Tuesday, June 1, 2010

வாழ்வில் மறு தேடல்

ஆய்வு/ஆராய்ச்சி என்ற பொருள் கொண்ட ஆங்கிலச்சொல் 'ரிசர்ச்' என்பதாகும். 'ரிசர்ச்' என்பதை மறு தேடல் என்றும் பொருள் கொள்ள முடியும். அதாவது "உண்மையை தொடந்து தேடிக்கொண்டே இருப்பது" என இதனை எடுத்துக்கொள்ள முடியும்.

ஆய்வுகள் குறித்து படித்த பிறகும், பல ஆய்வுகளை செய்த பிறகும் என்னுடைய மனப்பாங்கு, நம்பிக்கை, என்னைப்பற்றி எனக்குள்ள புரிதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றங்களை என்னால் காண முடிகிறது. நான் இப்போதெல்லாம் ஆதாரப்பூர்வமான விஷயங்களை மட்டுமே நான் நம்புகிறேன். ஒவ்வொரு நிகழ்வும் ஏன் நடக்கிறது என உற்று நோக்கும் மனப்பாங்கை நான் பெற்றுவிட்டேன்.

இணைய புரட்சி, செயற்கைக்கோள் தொழில் நுட்பம் என எங்கோ சென்று விட்ட இவ்வுலகின், பல மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணம் கண்ணும் கருத்துமாக நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளே என்றால் அது மிகையாகாது; எவரொருவர் ஒரு துறையை முழுமையாகப் படித்து, முறையாக ஆய்வு செய்கிறாரோ அவருக்கே முனைவர் பட்டம் தரப்படுகிறது. அவரே அத்துறையில் நிபுணர் என்று சமுதாயத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் முன்னோர்களும் "கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்", "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்று உண்மையைக் கண்டறிய ஆய்வு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதனை கூறியுள்ளார்கள்.ஆல்பர்ட் எல்லீஸ் என்ற உளவியல் அறிஞர், "அறிவியற்பூர்வமாக நிருபீக்கப்படாத மூட நம்பிக்கைகளே நம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளன" என்று கூறுகிறார்.

அறிவியலால் உலகிலுள்ள எல்லா விஷயங்களையும் கண்டறிய முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆம்! உண்மை தான்! ஆனால் உலகிலுள்ள பல விஷயங்களை அறிவியல் தொடந்து ஆய்வு செய்து வருகிறது; அதன் பயனாகவே நாம் பல கண்டுபிடிப்புகளை பெற்றிருக்கிறோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை! எடுத்துக்காட்டாக, பல நூற்றாண்டுகளாக தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாதது என்று அறியப்பட்டு வந்தது; ஆனால் இன்று, முறையாக தொடர்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சியால் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அறிவது என்னவென்றால், பல வேளைகளில், ஏற்கனவே அறியப்பட்ட விஷயங்களையும், பெறப்பட்ட அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு, உண்மையை அறிய முற்படாது நாமே நம் வாழ்வை கஷ்டமானதாக ஆக்கிக்கொள்கிறோம். தொடர்ந்து படிப்பதன் மூலமும், தெரிந்து கொள்வதன் மூலமும் மட்டுமே, நம் வாழ்வை நம்மால் வளப்படுத்திக் கொள்ளமுடியும். ஆகவே "இன்று முதல் எதைப் பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், படித்தாலும், செய்தாலும் அதனை ஆய்வுக்கு உட்படுத்தி பார்ப்போம்; இன்றைய வாழ்வை புதிதாக எதிர் நோக்கி கொண்டாடுவோம்." என உறுதி கொள்வோம்.

No comments:

Post a Comment