Friday, January 11, 2013

காலத்தை மாற்றிய காதலி!- எனது இரண்டாம் சிறுகதை


சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நண்பர் ஒருவரை வழியனுப்ப வந்திருந்தேன். அவரை அனுப்பி விட்டு, வெளியில் வந்து கொண்டிருந்த போது, 35 வயது மதிக்கத்தக்க நடுத்தர வர்க்க பெண் ஒருவர் இடுப்பில் ஒரு குழந்தையையும், கையில் ஒரு குழந்தையையும் பிடித்துக்கொண்டு என் அருகில் வந்தார். என்னைப்பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ, நீங்க முகில் தானே?” என்று கேட்டாள். நானும் “யெஸ், ஐ யாம்” என்று சொல்லிவிட்டு அவரது முகத்தை உற்று கவனித்தேன். “ஐ யாம்..” என்று அவர் சொல்ல, நானே குமுதா என்றேன்.

குமுதா, எனது கல்லூரித் தோழி, அன்றைய காதலி. 11 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்.  என்னை வேண்டாம் என சொல்லி விட்டு போன அவள் எங்கு இருப்பாள், எப்படி இருப்பாள் என எனக்கு வேலை குறைவாக இருக்கும் காலங்களிலும், பயணங்களிலும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவள் பிரிந்து சென்று மூன்று வருடங்கள் வரை அவளை நினைக்காத நாளே என் வாழ்க்கையில் இல்லை எனலாம். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு முறையாவது அவளை நான் நினைத்திருக்கிறேன். எனது நண்பர் ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன், அவள் என்னை பிரிந்த 6 மாதங்களில் திருமணம் ஆகி பூனாவில் செட்டில் ஆகி விட்டாள் என்று. திருமணம் ஆன புதிதில் அவளுக்கு அவர் கணவருடன் பிரச்சனை இருந்ததாக அவளது நெருங்கிய தோழி என்னிடம் சூசகமாக தெரிவித்தார். அவளுக்கு பிரச்சனை என்றவுடன், கணவரை விட்டு விட்டு என்னை வந்து சேரமாட்டாளோ என்று கூட நான் நினைத்ததுண்டு.
அவளை பிரிந்ததற்கு பின், உயர் படிப்பு படித்து, மத்திய அரசின் தொழில் நுட்பத் துறையில் விஞ்ஞானியாக சேர்ந்து, என் பங்களிப்புகள் மூலம் ஓரளவுக்கு மீடியாக்களில் தெரிந்த நபர் ஆகிவிட்டேன். நான் டி.வியின் தோன்றி பேட்டி அளிக்கும் போது, அவள் பார்த்து, என்னை வேண்டாம் என்று சொன்னது தவறு என உணர்ந்திருப்பாள் என நினைத்திருக்கிறேன். இப்படி ஒரு நாள் அவளை நேரில் பார்ப்பேன் என்று நான் நினைத்ததேயில்லை. அவள் என் வாழ்க்கையை விட்டு போய் 5 வருடங்கள் ஆன பிறகு, அவள் என்னை விட்டு போனது, அவள் இறந்து போனதற்கு சமம் என்று எனக்கு நானே சமாதானம் கூறி திருமணமும் செய்து கொண்டேன். இன்று எனக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

அவளைப்பார்த்தது, கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்த படியால், ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு, என் லாப் டாப் பையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தேன். அதற்கு பிறகு பேசத்தொடங்கினேன். “எப்டி இருக்கீங்க குமுதா?” என்று கேட்டேன். உண்மையில் “எப்டி இருக்க குமுதா?” என்று தான் முதலில் கேட்க வந்தேன், சுதாரித்துக்கொண்டு ‘இருக்கீங்க’ என்று கேட்டு வைத்தேன். அவளும் என்னை குசலம் விசாரித்தாள். அதற்குள் அவள் இடுப்பில் இருக்கும் குழந்தை அழ, “மாமா பாரு! மாமா பாரு!” என என்னை காண்பித்தாள். “அடிப்பாவி, முறையையே மாற்றி விட்டாளே! 11 வருடங்களில் காதலனிலிருந்து சகோதரன் முறைக்கு மாறி விட்டேனா என்ன?” என மனதுக்குள் என்னை நானே கேட்டுக்கொண்டேன். “இந்த பொம்பளைங்களே இப்டிதா பாஸ்” என என் இன்னொரு மனம் சொல்ல, காமெடியாய் போய் விட்டது. “அப்புறம்?” என நான் கேட்க. அவள் என்ன அதற்கு அப்புறம் சொன்னால் என்பதற்கு முன்னால், ஒரு விஷயம் கேளுங்களேன். “அப்புறம்” என்ற வார்த்தையை, அவள் என்னை காதலிக்கும் போது பல முறை சொல்லியிருக்கிறாள். என்னைப் பொருத்தவரை அந்த வார்த்தைக்கு, “தொடர்ந்து பேசுவதற்கு உருப்படியாய் எதுவும் இல்லை” என அர்த்தம். ஆனால் அவளை பொருத்தவரை, “இன்னும் வேறு ஏதாவது பேசு, நீ ஏதாவது பேசி கேட்க எனக்கு ஆசை” என்று அர்த்தம். இப்படி பற் பல வேறுபட்ட அர்த்தங்கள் வைத்துக்கொண்டு காதலித்ததால்தான் இப்போது  நான் அவள் குழந்தைக்கு மாமாவாகி விட்டேன். சரி அவள் என் ‘அப்புறம்’ கேள்விக்கு என்ன பதில் சொன்னாள் என்று பார்ப்போமா?

அவள் சொன்னாள், “என் வீட்டுக்காரர் டிக்கெட் எடுக்க வரிசைல நிக்கிறார், இப்ப வந்துடுவார், உங்கள பத்தி அவர் கிட்ட  நெறயா சொல்லிருக்கேன். இப்படி திடீர்னு உங்கள பார்ப்பேன்னு நினைச்சு பாக்கவே இல்ல” “நா மட்டும் நினச்சேனா என்ன? இப்பவும் நீ மாறவே இல்லையா, என்னையும் இப்படித்தானே பலமுறை டிக்கெட் எடுக்க வரிசைல நிக்கவச்சுட்டு நீ ஜாலியா பராக்கு பாத்துக்கிட்டு இருப்ப” - இது என்னோட மைண்ட் வாய்ஸ். எதுவும் சொல்லாம, நின்று கொண்டிருந்த என்னை அவள் பார்த்து கேட்டாள் “அப்புறம்?”, “அப்புறம் என்ன? ஒரு பழைய ஃபிரண்ட வழியனுப்ப வந்தேன், ஒரு மிகப்பழைய ஃபிரண்ட இப்ப பாத்திருக்கேன்” என என கவிதை மொழியில் பேச, அவள் இப்போது என்னைப்பார்த்து சொன்னாள் “நீ இன்னும் மாறவே இல்லையா?”.

“யாரும் மாறவே இல்ல குமுதா, காலந்தான் மாறிப்போச்சு” என்று நான் சொல்லிக்கொண்டிருக்க, அவளது கணவர் வந்துவிட்டார். “ நா காதலிச்ச பொண்ண கட்டுன அந்த தியாகி நீதானாடா?” நினைத்துக்கொண்டு, அவருக்கு ஹலோ சொன்னேன். அவரும் பதிலுக்கு ஹலோ சொல்லி, குமுதா உங்கள பத்தி நெறையா சொல்லிருக்கா” என்றார். “நெறயா, நெறயா-ன்னு ரெண்டு பேரும் சொல்றாங்களே, நாங்க காதலிச்ச விஷயமுமா?” – இதுவும் என் மைண்ட் வாய்ஸ் தான்.

காதலித்த காலத்தில், கோயம்புத்தூரில் நாங்க போகாத தியேட்டரே கிடையாது. மிகக்குறைந்த காலத்தில் ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் படம் பார்த்ததற்கு லிம்கா சாதனை புத்தகத்தில் எங்களுக்கு ஒரு இடமளிக்கலாம். இரண்டு வருடங்களில், ஒவ்வொரு மாதமும் 3 முறையாவது படம் பார்க்க போய் விடுவோம்.  நான் ஹிந்தி படம் பார்க்க ஆரம்பித்தது அப்போதுதான்.

“யூ ஆர் சோ கிரேட் முகில், இந்த சின்ன வயசுல ரொம்ப சீக்கிரமா மேல வந்துட்டீங்க” என்று அவர் சொல்ல, “தாங்க்ஸ்” என்று மட்டும் சொல்லிவைத்தேன். உண்மையில் நான்தான், அவரது மனைவிக்கு இல்லை இல்லை எனது திடீர் சகோதரிக்கு தாங்க்ஸ் சொல்ல வேண்டும். அவள் தான் என்னை காதலிக்கும் போது, புரியாத ஹிந்தி படங்கள் பார்க்க வைத்து, இப்போது என்னை சரளமாக ஹிந்தி பேச வைத்திருக்கிறாள். அதுவே மதராஸி என்ற பாகுபாடின்றி இன்று வட நாட்டினருடன் நட்பு பாராட்டி என் திறமைகளை சரியாக அவர்கள் கண்டுகொள்ள வைத்திருக்கிறது. மேலும் அவள்  என்னை விட்டு பிரிந்து சென்றவுடன் நான் செய்த உருப்படியான காரியம், மேல் படிப்பு படிக்க சென்றது தான். அவள் நினைப்பிலேயே இருந்தனால், அவளை மறக்க வெறித்தனமாய் இரவும் பகலுமாய் உழைக்க தொடங்கி, சிறப்பு தகுதிகளை வளர்த்துக்கொண்டேன். என்னுடன் வேலை பார்த்த பலரும் குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி விட நான் மட்டும் பேச்சுலராய் கடினமாய் உழைத்துக்கொண்டிருந்தேன். அதன் விளைவு, வாழ்க்கையில் முன்னேறி இப்போது பலருக்கும் தெரிந்த முகமாகி விட்டேன்.

வேறு என்ன பேசுவது என்று தெரியாது நான் டெல்லிக்கு ஒரு முக்கியமான வேலையாய் போக வேண்டியிருப்பதாய் பொய் சொல்லிக்கொண்டு, என் விசிட்டிங்க் கார்டை அவரது கையில் திணித்து விட்டு, என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு என் இதயத்துடிப்பின் வேகம் அடங்காது, அங்கிருந்து அவசரமாய் கிளம்பி கார் பார்க்கிங்-க்கு வந்தேன். காரில் ஏறி சொகுசாய் உட்கார்ந்து கொண்டு என்னை மிஸ் செய்ததை அவள் உணர்ந்திருக்கிறாள் என்று  நினைத்துக்கொண்டேன். அப்போது பதற்றம் அடங்கி, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி என் மனதில் தோன்றியது; ஒரு மைண்ட் வாய்ஸ் எனக்கு இப்போது கேட்கிறது “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!”

1 comment:

  1. Lucky Club Casino Site Review - LuckyClub.live
    Lucky Club Casino is the leading online casino with luckyclub.live a lot of different payment methods for your personal convenience. The game is streamed  Rating: 3.5 · ‎Review by LuckyClub.live

    ReplyDelete