Thursday, November 1, 2012

சிறந்த பெற்றோர்களாக இருக்க



குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிப்பது பெற்றோர்கள். உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பின்வருபவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

http://www.svusd.k12.ca.us/guidance/images/parenting.jpg
1. பெற்றோர்கள் தான் குழந்தைகளின் கண் முன் இருக்கும் மாதிரி. குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து போதிக்கபடுவதை விட அதிகமாக நடப்பவற்றை கவனித்தே கற்றுக்கொள்கிறார்கள்
2. பெற்றோர்கள் குழந்தைகளை நடத்தும் முறை குழந்தைகளின் பண்புகளில் குறிப்பிட தகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது 

பெற்றோர்களின் அன்றைய குழந்தைப்பருவ வாழ்க்கை முறையை ஒப்பிடும் போது,  இன்றைய வாழ்க்கை முறையும், குடும்பம் என்ற சமூக நிறுவனமும் பற்பல மாற்றங்களை சந்தித்துள்ளன. ஆகவே சிறந்த பெற்றோர்களாக இருக்க முன்னர் கற்றுக்கொண்ட குறிப்புகள் அவற்றின் நம்பத்தன்மையை இழந்துவிட்டன. இன்று சிறந்த பெற்றோர்களாக இருக்க புதிதாய் பல விஷயங்களை தொடந்து கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.

இந்த போட்டி உலகத்தில் குழந்தைகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள, மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி தனித்தன்மையாய் காட்ட பல பரிமாணங்களில் மெருகேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.  எடுத்துக்காட்டாக,
  • உணர்வுகளை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தும் திறன்
  • மென் திறன்கள்
  • விழுமியங்கள் (values)
  • அறிவுக்கூர்மை
  • ஆக்கத்திறன்
  • உறவுகளை சிறப்பாக கையாளும் திறன்
  • உடல் மற்றும் மன நலம் பேணுதல்
  • விளையாட்டு, நடனம், மொழிகள் போன்ற பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களை தாண்டிய திறமைகள்
  • பணத்தை கையாளும் திறன்
  • வீட்டை நிர்வகிக்கும் திறன்
போன்றவற்றை குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பு தரப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்கள் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு முழிக்க வாய்ப்புண்டு. இந்தக் குழந்தையை பாருங்கள்.

குழந்தை: நா பெரியவனா ஆகும் போது, ஒரு கோடீஸ்வரனாக இருக்கணும்- னு முடிவு செஞ்சிருக்கேன்.
அப்பா: வெரி குட்! கோடீஸ்வரனாகனும்னா நீ கஷ்டப்பட்டு உழைக்கணும், என்ன?
குழந்தை: நா உழைக்கணுமா? நீங்கதான் கஷ்டப்பட்டு உழைக்கணும்!
அப்பா: நானா??
குழந்தை: ஆமா! நீங்க உழைச்சு கோடீஸ்வரனானா, உங்கள் மகனான நானும் கோடீஸ்வரன் தானே!
அப்பா: !?
இந்தக் குழந்தை நிச்சமாய் அறிவுக்கூர்மை உள்ள குழந்தை, ஆனால் அவனுடைய விழுமியத்தைப் (Values) பாருங்கள். விழுமியம் இல்லா அறிவுக்கூர்மை நிச்சயம் நல்ல வழிக்கு குழந்தைகளை கொண்டு செல்லாது. 

குழந்தைகள் மலரைப் போன்றவர்கள். மலரின் இதழ்களை போல அவர்களின் பல்வேறு பரிணாமங்கள். மலரின் ஒரு சில இதழ்கள் அளவுக்கு அதிகமாக வளந்து, சில இதழ்கள் வளரவே இல்லாமல் போனால் அதை நீங்கள் அழகான மலரென்று சொல்வீர்களா? ஆகவே 'அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி/முன்னேற்றம்' என்பதே இன்றைய தேவை. அப்படிப்பட்ட வளர்ச்சி கொண்டவர்களைத்தான் உயரிய வேலைகளுக்கு எடுக்கிறார்கள், அவர்களால் தான் எப்படிப்பட்ட சூழ் நிலையையும் சமாளித்து வெற்றி காண முடியும்.

ஏதோ ஒரு பரிணாமத்தில் மட்டும் குழந்தைகளை கற்க வாய்ப்பு கொடுப்பது ஆபத்தானது. அதே நேரத்தில், பல விஷயங்களை ஒரேடியாக கற்றுக்கொள்ள கட்டாயபடுத்துவதும் 'அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி/முன்னேற்றம்'  என்பதற்கு தீங்கு விளைவிக்கும். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரேடியாய் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு அவர்கள் ஒன்றும் பெரியவர்கள் கிடையாது. பல நேரங்களில் பெரியவர்களாலேயே சில விஷயங்களை ஒரேடியாய் கற்றுக் கொள்ள முடியாத போது, அவர்களை கட்டாயப்படுத்துவது நியாயம் ஆகாது. அறிவியல் பூர்வமாக சொன்னால், அவர்களது மூளை பல விஷயங்களை ஒரேடியாய் கற்றுக்கொள்ள அவ்வளவு பெரிது கிடையாது.

முக்கிய குறிப்பு: உண்மை என்னவெனில் குழந்தைகள் ஒரு பருவத்திற்கு பிறகு தானாகவே வளர்கிறார்கள். ஆகவே தான் 'பேரன்ட்டிங்க்' என்ற ஆங்கிலச்சொல்லை குழந்தை வளர்ப்பு என்றல்லாமல் 'பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளுதல்' என மொழி பெயர்க்கிறேன். 
For better view to read
http://2.bp.blogspot.com/-UGaOKamfFso/UKZ5g3VGyUI/AAAAAAAABCg/vvz3NOZzQ6Q/s1600/Page%2B5.jpg

No comments:

Post a Comment