Saturday, January 19, 2013

திருமதி. சொஹைலாவின் 2013 ஆம் ஆண்டு கட்டுரை


வன்புணர்ச்சி சம்பவங்களை சரியான பார்வையில் பார்க்க உதவும் விதமாக, திருமதி. சொஹைலா அவர்களின் 1983-ம் ஆண்டு கட்டுரையை (http://thamizhvalaipoo.blogspot.in/2013/01/1983.html) ஏற்கனவே மொழி பெயர்த்து அளித்திருந்தேன். இதோ 2013 ஆண்டு கட்டுரையின் மொழிபெயர்ப்பு:


33 வருடங்களுக்கு முன்பாக, என் 17 வயதில் பம்பாயில் நான் வாழ்ந்து  கொண்டிருந்த போது, ஒரு கும்பலால் நான் வன்புணர்ச்சிக்கு ஆளாகி சாவின் விளிம்பை சந்தித்து வாழ வாய்ப்பு கொடுக்கப்பட்டேன். அதற்கு பிறகு, 3 வருடங்கள் கழித்து, வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களின் அமைதியையும், வன்புணர்ச்சி பற்றி மக்களுக்கு இருந்த தவறாக கருத்துக்களையும் தகர்க்க வேண்டி, ஒரு பெண்ணிய இதழில் என் உண்மையான பெயரிலேயே, என்னுடைய அனுபவங்களை விவரித்து ஒரு தீவிரமான கட்டுரையை எழுதினேன். அந்த கட்டுரை பெண்கள் மத்தியிலும், என் குடும்பத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக விரைவில் மறக்கப்பட்டு போனது. போன வாரம், என் மின்னஞ்சல்களை பார்க்கையில், மீண்டும் அந்த பரபரப்பு எழுந்து விட்டதை என்னால் உணர முடிந்தது. டெல்லியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு இறந்து போன இளம்பெண்ணுக்காக நடத்திய போராட்டங்களின் ஒரு பகுதியாக என்னுடைய அந்தக் கட்டுரையை யாரோ இணையத்தில் பதிவேற்றம் செய்ய, அது பலரை சென்றடைந்தது. அப்போதிலிருந்து, எனக்கு ஆதரவு தந்து பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வன்புணர்ச்சியில் குறியீடாக இருப்பதென்பது எனக்கு சந்தோஷம் தரவில்லை. நான் ஒன்றும் இதில் வல்லுநர் கிடையாது,  நான் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் வன்புணர்ச்சி ஆளாகி இறந்து போன இளம்பெண்ணாலும், மற்ற வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களாலும் செய்ய முடியாத ஒன்றை நான் செய்கிறேன் என்றால் அது, என் கதையை உங்களுக்கு தொடர்ந்து சொல்வதுதான்.

அந்த இரவில் வாழ நான் போராடியபோது, எதற்காக நான் போராடிக் கொண்டிருந்தேன் என்று எனக்கே சரியாய் தெரியாது என்றுதான் சொல்லவேண்டும். என் வீட்டுக்கு அருகில் இருந்த மலைக்கு நானும் என் நண்பனும் சென்றிருந்தோம், நான்கு ஆயுதம் வைத்திருந்த ஆண்கள் எங்களை பிடித்து, ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஏறவைத்து, என்னை அங்கு பல மணி நேரத்திற்கு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, எங்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தினர். எங்களை கொல்வதா வேண்டாமா என்று அவர்களுக்குள் விவாதம் செய்து, கடைசியில் போகட்டும் என விட்டுவிட்டனர்.

17 வயதில் நான் ஒரு குழந்தைதான், வாழ்க்கை எனக்கு உயிர் பிழைக்க வாய்ப்பு அளித்தது. காயப்பட்டு, கடும் மன வேதனைக்கு உள்ளாகி, தட்டுத்தடுமாறி வீடு வந்து என் அன்பான குடும்பத்திடம் சேர்ந்தேன். அவர்கள் எனக்கு அளித்த முழு ஆதரவுடன், இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என்னிடம் உண்மையான அன்பு கொண்டவரை நான் கண்டுகொண்டேன், புத்தங்கள் எழுதினேன், காட்டில் வாழும் ஒரு கங்காருவை பார்த்தேன், இரயில்களை நழுவ விட்டு பேருந்துகளை பிடித்தேன், ஒரு புத்திசாலியான குழந்தையை பெற்றெடுத்தேன், நூற்றாண்டு மாறியது, எனக்கு முதல் நரை முடி தோன்றியது.

ஆனால் என்னைப்போல இவற்றை மற்ற பலர் அனுபவிக்க முடியாமா என்று கேட்டால், அது முடியாது. எல்லாம் நன்றாக ஆகிக்கொண்டிருப்பதை அவர்களால் பார்க்க முடியாது.

நிச்சயமாக ஒரு நாள், அந்த குறிப்பிட்ட கெட்ட நிகழ்வு உங்கள் வாழ்க்கையின் மையமாக இல்லாது போகும். அந்த நாளில், ஒவ்வொரு ஆண் கூட்டமும் உங்களை தாக்கும் என்ற என்ற நினைப்பு மறைந்து போகும். அந்த நாளில், கழுத்து நெறிக்கப்பட்ட காட்சிகள் தோன்றாது  நீங்கள் சால்வையை கழுத்தை சுற்றி சந்தோஷமாக போட்டுக்கொள்வீர்கள். அந்த நாள் முதல், நீங்கள் பயந்தவராக இருக்கமாட்டீர்கள்.

வன்புணர்ச்சி கொடூரமானதுதான். ஆனால் அதன் கொடூரத்திற்கு காரணங்கள் ஒன்றும் இந்திய பெண்களின் தலையில் ஓட்டை போட்டு துளைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் அல்ல.  நீங்கள் ஆக்கிரமிக்கபட்டீர்கள், பயமுறுத்தப்பட்டீர்கள், உங்கள் உடல் வேறு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் போனது, மிகவும் அந்தரங்கமாக நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்கள். இந்த காரணங்களுக்காகத்தான் அதனை நான் கொடூரமானது என்கிறேன். உங்கள் “நல்லொழுக்கம்” கெட்டுப்போய் விட்டதற்காகவோ, உங்கள் தந்தையும், சகோதரர்களும் கொச்சைப்படுத்தப்பட்டார்கள் என்பதற்காகவோ அதை நான் கொடூரம் என்று சொல்லவில்லை. ஆண்களின் புத்திசாலித்தனம் என்னவோ அவர்களின் பாலுறுப்பில்தான் இருக்கிறது என்ற கருத்தை நான் நிராகரிப்பதை போல என் பாலுறுப்பிலேயே என் நல்லொழுக்கம் குடி கொண்டிருக்கிறது என்ற கருத்தையும் நான் நிராகரிக்கிறேன்.

இந்த சமன்பாட்டிலிருந்து, ‘கௌரவத்தை’ நீக்கி விட்டாலும் கூட, வன்புணர்ச்சி என்பது கொடூரமானதே! ஏனெனில் அது ஓர் அந்தரங்கமான பயங்கரவாதம்; ஒன்றும் சமுதாய பயங்கரவாதம் இல்லை. நம்மால் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டுமோ அவற்றை கொடுக்க முடியும், அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள அவர்களுக்கு தேவை நமது அன்பும் ஆதரவுமே! அவர்கள் எப்படி குற்ற உணர்வையும், அவமானத்தையும் உணர வேண்டும் என்ற வியாக்கியானங்கள் அல்ல!

நான் தாக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அருகிலுள்ள ஒரு புறநகர் பகுதியில் வன்புணர்ச்சிக்கு ஆளான ஒரு பெண்ணைப்பற்றி கேள்விப்பட்டேன். அவள் வீட்டுக்கு வந்தாள், சமையலறைக்குள் சென்றாள், தீக்குளித்து இறந்து போனாள். என்னிடம் இந்த கதையை சொல்லியவர், அவளது கணவனின் “கௌரவத்தை” காப்பாற்ற அவள் இவ்வாறு செய்தாள் என்று அவளை மெச்சினார். ‘கௌரவம்’ என்று அவர்கள் சொல்வது எனக்கு என்றென்றும் புரியாமல் இருப்பதற்கு, நான் என் பெற்றோர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
சட்டத்தால் வன்புணர்ச்சி கொள்பவர்களுக்கு தண்டனை அளிக்க முடியும். ஆனால் வன்புணர்ச்சிக்கு ஆளானவருக்கு, இந்த சமுதாயமும், குடும்பங்களுமே அன்பும் ஆதரவும் அளிக்க முடியும். எப்படி ஒரு பதின்வயது பெண், அவளது குடும்பத்தின் ஆதரவு இல்லாது அவளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியும்? வன்புணர்ச்சிக்கு ஆளானதால், தன் மனைவி கொடூரமான துன்புறுத்தப்பட்டாள் என்பதனை காட்டிலும், அந்த கணவன் தனக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதினால் எப்படி அந்த மனைவி தன்னை தாக்கியவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த முடியும்?

நான் 17 வயதாக இருக்கும் போது, அவ்வாறு துன்புறுத்தப்பட்டதையே என் வாழ்வில் மிக கொடூரமான விஷயம் என்று கருதினேன். என் 49வது வயதில், அது தவறு என உணர்கிறேன்: மிகக்கொடூரமான விஷயம் என்று இப்போது எனக்கு தோன்றுவது என்னவென்றால், என் 11 வயது குழந்தை அவ்வாறு துன்புறுத்தப்பட்டால் என்ன ஆகும் என்பது. அதற்கு காரணம், என் குடும்ப கௌரவம் இல்லை, இந்த உலகத்தின் மேல் அவள் கொண்ட நம்பிக்கையை அவள் இழந்து போய் விடுவாளே என்பதுதான். நான் என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், 17 வயதான எனக்கொன்றும் அதிகமான அன்பும், ஆதரவும் தேவைப்படவில்லை, என் பெற்றோர்களுக்கே அதிகமான அன்பும் ஆதரவும் தேவைப்பட்டது. இந்த உலகத்தின் மேல் நான் கொண்ட நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்து போய் கிடக்கையில், அங்கும் இங்கும் கிடந்த துண்டுகளை அவர்கள்தான் ஒன்றாக சேர்த்து எனக்கு நம்பிக்கையூட்டினார்கள். 
இங்குதான் நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. நம்மில் அடுத்த தலைமுறையை உருவாக்குபவர்கள், தங்கள் குழந்தைகளை சுதந்திரமான, கண்ணியமான குடிமக்களாக இருக்க கற்றுத்தர வேண்டும். பெண்களை துன்புறுத்தும் ஆண்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நான் 17 வயதாக இருக்கும் போது, இந்த சில வாரங்களில் நடப்பது போல வன்புணர்ச்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்துவதையெல்லாம் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது. இது ஒரு நல்ல தொடக்கம், எனினும் நாம் செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. ஆணாதிக்கம், சாதி, சமூக மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை விரிவாக கட்ட  நாம் பல தலைமுறைகள் எடுத்துக்கொண்டோம். அவையே இன்று இந்த அளவுக்கு துன்புறுத்தல்களை வளரவிட்டிருக்கின்றன.

வன்புணர்ச்சி என்பது ஒன்றும், வானிலையைப்போல தவிர்க்க முடியாதது அல்ல! ஒன்றுக்கும் உதவாத ‘கௌரவம்’, ‘நல்லொழுக்கம்’ ஆகியவற்றையும், “பெண்கள்தான் அப்படி உடை அணிந்து, கவர்ச்சி காட்டி ஆண்களை வன்புணர்ச்சி கொள்ளச்செய்கிறார்கள்”, “இப்படி பெண்கள் நடந்து கொண்டால், ஆண்கள் என்ன செய்வார்கள், பாவம்” என்பது போன்ற கருத்துக்களையும் தள்ளி வைத்து விட்டு, வன்புணர்ச்சி சம்பவங்கள் நடப்பதற்கான பொறுப்பாளிகள் யார் என்று ஆராய்ந்தால், பெண்களை துன்புறுத்தும் அந்த குறிப்பிட்ட ஆண்களும், அவர்களை அவ்வாறு செய்ய விட்டுவிட்டு, “நமக்கென்ன” என்ற உணர்வில் வன்புணர்ச்சிக்கு ஆளானவரை கைகாட்டி பழிசுமத்தும் இந்த சமுதாயத்தில் வாழும் நாமுமே என்ற பதில் கிடைக்கும்.

No comments:

Post a Comment