Saturday, October 29, 2011

காதலின் ஈர்ப்பு 'இருப்பு' ஆகுமா?


உளவியல் சொல்கிறது, காதலில் மூன்று நிலைகள்/பருவங்கள் உண்டாம்.

  1. இனக்கவர்ச்சி : பார்த்தவுடன், பழகியவுடன் ஒருவர் பிடித்துப்போவது (அ) ஈர்ப்பு ஏற்படுவது
  2. கற்பனை கலந்த காதல்: குறிப்பட்டவருடன் காலம் முழுக்க வாழப்போவதாய் கற்பனை செய்து, உணர்வுப் பூர்வமாய் ஒருவர் மீது ஒருவர் அதிகமாக சார்ந்து வாழ்வது
  3. நிறைவான காதல்: நிறை குறைகளை அறிவுப்பூர்வமாய் அலசி, வாழ்க்கையை முழுதாய் பகிர்ந்து கொள்வது.

மேற்சொன்ன முதல் இரண்டு பருவங்கள் ஈர்ப்பின் அடையாளங்கள். மூன்றாவது பருவமே இருப்பின் அடையாளம். காதல் காலம் திருமணத்தில் முடிய இருப்பு அவசியம்.

ஈர்ப்பு இருப்பாகுமா?
ஈர்ப்பு என்பது எதனாலும் வரலாம். ஒருவரிடம் உள்ளது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம், இல்லாமல் இருப்பதாலும் வரலாம். ஈர்ப்பு என்பது எதனால் வந்தது என இருந்து பார்த்தபின் தான் தெரியும். ஈர்ப்பு என்பது வேறு. இருப்பு என்பது வேறு.

ஈர்ப்பு இருப்பாகுமா என பார்த்து பிறகு திருமணம் செய்யுங்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் தாமரை எழுதிய வரிகள் இருப்பின் தன்மைகளை எனக்கு அதிகம் ஞாபகபடுத்துகிறது.


உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

ஈர்ப்பு இருப்பாகவில்லை எனில் பிரிந்து செல்லுங்கள். பிரிய உளவியலாளர்களாய் நாங்கள் உதவுகிறோம்.

காதல் காலம் வாழ்வின் ஒரு பகுதி
காதலுக்கு கண்ணில்லை; மூளையுமில்லை. அது தவறுமில்லை. வாழ்வின் ஒரு பகுதி. அதில் உங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு வாழ்க்கையை தொடருங்கள்.

முடிந்தவரை என்ன பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை எதிர்கொள்ள தயாராகுங்கள். உங்கள் தயாரிப்பையும் தாண்டி பிரச்சனைகள் வரும். அப்படி வரும் பிரச்சனைகள் தான் வாழ்வை சுவாரஸ்யம் ஆக்கும். என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்று முன்னரே தெரிந்திருந்தால் என்ன சுவாரஸ்யம். எல்லாம் எதிர்பார்த்த படி நடந்து கொண்டிருக்கும்.

நீங்கள் காதலில் இருந்தாலோ, திருமணம் செய்ய போகிறவரை தேர்ந்தெடுத்து விட்டாலோ, எந்த காதல் பருவத்தில் இருக்கிறீர்கள் என அறிந்து கொள்ளுங்கள். நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். முடிவு எடுத்தபின் அதிலிருந்து பின் வாங்காதீர்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
-திருக்குறள்

No comments:

Post a Comment