Tuesday, April 3, 2012

மக்கள், உளவியலாளர்களை விட்டுவிட்டு ஏன் சுவாமி நித்யானந்தாவை நாடினார்கள்?

சுவாமி நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகரன். திருவண்ணாமலையில் 1978/77-ல் பிறந்தவர். பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக கொண்டு சென்றவர். ‘கதவைத் திற காற்று வரட்டும்’, ‘காமம் பயம் கவலைக்கு நிச்சயத் தீர்வுகள்’ போன்ற பல புத்தகங்களை எழுதியவர். பல தினசரிகளிலும், இதழ்களிலும் ஆன்மீகம் தொடர்பாக கட்டுரைகளும் எழுதிவந்தவர். எல்லாம் நன்றாக போய்க் கொண்டு இருந்தது. இரஞ்சிதாவுடன் அவர் செய்தாக சொல்லப்படும் விஷயங்கள் பற்றி சர்ச்சை எழும் வரை.

இது போன்ற சுவாமியார்களின் வரலாறு இந்தியாவைப் பொறுத்தவரை தொடர்ந்து வரும் விஷயம். சந்திராசாமி, பிரேமானந்தா, குட்டி சாமியார் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இப்போதும் போற்றப்படும் கல்கியும், ஜெயேந்திரரும் பல சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் இருக்கிறார்கள். எது உண்மை எது பொய் என்பது சுவாமிகளுக்கே தெரிந்த இரகசியம்.

இந்த சாமியார்கள் பல நேரங்களில், தங்களை கடவுள் என்றோ அல்லது கடவுளின் அவதாரம் என்றோ அழைத்துக் கொள்கிறார்கள். எவ்வாறு அவர்கள் சொல்வதையெல்லாம் இந்த மக்கள் கேள்வி கேட்காமல் அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள்? உண்மையிலேயே அவர்களிடம் அப்படி என்ன திறமை இருக்கிறது?  


  • மக்களின் மனப்பாங்கை மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் பொருட்களை விற்கும் யுக்தி என்று சொல்லப்படும் மார்க்கெட்டிங்- தெரிந்தவர்கள். இது நமது அரசியல் வாதிகளுக்கு உள்ள அதே திறமை தான். மக்களை சிந்திக்க விடாமல், குழப்பிக் கொண்டே இருப்பது, ஒன்றன் பின் ஒன்றாக இலவசங்களை அள்ளி விடுவது போன்றவை.  
  • தொழில் நுட்பம் தெரிந்தவர்களாக அல்லது தொழில் நுட்பம் தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் அலுவலகமே இப்போது தான் யூடியூப்-ல் இணைந்திருக்கிறது. ஆனால் இந்த சாமியார்களின் வீடியோக்கள் வெகுகாலமாக யூடியூப்-ல் இருந்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, 2006-ம் ஆண்டு முதல் இன்று வரை பல உலக மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்டு 2237 வீடியோக்கள் யூ டியூப்-ல் மட்டும் நித்யானந்தாவின் ஆன்மீக நிறுவனத்தால் பதிவேற்றப்பட்டுள்ளது., ஃபேஸ் புக், டிவிட்டர் என எல்லா சமூகவலைத்தளங்களிலும் கால் பதித்து இருக்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது?
  • மிகுந்த பேச்சுத்திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பல மொழிகளில் பேசுகிறார்கள். நித்யானந்தாவின் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் 28 உலக மொழிகளில் வெளியாகி இருக்கிறதாம்.
  • 'சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பரவலாக சொல்லப்படும் உளவியல் கூறுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வது தான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும், அதைப்பற்றி எல்லாம் சராசரி மனிதனைப் போல் கவலைப்படாது தான் செய்ய நினைத்ததை, செய்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு நான் உதாரணம் சொல்லத் தேவையில்லை. நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்!
  • உளவியல் பூர்வமாக சிந்தித்தால், இந்த சாமியார்களுக்கு 'பர்ஸனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனப்படும்,  ‘குணநலன் சார்ந்த மன நோய்கள்’ இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அவர்கள் குணமே அப்படித்தான், அவர்கள் செய்வது தவறு என்று யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், இது போன்ற குணநலன் சார்ந்த நோய்கள் பொதுவாக குணமாவது கிடையாது.
  • மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில், ‘டொமினோ எஃபெக்ட்’ எனபது பற்றி குறிப்பிட்டு இருந்தார். எளிமையாக ‘டொமினோ எஃபெக்ட்’ என்றால் என்னவென்று கேட்டீர்களானால், சைக்கிள்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு சைக்கிளை தள்ளி விட்டால், எல்லா சைக்கிள்களும் வரிசையாக விழுவது போன்றது. முறையாக திட்டமிட்டு சரியான உக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் எல்லா சைக்கிள்களும் விழுந்தே ஆக வேண்டும். இது ஒரு அறிவியல். சரோஜா படத்தில், கதாநாயகர்கள், வில்லன்களிடமிருந்து தப்பிப்பிதற்காக செய்வதாக காட்டியிருப்பார்களே, அதுதான்! அப்படித்தான் திட்டமிட்டு பலரையும் தன்வசம் திருப்பிக்கொள்கிறார்கள்.
  • இந்த கார்பரேட் சாமியார்களின் ஃபார்முலா இது தான். அரசியலவாதிகளிடம் செல்வாக்கு+ஆன்மீக கல்வி நிறுவனங்கள்+சமூக சேவை+பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள்/புத்தகங்கள்.
என்னதான் எதிர்பார்த்து, இந்த சாமியார்களிடம் நம் மக்கள் போகிறார்கள்?

மன அழுத்தம், நிம்மதியின்மை, வாழ்வில் பிரச்சனைகள் என்று போனால், அதிலிருந்து இந்த சாமியார்கள் விடுதலை அளிக்கிறார்கள். உண்மை தான்! இந்திய தத்துவங்களில் பொதிந்து கிடக்கும், உளவியலை அறிந்து, அதனை போதித்து,  யோகக்கலையை கற்பித்து விடுதலை அளிக்கிறார்கள்.

இதே வேலையை கைதேர்ந்த உளவியாலாளர்களாலும் அறிவியல் பூர்வமாக செய்ய முடியும். ஆனால் ஏன் மக்கள் உளவியலாளர்களை பார்க்க செல்வதில்லை?

‘உளவியலாளர்/மனநல மருத்துவர்களிடம் பைத்தியமானவர்கள் தான் செல்ல வேண்டும்’ என்ற மிகத்தவறான கருத்து நம் மக்கள் மனதில் வேறூன்றி உள்ளது.

இந்த கருத்தை நம் சமூகம் மாற்றிக்கொள்ளாதவரை, கார்ப்பரேட் சாமியார்கள் வரலாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். என்னைப் போன்ற உளவியலாளர்கள் வருத்தப்பட்டு கட்டுரைகள் எழுதிக்கொண்டே தான் இருப்போம்!! 

4 comments:

  1. people in our society need a solution for the problem instantly , lack of knowledge about psychologist is also a factor , when a problem is solved by a swamiji , that message spreads immediately , but if it is solved through a psychologist people hesitate to share , stigma stil persist in our society, hope we all can change the scenario through our services

    ReplyDelete
  2. You are right..... our society does not mind disturbed people doing supesitious things like Alagu sticking, fire stomping, uriadi,etc under the name of relgion, caste or ancestors' methods and polticanas and samiayrs ensures that people do not come out of this stupidity , since they will lose theor business. We need Periyar type of personlaties to be born again to wiggle this people out of religious and caste holds....

    ReplyDelete
  3. Nithiyananda learnt the art of touch healing. suffering were gone by his healing and by word of mouth and of course - propaganda tactics took him to heights. he wears a smile at all times. hence wearing a smile hides all vices. I suggest psychologist all so can wear saffron robes for a change.
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்!!

    ReplyDelete