Tuesday, October 4, 2011

தமிழக அரசு சமச்சீர்கல்வியில் மதிப்பெண்களுக்கு பதிலாக ‘கிரேடுகள்’!!


வெகு காலமாக குமாஸ்தாக்களை உருவாக்க ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்த கல்வி முறை மாற்றப்பட வேண்டும். பல்முனை அறிவுத்திறன், ஆக்கத்திறன், சிந்திக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் வகையில் நம் கல்வி முறையில் பல சீரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று உளவியலாளர்களும், கல்வியாளர்களும் பேசி வருகிறார்கள்.

அதன் முதற்படியாக சமச்சீர் கல்வி முறையும், இரண்டாவது படியாக, முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி ஒவ்வொரு பருவத்தின் போதும் அவ்வபோது ஆசிரியர்களால் பல்வேறு திறன்களில் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள். அது போக பருவத்தின் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள். இரண்டு வகையான மதிப்பீடுகளிலும், மதிப்பெண்களுக்கு பதிலாக ‘கிரேடுகள்’ வழங்கப்படும்.

கல்வி கற்கும் முறை மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். ஆகவே பாடங்கள் மற்றும் பாடங்கள் அல்லாத உடற்கல்வி, ஓவியம் , பாட்டு, நடனம் போன்றவற்றையும் சேர்த்து மதிப்பிடும் வகையில் இந்த தொடர் மதிப்பீட்டு முறை இருக்கும். இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னேற்றம். கல்வியாளர்களாலும், உளவியலாளர்களாலும்  இது வரவேற்கப்பட வேண்டியது.

இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதோடு அவர்களது தனித் திறனை வளர்க்க உதவும் என தமிழக அரசு கூறியுள்ளது.

“எந்த ஒரு மாற்றமும் மன அழுத்த்தை உருவாக்கும்” என உளவியல் சொல்கிறது.  ஆகவே மாணவர்களையும், ஆசிரியர்களையும், மிக முக்கியமாக பெற்றோர்களையும் இந்த மாற்றத்தை பின்பற்ற பயிற்றுவிப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏன் இந்த பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த மாற்றங்கள் எந்த வகையில் நம் கல்வித்தரத்தை மேம்படுத்தும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களை ஆழமாக சிந்தித்து புரிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுகும், ஆசிரியர்களும், பெற்றோர்களுக்கும் பயிற்சி தரப்பட வேண்டும். அப்போது தான் அனைவரும் இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்கள்.

சி.பி.எஸ்.இ, கர்நாடகா மற்றும் கேரள மாநில கல்வி முறைகளை மாதிரியாக வைத்து, தமிழக தேர்வு முறைகளில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கல்விக்கொள்கையை பொருத்தவரை தமிழகம், நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது. இங்கு மாணவர்கள் இரு மொழிகளை மட்டுமே படிக்கிறார்கள். தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது. ஆகவே தமிழக மாணவர்கள், வேறு மாநிலங்களில் கல்லூரி படிப்பில் சேர முற்படும் போது, பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஆகவே அவற்றை கருத்தில் கொண்டு, நம் மாநிலத்திற்கு ஏற்ற வகையில், இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாம் செய்ய வேண்டிய கல்வி சீர்திருத்தங்களில் இது ஒரு நல்ல தொடக்கம். நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

No comments:

Post a Comment