Wednesday, January 16, 2013

அனைவருக்கும் அவசியம் தேவை அசர்ட்டிவ்னெஸ்



அனைவருக்கும் அவசியம் தேவை அசர்ட்டிவ்னெஸ்!

நம் வாழ்க்கையில் நாம் பலருடன் தொடர்பு கொள்கிறோம் நம் சொற்களும் செயல்களும் சிலரை நமக்கு நெருக்கமாக்குகின்றன, சிலரை எதிரிகளும் ஆக்குகின்றன. எதிரிகள் உருவாவதற்கும், நண்பர்கள் கிடைப்பதற்கும் நம் நடத்தைகளும், சொற்களும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றன. 
நம் நடத்தைகளும், சொற்களும் மற்றவரையோ அல்லது தன்னையோ புண்படச்செய்யும் போது, நெருக்கம் குறைந்து பகைமை வளர வாய்ப்பு ஏற்படுகிறது.
நாம் மற்றொருவருடன் தொடர்பு கொள்ளும் போதும், மற்றவர்களுடன் சேர்ந்து செயல்களை செய்யும் போதும் பின்வரும் மூன்று வகையான புண்படுதல்களில் ஏதாவது ஒன்றே நடப்பதை பார்க்கலாம்.

1.மற்றவர் மனம் புண்படுமாறு ஏதாவது சொல்லிவிடுகிறோம் அல்லது நடந்து கொள்கிறோம் (Aggressive Behaviour)
2.மற்றவர் மனம் புண்படக்கூடாது எனக் கருதி, சொல்ல வேண்டியதை சொல்லாமல் அல்லது செய்ய வேண்டியதை செய்யாமல் நம் மனதை நாமே புண்படுத்திக் கொள்கிறோம்.(Passive Behaviour)
3.அந்த சூழலில் யார் மனதும் புண்படாமல் இருக்க வேண்டி, எதையாவது பொய்யை சொல்லி சமாளிக்கிறோம் அல்லது சூழ்ச்சியாக நடந்து கொள்கிறோம். (Manipulative Behaviour)

இந்த மூன்று வகையான புண்படுதல்களின் விளைவுகளை பார்ப்போம். மற்றவர் புண்படுமாறு நாம் நடந்து கொண்டால், அங்கு வன்முறை தொடங்குகிறது. என்றாவது ஒரு நாள் புண்பட்டவர் நம்மை புண்படுத்த வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருப்பார். வாய்ப்புகள் கிடைக்க, கிடைக்க வன்முறை தொடர்கதையாகி போகும். மற்றவர் புண்படக்கூடாது என நீங்களே உங்களை புண்படுத்திக்கொண்டால், ஒர் எல்லைக்கு பிறகு நம்மை நாமே அறியாமல் மற்றவரை புண்படுத்த தொடங்கிவிடுவோம். மற்றவர் புண்படுத்தக்கூடாது என்ற அடிப்படை நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். பொய் சொன்னாலோ அல்லது சூழ்ச்சியாக நடந்து கொண்டாலோ, உண்மை தெரிய வரும் போது,  நம் மனமோ அல்லது பிறர் மனமோ நிச்சயம் புண்படும்.

ஆகவே இந்த மூன்று முறைகளுமே தவிர்க்கப்பட வேண்டியவே. உளவியல் படி, புண்படுதல் என்பது மனிதத்திற்கு ஏற்றதல்ல. அது தனக்கு ஏற்பட்டாலும் சரி, மற்றவருக்கு ஏற்பட்டாலும் சரி, இரண்டுமே தவறானது தான்.

இந்த புண்படுதலை போக்க உளவியலால் முன் வைக்கப்படும் திறனே அசர்ட்டிவ்னெஸ்.

'அசர்ட்டிவ்னெஸ்' என்பதன் பொருள்:
  • மற்றவரையும் கஷ்டப்படுத்தாது, தன்னையும் கஷ்டப்படுத்தாது தொடர்புகொள்ளல் மற்றும் நடந்து கொள்ளுதல்
  • தன்னையும், மற்றவர்களையும் சமமாக பாவித்தல்
  • மற்றவர்களை கஷ்டப்படுத்தாது, தான் தானாக வாழ்தல்
  • தன் தேவைகளையும், உணர்வுகளையும் மற்றவருக்கு ஒரு பொருத்தமான/சரியான முறையில் வெளிப்படுத்துதல்
  • மற்றவர்கள் மற்றும் தன் மீது கோபப்படாமலும், வருத்திக்கொள்ளாமலும் செயல்களை செய்தல்
  • மற்றவர்களின் பிரச்சனைகளை, தன் பிரச்சனைகளாக பாவித்து பொறுமையாய் கவனித்து கேட்டு புரிந்து கொள்ளுதல்
  • அவரவருக்கு உரிய உரிமைகளை மதித்தல்
  • நம் தேவைகளையும் மற்றவர் தேவைகளையும் அனுசரித்து முடிவுகளை எடுத்தல்
எனவே அசர்ட்டிவ்னெஸ் என்பதை தமிழில் 'யாரும் புண்படா வண்ணம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளல்' என மொழி பெயர்க்கிறேன். 

எவ்வாறு இதனை நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பது?
  • முடிந்த வரை மற்றவரையும், உங்களையும் வருத்தாது, உங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் நேர்மையாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அதனை கட்டுப்படுத்திக்கொண்டு நடிக்காமல், அதே போல் கோபப்பட்டு கத்தாமல், எனக்கு கோபம் வருகிறது என்று குரலை உயர்த்தாமல் சொல்ல வேண்டும்.
  • உங்கள் மனம் சொல்வதற்கு எதிராக நடந்து கொள்ளாதீர்கள். ஏதோ ஒரு விஷயத்தை உங்களால் செய்ய முடியாது என்று கருதினால், ‘முடியாது’ என்று குற்ற உணர்வில்லாமல், அதே  நேரத்தில் மற்றவரை கஷ்டப்படுத்தாமல் சொல்லுங்கள்.
  • அசர்ட்டிவ்னெஸ் என்பது ஒரு கலை. அதை கற்றுக்கொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த கலையை கற்றுக்கொள்ளும் வரை முயற்சியை கைவிடாது இருத்தல் அவசியம்.
யாரும் புண்படா வண்ணம் பேசுவது எப்படி?
படி 1: அடுத்தவர் பேசுவதற்கு மதிப்பளித்து கவனியுங்கள்
படி 2: நீங்கள் என்ன கவனித்து புரிந்து கொண்டீர்கள் என அடுத்தவருக்கு தெரியப்படுத்துங்கள்
    • கிளிப்பிள்ளை போல திரும்ப சொல்லுங்கள்
    • உங்கள் வார்த்தைகளை போட்டு சொல்லாம்
    • அவர்கள் என்ன உணர்வுடன் பேசினார்கள் என்பதையும் கூறவும்
படி 3: இருந்தாலும் (ஆனால்’ சொல்லாமல்) என்று தொடங்கி உங்கள் கருத்தை உறுதியான குரலில் சொல்லவும்
உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்
மற்றவர்கள் அவரவருக்குரிய உரிமைகளை பெற்றிருக்கிறார்கள் (நீங்களும் தான்). அவற்றை மதித்து செயல்பட வேண்டும். பின்வரும் உரிமைகள் உலக அளவில் பல அறிஞர்களால் கூறப்பட்டவை, சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.
  1. பால், இனம், வயது என எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒரு சமமான தனிமனிதனாக நடத்தப்பட உரிமை
  2. செயல் திறன் கொண்ட மனிதனாக, உரிய மரியாதையோடு நடத்தப்பெற உரிமை
  3. எப்படி தனது நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை
  4. 'எனக்கு தெரியாது' என்று ஒத்துக்கொள்ளும் உரிமை
  5. அழ உரிமை
  6. என்ன வேண்டுமோ அதை கேட்க உரிமை 
  7. (தெரியாமல்) தவறு செய்ய உரிமை
  8. 'முடியாது' என குற்ற உணர்வு இல்லாமல் சொல்லும் உரிமை
  9. தன் தேவைகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் உரிமை
  10. 'எனக்கு புரியவில்லை' என உண்மையை சொல்லும் உரிமை
  11. தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை
  12. சுதந்திரமாக இருக்க/வாழ உரிமை
  13. நான் நானாக வாழ உரிமை (மற்றவர்கள் என்னை எப்படி வாழ சொல்கிறார்களோ அப்படி அல்ல)
  14. தன் மனதை மாற்றிக்கொள்ள உரிமை (யாராலும் கட்டாயப்படுத்தபடாது)

இந்த 21ம் நூற்றாண்டில், நாம் மனித உரிமைகள் பற்றி அதிகம் பேசுகிறோம். கல்வி பெற உரிமை, தகவல் பெறும் உரிமை என சட்டத்தின் மூலமாக அடிப்படை உரிமைகளில் பல உரிமைகளை சேர்க்கும் நாம், மேற்கூறிய சில உரிமைகளை தனி மனித வாழ்வில் இன்றும் மறுத்து தான் வருகிறோம். இதில் முக்கியமான பிரச்சனை என்னெவென்றால், நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் தாண்டி, மேற்சொன்னவாறு பல உரிமைகள் உள்ளன என்பதை தெரியாமல் இருப்பதே!! 
 

Published in In and Out Chennai. To read http://1.bp.blogspot.com/-KYhrqjBjYe8/UPfWJD9DcrI/AAAAAAAABMg/4PqIDLlaaq8/s1600/Jan%2B16%2B-%2B31%2BPage%2B5.jpg and ZOOM

No comments:

Post a Comment