Sunday, September 16, 2012

பிரேக்-அப் –க்கு பிறகும் வாழ்க்கை உண்டு (மொழி பெயர்ப்பு)


“காதலில் விழுவது சகிக்கமுடியாத அளவுக்கு எளிது. அதே நேரத்தில், காதலில் இருந்து வெளியில் சென்று விழுவது எளிதில் சகிக்கமுடியாதது”
 - பெஸ் மயர்சன்


காதலில் எழும் பிரச்சனைகளை சமாளிப்பது கடினம் என்றால் அதை விட கடினம், தன் காதல் உறவு முடிவுக்கு வருவதை வேறு வழியில்லாமல் கண் கூடாக பார்த்து கொண்டிருப்பது. காதல் என்பது இருவரை இணைக்கசெய்வது, அதுவே பிரிவை உண்டு செய்யும் போது, அதனை எதிர்கொள்வது கஷ்டம் தான். தன் காதலை இழந்து விடுவோமோ என்ற பயம் சகித்துக்கொள்ள முடியாதது. எது எப்படி இருந்தாலும், கடைசியில் உண்மை என நமக்கு தெரியவருவது ஒன்று தான் - “எதுவும் நிரந்தரமானதல்ல!”

பிரேக்-அப் என்பது இறப்பை போன்றதொரு வலியை கொடுக்கவல்லது. ஆகவே, இறப்பை எதிர்கொள்வதை புரிந்து கொள்ள உளவியலாளர்களால் பயன்படுத்தப்படும் 'சோகத்தின் நிலைகள்' எனும் கோட்பாடு  பிரேக்-அப் –க்கும் பொருந்தும்.

இந்த சோகத்தின் நிலைகள் என்ற கோட்பாட்டின் படி, முதலில் வருவது, அதிர்ச்சியும், நம்ப முடியாமல் இருத்தலும். அதற்கு பிறகு பேரம் பேசி பார்க்க முடியுமா என்ற நிலை. இந்த நிலையில், எவ்வாறெல்லாம் அவர்களின் காதல் உறவு சுபிட்சமாக இருந்தது, சந்தோஷத்தை தந்தது என ஒருவருக்கு மற்றொருவர் கூறி சமாதானப்படுத்துதல் நடக்கலாம் அதனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். அதற்கு பிறகு, கோபம், ஏற்றுக்கொள்ள முடியாமை, மனச்சோர்வு ஆகிய நிலைகளை கடந்து, பிரேக்-அப்  நடந்திருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கடைசி நிலையை ஒருவர் அடையக்கூடும். அந்த நிலை உணர்வுகளிலேயே மிகக்கடுமையானது, வலிதரக்கூடியது.

பிரேக்-அப் -களை கடந்து வந்திருப்பவர்களுக்கு தெரியும், பிரேக் அப் என்பது ஒருவரின் வாழ்க்கையிலேயே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியை தரும் என்பதென! பிரேக் அப் என்ற ஒரு சூழ்நிலையில் ஆன்மாவானது சுக்குநூறாக உடைந்து போன்று இருக்கும் என எனக்கு தோன்றுகிறது.

எப்படி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது? இந்த கேள்விக்கு “தண்ணியடிப்பது முதல் பிரார்த்தனை செய்வது வரை” பல விதமான பதில்களை  நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சோகத்திலிருந்து வெளிவருவதென்பது தனி மனிதன் சார்ந்தது, அந்தரங்கமானது, ஆகவே இதில் எந்த ஒரு ஃபார்முலாவும் இல்லை, எனினும் இந்த கடினமான சூழலை எளிதாக்க அறிவுப்பூர்வமான சில வழிகள் இதோ இங்கே!

சோகத்தை வெளிப்படுத்த உங்களை அனுமதியுங்கள்: பலர் தங்களை சோகமாக இருக்கவே அனுமதிப்பதில்லை. நரகத்தை போன்று அந்த சோகம் கஷ்டத்தை கொடுக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. உங்கள் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சரியாக கண்டுகொள்ளுங்கள், மிக முக்கியமாக அவற்றை உங்களுடையது என ஏற்றுக்கொள்ளுங்கள். ஒர் அதீத மனிதனாக உங்கள் உணர்வுகளை எதிர்த்து பலம் காட்ட அவசியம் எதுவுமில்லை. அந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் பலம், அவற்றை விட்டு விலகி ஓடுவதற்கு அல்ல. அதிகமாக சோகம் இருந்தால், அழுதுவிடுங்கள்.

உங்களுக்கு மரியாதை கொடுங்கள்: உறவு உடைந்து போனதில் உங்களுக்கும் ஒரு பகுதி பங்கு உண்டு, முழுமையாக அல்ல என்பதை உங்கள் சிந்தனை ஓட்டத்தில் இருத்தி ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு உறவை கட்டுவதற்கும், உடைப்பதற்கும் தேவையானவர்கள் இருவர் அன்றோ! உங்கள் வாழ்க்கையில் ‘அவர்/அவள்’ இல்லையென உங்கள் உடலை வருத்திக்கொள்ளாதீர்கள். உணவு, மது, போதைப்பொருட்கள், மாத்திரைகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொண்டு உங்கள் உடலையும் மனதையும் வருத்திக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதை நிமித்தம் தற்காயப்படுத்துதல் (அ) தற்கொலை எண்ணங்களை வர விடாதீர்கள். உங்கள் காதல் வாழ்வில், மரியாதையின்மை இருந்திருந்தால், உங்கள் ‘முன்னாள்’ போல இல்லாது உங்களுக்கு நீங்களாவது மரியாதை கொடுங்கள்.

உதவி தேடுங்கள்: தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பது வலிதரக்கூடியது தான். எல்லோரும் எப்போதும் ஜாலியான மூடில் இருக்க வேண்டும் என்று இல்லை; சில நேரங்களில் மனப்பிரச்சனைகளை சரி செய்து கொள்ள, மற்றவர்களிடமிருந்து விலகி, தனிமையை நாடவேண்டி இருக்கலாம். எனினும், உங்கள் உணர்வுகள், கவலைகள், நம்பிக்கைகளை பற்றி பேச உங்களுக்கு நெருக்கமானவர்களின் அல்லது உளவியல் ஆலோசகரின் உதவியை நாடுங்கள். உங்களின் நெருக்கமானவர்கள், நீங்கள் குணமாக உங்களுக்கு உதவி செய்யட்டும். உங்கள் உணர்வுகளும், உணர்வுகளும் எந்த தடங்கலும் இல்லாமல் வெளியில் வரட்டும்.

அர்த்தத்தை கண்டுபிடியுங்கள்: காதல் உறவு என்பது உங்கள் வாழ்க்கையின் ஒரே ஒரு பகுதியே. உங்கள் வாழ்க்கையின் மற்ற பகுதிகளான கல்வி/வேலை, நண்பர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், பொழுதுபோக்குகள், சமயம்/ஆன்மீகம், சமூக செயல்பாடுகளில் பங்கெடுத்தல் ஆகியவற்றில் அர்த்தம் காண முயலுங்கள். இவற்றில் உங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியுமா என பாருங்கள்.

உங்களுக்கு  நீங்களே கொஞ்சம் இடைவெளி கொடுங்கள்: மற்றவர்கள் உங்களை செய்ய சொல்வதையெல்லாம் செய்ய உங்களை கட்டாயப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் படுக்கையறையில் அழ வேண்டும் என்பது போல் தோன்றினால், அப்படியே செய்யுங்கள். ஒரு இடத்தில் தனியாக இருக்க வேண்டும் என்று  நீங்கள் விருப்பப்பட்டால், தாரளமாக அவ்வாறே செய்யுங்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக பிரேக்-அப் சோகத்தை கடந்து வருவதில்லை.

சமயம்/ஆன்மீகத்தில் ஈடுபட முயற்சிக்கலாம்: சிலருக்கு, பிரேக்-அப் போன்ற சோகமான நிகழ்வுகள் வாழ்வின் ஒரு திருப்பு முனையாக அமையும். ஆன்மீக புத்தங்கள் படித்தல் போன்ற சிறு சிறு ஆன்மீக விஷயங்கள் தொடங்லாம். எழுதுதல், படம் வரைதல் போன்ற விஷயங்களும், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய பரிமாணங்களை கொடுக்கலாம்.

புதிதாக ஏதாவது ஒன்றை செய்யுங்கள்: நீங்கள் செய்யும் புதிய விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் தரலாம். அந்த புதியதொரு விஷயம் ஒரு பொழுதுபோக்காகவோ, உடற்பயிற்சியாகவோ, பயணமாகவோ, சந்திப்பாகவோ அல்லது உங்களுக்கு தோன்றும் ஏதோ ஒரு புதிய விஷயமாக  இருக்கலாம்

உங்களை சோகம் கொள்ள செய்பவர்களை தவிர்த்து விடுங்கள்:  சோகத்தை சில நேரங்களில், சிலரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, இரண்டு மடங்காகிவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு தோள் கொடுக்கும் நண்பர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் நீங்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறீர்கள் என்பதை ஞாபகபப்படுத்துபவர்கள், நீங்கள் எப்படி அவற்றை தவிர்த்திருக்கலாம் என்று உங்களுக்கு அறிவுரை என்ற பெயரில் உங்களை சோகத்தை ஆழ்த்த நினைப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை தவிர்த்து விடுங்கள். எப்படியும் அது முடிந்து விட்டது, அதை விட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கோபப்படலாம்: ஆமாம், கோபம் என்பதும் உங்களை சோகத்திலிருந்து மீள சில நேரங்களில் உதவலாம். எதிராளியின் எதிர்மறையான விஷயங்கள், எதிராளியின் தரப்பில் உறவு முறிந்து போனதற்கான காரணங்கள், அவரின் தவறுகள் ஆகியவற்றை உற்று நோக்குங்கள், அவர் மீது கோபம் கொள்ளுங்கள். நீங்கள் ஓரளவுக்கு சோகத்திலிருந்து வெளிவந்த பின், உங்கள் மேல் இருந்த தவறுகளை பற்றி சிந்திக்க தொடங்கலாம்.
 
அன்பாக இருங்கள்: உங்கள் மீது  நீங்களே அன்பு கொள்ள வேண்டும், நீங்கள் இப்படித்தான் அல்லது அப்படித்தான் என்று எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள். பிரேக்-அப் க்கு பிறகு வரும் சில மாதங்கள் வலியாக இருக்கும், என்றும் நிற்காத ரோலர் கோஸ்டர் போலவும் உங்கள் உணர்வுகள் பந்தாடப்படும்.  நீங்கள் அப்படி இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள், உடனடியாக 'சரியாகி' விட வேண்டுமென்று முயற்சி செய்யாதீர்கள், அப்படி முயற்சி செய்வது, இந்த சோகத்திலிருந்து நீங்கள் வெளிவருவதை இன்னும் கடினமாகவே ஆக்கும்.  நீங்கள் இப்படி இருப்பதில் தவறொன்றும் இல்லை.
பிரேக்-அப் பால் விளையும் சோகம் கொஞ்சம் சிக்கலானது,  நீங்கள் அதனை எதிர்கொண்டு வெளியில் வர வேண்டும். ஒவ்வாருவரும், வேவ்வேறு நிலைகளில் வலியை அனுபவிப்பார்கள். எனவே உங்கள் வலியை சிறிதென்றோ, பெரிதென்றோ நீங்களாக  நினைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி, உங்கள் மேல் நீங்கள் அன்பு கொள்வது தான். ஒரு வேளை நீங்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, தினசரி வேலைகளை பார்க்க முடியவில்லை என்பது போல் இருந்தால், உளவியல் ஆலோசகரை சந்திக்க தயங்காதீர்கள்.

(திருமதி. மான்ஸி, கொல்கத்தாவை சார்ந்த உளவியல் ஆலோசகரால் எழுதப்பட்டு, ஆகஸ்ட் 2 2011 தி ஹிந்து, சென்னை பதிப்பில் வெளிவந்த கட்டுரையின் மொழி பெயர்ப்பு. படித்த போதே, மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமென நினைத்தேன். இப்போது தான் முடிந்தது. ஆங்கில பதிப்பை படிக்க http://www.thehindu.com/arts/magazine/article2324720.ece)

No comments:

Post a Comment