Wednesday, May 9, 2012

என்று ஒழியும் இந்த பொறியியல் மோகம் பகுதி – 2



இதனை படிப்பதற்கு முன், இதன் முதல் பகுதியை படிக்கவும் http://thamizhvalaipoo.blogspot.in/2011/07/blog-post.html

கடந்த 45 நாட்களில் 4 பொறியியல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி சொன்னார்கள். பாடத்திட்டம் கஷ்டமாக இருப்பதால் தான் இந்த தற்கொலைகள், ஆகவே பாடத்திட்டத்தை எளிமையாக்க வேண்டும் என்று வேறு பண்பலை வானொலிகளில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கனேவே பொறியியல் மாணவர்களின் கல்வித்தரம் பற்றியும், உரிய வேலை கிடைக்காமல் அவர்கள் திண்டாடுவது பற்றியும் பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்க, இன்னும் கல்வித்தரத்தை குறைக்கும் வண்ணம் பாடத்திட்டத்தை எளிமையாக்க வேண்டும் என்று சொல்வதை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனக்கென்னமோ பொறியியல் கல்வி பெற தகுதியானவர்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்காது விட்டமை தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் மிக முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நுழைவுத் தேர்வை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டால், கிராமப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்று சொல்கிறார்கள். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களை தயார்செய்யாது விட்டது பள்ளிக்கல்வியில் உள்ள ஓட்டை. அதை சரி செய்யாது, நுழைவுத் தேர்வை நீக்கிவிட்டது, தான் செய்த தவறை மறைக்க, இன்னொரு தவறு செய்வதற்கு சமம்.
 
பெற்றோர்களின் பேராசை, பொறியியல் கல்லூரிகளின் பொறுப்பின்மை, ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், நுழைவுத்தேர்வை நீக்கி விட்ட அரசியல்வாதிகள் ஆகியோர் தான் இந்த மாணவர்களின் இறப்புகளுக்கு பொறுப்பு என்று நான் சொல்லுவேன்.

உளவியல் பூர்வமாக பார்த்தால், பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான சில குறிப்பிட்ட திறன்கள், சில குறிப்பிட்ட ஆர்வங்கள், சில குறிப்பிட்ட குணநலன்கள் இருக்க வேண்டியது அவசியம். இந்த விஷயங்கள் மாணவர் சமுதாயத்தில் பெரும்பாலானோர்க்கு இருக்க நியாயமில்லை. ஆனால் பெரும்பாலானோர் படிக்க விரும்புவது பொறியியல் தான். பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் இது தான் காரணம்.

தமிழ்நாட்டு மாணவர்களின் பிரச்சனை என்னவெனில், தனக்கு என்ன திறமை இருக்கிறது, என்ன படிப்பு படித்தால் நான் வாழ்வில் ஒரு உயரிய மனிதனாக வர முடியும் என்று தெரியாமல் வேலை வாய்ப்பு, அதிக சம்பளம் போன்றவற்றை மனதில் வைத்து பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் போன்றோர்கள் சொல்வதை வேதவாக்காக நம்பி பொறியியல் கல்லூரிகளில் மந்தை மந்தையாக சேருவது தான்.பெரும்பாலான பெற்றோர்களும், தனது குழந்தைகள் ஒன்று மருத்துவராக வரவேண்டும் அல்லது பொறியியலாளராக வர வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக்க்கூடாது, வேலைக்கு செல்லும் வகையில் உரிய முறையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும், ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும், உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும், நுழைவுத்தேர்வு அவசியம் வேண்டும் என்றெல்லாம் சொல்லுவது எளிது. ஆனால் அரசு என்னமோ அதை காதில் வாங்கிக்கொள்ள போவது இல்லை. அரசு சட்டம் போட்டாலும் பொறியியல் கல்லூரிகள் அவற்றை நிறைவேற்றுவதில் பல முட்டுக்கட்டைகள் போடப்போவது நிச்சயம்.

பள்ளியில் செயல்படும் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள், ஊடகங்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அவ்வபோது இது பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டு, தொடர்ந்து இது பற்றி பேசியும், எழுதியும்,போராடியும் வந்தால், ஒரு வேளை அரசு இதற்கு செவி சாய்க்கலாம், எதாவது உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கலாம்.

அரசை, பொறியியல் கல்லூரியகளின் நிர்வாகங்களை குறை கூறுவதற்கு முன்னால், பெற்றோர்கள் இது பற்றி சிந்தித்து, தங்களது பொறியியல் மோகத்தை குறைந்துக் கொள்ள வேண்டும். முடிவெடுக்கும் திறமைகளை வளக்க குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். தங்களுக்கு என்ன திறமைகள் இயல்பாய் உள்ளன, அவற்றை பயன்படுத்தி எப்படி வாழ்வில் முன்னேறுவது என்ற வகையில் அவர்கள் சிந்திக்க உதவ வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் மட்டுமே,மட்டுமே நம் குழந்தைகளை இந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றி கொள்ள முடியும்.

No comments:

Post a Comment