வந்ததில், வருத்தப்பட்ட மிகச்சிலரில் நானும் ஒருவன். என் பெரியப்பா செய்வதறியாது திகைத்தார். என் பெரியப்பா கையை கசக்கி கொண்டு நிற்பதை பார்த்த, மற்ற பெரியவர்கள் “சாமி சொல்லி விட்டது, தங்கத்தை பலி கொடுத்தாக வேண்டும்” என்று சொல்லி விட்டு, கூட்டம் கலைக்கப்பட்டது. நல்ல வேளையாக தங்கம் சித்தப்பாவும், அவர்களது குடும்பத்தாரும் அந்த கூட்டத்தில் இருக்கவில்லை. தங்கம் சித்தப்பா இப்போது எங்காவது ஒரு டாஸ்மாக் கடையில் தண்ணியடித்துகொண்டோ, யாருடனாவது வாய்த்தகறாரில் ஈடுபட்டு கொண்டிருக்க வேண்டும். சித்தி மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் பையன் டுடோரியலில் 10வது படித்து கொண்டிருந்தான்.

உயிர் பலியே கொடுப்பது தவறு என நினைப்பவன் நான், அதிலும் ஒரு மனித உயிர் பலியா? முடியவே முடியாது என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். போலிஸுக்கு சென்று விடலாம் என்றால், என் அம்மா சொன்னது ஞாபகம் வந்தது, போலீஸ் நான் சொல்வதை நம்ப போவதில்லை. அப்படியே நான் சொன்னதை கேட்டுக்கொண்டாலும், உடனே ஃபோன் போட்டு என் பெரியப்பாவிடம் சொல்லிவிடுவார்கள்.

சரி, எதுவும் வேண்டாம், ஏதாவது காரணம் சொல்லிவிட்டு சென்னைக்கே வந்துவிடலாமே என்று தோன்றியது. அதற்கு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் போதே, யாரோ ஒருவர் சொல்ல கேட்டேன், “காப்பு கட்டிருக்கு, யாரும் ஊரை விட்டு வெளிய போகக்கூடாது” அடப்பாவிங்களா, இதற்கும் வச்சிடீங்களா ஆப்பு என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

எல்லாம் கடவுள் தான் பார்த்துக்கொள்ள வேண்டுமென அவர் மேல் பாரத்தை போட்டு விட்டு, என் லேப் டாப்பை நோண்டிக்கொண்டிருந்தேன். இப்படி அப்படி என்று நாட்கள் செல்ல, கிளைமாக்ஸ் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. பலி கொடுக்க வேண்டிய அந்த இரவும் வந்தது.

யாரும் தங்கம் சித்தப்பாவுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் எதுவும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் போட்டிருந்தார்கள். அதனால் சித்தியும், என் தம்பியும் அப்பாவிகளாய் சாமி கும்பிட வந்திருந்தார்கள். சித்தப்பாவை தான் காணவில்லை. அவர் தண்ணியடித்து விட்டு, ஏதாவது ரோட்டில் பிணம் போல் படுத்திருந்தால் கூட பரவாயில்லை, அவர் இங்கு வந்து விட கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன். பூசாரி எங்கே பலி கொடுக்க ஆடு என்று சூசமாக கேட்ட போது தான், என் சித்தியிடம் ரொம்ப அக்கறையாய் விசாரிப்பது போல், ஒரு பெரியவர் “தங்கம் எங்கம்மா?, சாமி கும்பிடுவதற்கு வராமல் போனால் சாமி குத்தம் ஆகி விடும் என்று அவருக்கு தெரியாதாமா?” என்று என் சித்தியிடம் விசாரிக்க தொடங்கினார். மொபைலில் தொடர்பு கொண்டால், ரிங் போய்க்கொண்டே இருந்தது. அவர் எடுக்கவே இல்லை. நல்ல வேளை என்று நான் நினைத்துக்கொண்டேன். அவருக்காக எல்லாரும் காத்துக்கொண்டிருக்க, பலருக்கு தூக்கம் வந்து விட்டது. எப்போதுமே இப்படித்தான், ஆண் பெரியவர்கள் எல்லோரும் கண் விழித்து ஆடு வெட்டுவதை கவனிப்பார்கள். குழந்தைகளும் பெண்களும் போய் தூங்கி விடுவார்கள். அதே போல் தான் இன்றும் நடந்தது. என் சித்தியும், தம்பியும் தூங்க போய் விட்டார்கள்.

பெரியவர்கள் பலரும் பல யோசனையில் இருக்க, திடீரென கருப்பசாமி வந்தது. “எங்கடா என் பலி?” என்று கேட்டது. “இதோ சீக்கிரம் தந்துவிடலாம், கொஞ்சம் பொறுங்கள்” என்று பூசாரி சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல, கருப்ப சாமி இன்னும் உக்கிரமாக கத்த ஆரம்பித்து விட்டது. என்ன தான் நடக்க போகிறது என்று நானும் ஆவலாய் காத்துக்கொண்டிருந்தேன்.
சித்தப்பாவுக்கு பலரும் ஃபோன் போட, அவரும் ஃபோனை எடுப்பதாய் தெரியவில்லை. ரொம்ப நேரம் ஆகியதால், கருப்பசாமியிடம் பெரியவர்கள் பேரம் பேச ஆரம்பித்தார்கள். மனித உயிருக்கு பதில், நான்கு ஆடுகள் தருவதாக என் பெரியப்பா சொல்ல, கருப்பசாமி கொஞ்ச நேரம் யோசித்து, சரி என ஒரு வழியாய் சொன்னது. அப்பாடா என்று இருந்தது எனக்கு! உடனே 4 ஆடுகள் எங்கிருந்தோ பிடித்துவரப்பட்டு பலி கொடுக்கப்பட்டது.

என் அம்மாவிடம் கேட்கிறேன், “என்ன இது கருப்பசாமி மாற்றி மாற்றி பேசுகிறது? உண்மையிலேயே கருப்பசாமி தான் அப்போதும், இப்போதும் வந்ததா?, 4 ஆடுகள் நடுராத்திரியில் எப்படி பிடித்து வரப்பட்டன?, சாமி குத்தம் பற்றி தெரிந்தும் சித்தப்பா ஏன் வரவில்லை?” என் அம்மா எந்த கேள்விக்கும் பதில் தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார், நானும் தான்!

No comments:

Post a Comment