மனநலத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி?
உடல் நலத்திற்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கும் நாம், மனநலத்திற்கு அவ்வளவு தூரம் முக்கியத்துவம்
கொடுப்பதில்லை. அறிவியற்பூர்வமாக பார்த்தால், உடல் நலமும் மனநலமும் ஒன்றோடு ஒன்று
தொடர்பு கொண்டவை. மனதில் உள்ள பிரச்சனைகள் உடலிலும், உடலிலுள்ள பிரச்சனைகள்
மனதிலும் பிரதிபலிக்கின்றன. எனவே மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
இருப்பது, உண்மையில் உடல் நலனையும் பாதிக்கிறது.
மேலும் நமது செயல்திறன் என்பது அதிகமாக மனநலத்தை
சார்ந்தே இருக்கிறது. 2 வாரங்களுக்கு மேல் இருக்கும் மனப்பிரச்சனைகள், மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனநோய்களுக்கு நம்மை இட்டுச்செல்லும்.
அல்சர், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் என பல வகையான நோய்களுக்கு மனதில் ஏற்படும்
பிரச்சனைகளும் காரணங்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம், ஒருவர் நல்ல மனநலத்துடன்
இருக்கிறார் என்பதை பின்வரும் விதிகளை
கொண்டு வரையறுக்கிறது.
1. தனது திறன்கள் என்னென்ன என்பதை உணர்ந்திருக்க வேண்டும்
2. தினசரி பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்
3. செய்யும் வேலைகளை திருப்தியாக சிறப்பாக செய்ய வேண்டும்
4. தனது சமுதாயத்திற்கென சில வகைகளிளாவது பங்களிப்பு செய்ய
வேண்டும்
வாழ்வில் ஏன் பிரச்சனைகள் ஏற்படுகின்றன?
மனநலத்தை பாதிக்கும்
வாழ்க்கை பிரச்சனைகளுக்கான காரணங்களை பல உளவியல் கொள்கைகள் விவரிக்கின்றன. சில முக்கியமான
சில காரணங்கள் பின்வருமாறு,
நிகழ்காலத்தில் வாழாமை: கடந்த காலத்தை அல்லது எதிர்காலத்தை பற்றிய யோசனைகளிலேயே
நிகழ்காலத்தில் வாழ தவறிவிடுவது
வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள்: கோபம், விரக்தி, அன்பு, குற்ற உணர்வு போன்றவை வெளிப்படுத்தப்படாத
உணர்ச்சிகள் பிரச்சனைகளை தீர்க்கப்படுவதை தடுக்கின்றன.
தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளாமை: தன்னுடைய தோற்றம், திறன்கள், பலவீனங்களை தன்னுடையது என
ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.
வாழ்க்கையிலும், செய்யும் செயல்களிலும் உரிய அர்த்தம் இல்லாமை: எதற்காக வாழ்கிறோம், எதற்காக குறிப்பிட்ட வேலைகளை
செய்கிறோம் என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருப்பது
பிரச்சனையை மையமாக கொண்டு சிந்தித்தல்: பிரச்சனைக்குள்ளேயே ஆழ்ந்து, பிரச்சனைக்கான காரணங்களை
ஆராய்வதிலேயே ஆற்றலை செலவழித்து, தீர்வினை அடையாமல் இருப்பது.
சூழ்நிலை/கடந்த கால/பழக்கங்களுக்கு கைதிகளாக இருப்பது: இப்படியே இருந்துவிட்டேன், பழக்கமாகி விட்ட்து, என்னால்
மாற்றிக்கொள்ள முடியாது என்று சூழ்நிலைகளின் மீதும், கடந்தகாலத்தின் மீதும் பழி
போடுவது.
தன்னுடைய எதிர்பார்ப்புகளுக்கும், உலகின் உண்மை நிலைக்கும் இடைய இருக்கும் இடைவெளி
தான் இருக்க நினைக்கும் சுயத்திற்கும், தற்போது உண்மையில் இருக்கும் சுயத்திற்கும் உள்ள
வேறுபாடு
உங்கள் வாழ்வில் உள்ள
பிரச்சனைகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ளவை காரணங்களா என்று பாருங்கள். ஆம் எனில்
எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி சிந்தியுங்கள்.
நல்ல முறையில் உங்கள் மனநலத்தை பாதுகாத்துக் கொள்ள, உங்களது
பிரச்சனைகளை நலம்விரும்பிகளிடம் அல்லது டைரியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். டைரியை யாராவது படித்து விடுவார்கள் என்று
நினைத்தீர்களானால், ஒரு காகிதத்தில் எழுதி அதனை கிழித்து போட்டு விடுங்கள்.
பகிர்ந்து கொண்ட பிறகு கிடைக்கும் அமைதியான மனநிலையில், பிரச்சனைகளுக்கான
தீர்வினைப் பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளிலும், பொழுதுபோக்குகளுக்கென நேரம்
ஒதுக்கி மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தலும், நீங்கள் உங்களுடன் பேச நேரம் ஒதுக்குதலும்
உங்கள் மனநலத்தை பராமரிக்க உதவும். ஒரு வேளை பிரச்சனைகளை நீங்களே தீர்க்க முடியாமல் போனால், ஒரு மனநல
ஆலோசகரை சந்திப்பதே நலம். வாழ்க மனநலனுடன்!
Published in In & Out Chennai, To read, http://4.bp.blogspot.com/
No comments:
Post a Comment