Friday, April 8, 2011

என்ன படிப்பு? யார் கொடுப்பார் வேலை?

நிறைய இளைஞர்களை வேலை தேடிக் கொண்டிருப்பதை நாம் அவ்வபோது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அந்த இளைஞர்களில் ஒருவர், உங்களின் உடன்பிறந்தவராய் இருக்கலாம், நண்பராய் இருக்கலாம், உங்கள் குழந்தைகளாக அல்லது நீங்களாகக் கூட இருக்கலாம். ஒரு நல்ல சம்பளம் தரக்கூடிய வேலையில் சேர எழுத்து தேர்வுகள், குழு விவாதம், இரு சுற்று நேர்காணல் என பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது. உண்மையில் நிறைய பேருக்கு அவைகள் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. நன்றாக படித்து நிறைய மதிப்பெண் எடுத்தவர்களும் கூட தடுமாறத்தான் செய்கிறார்கள். வேலைக்கு எடுப்பவர்கள் பல்விதமான ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னரே பலரில், ஒரு சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நிறைய நேரங்களில் வேலைக்கு ஆள் எடுப்பது என்பது தேர்ந்தெடுப்பதன்று, வெளியேற்றுவது. பல சுற்றுகள் வைத்து, தகுதியற்றவர்கள் எனக் கணிக்கப்படும் ஆட்களை வெளியேற்றி மிச்சம் இருப்பவர்களை வேலைக்கு (தேர்ந்து) எடுக்கிறார்கள்! என்னதான் அவர்கள் இளைஞர்களிடமிருந்து எதிர்பார்க்கபடுகிறது என்றால் ஒரு பட்டியல் நீளுகிறது - பல்வேறு வகையான மென் திறன்கள், தன்னம்ிக்கை, ஆக்கத்திறன், குழுக்களில் செயல்படும் திறன், நேர்மை, துணிவு, சீரிய குறிக்கோள்கள், தலைமைப் பண்பு, இன்ன பிற. கடைசியாக நிச்சயமாய் ஒன்று, அது ஆங்கிலத்தில் பேசும் திறன். பெரும்பாலான இடங்களில் மேற்கூறிய எல்லாம் ஒருவர் பெற்றிருப்பதாகக் கருதி வேலைக்கு எடுத்தாலும் கூட, உடனே அவர் அந்த குறிப்பிட்ட வேலையை செய்ய உடனே இறக்கிவிடப்படுவதில்லை. வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களை கொஞ்ச நாட்களுக்கு, அவ்வேலையைப் பற்றிய பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவுடன் அவர்களுக்கு வேலையை செய்ய வாய்ப்பு தரப் படுகிறதா என்று கேட்டால் 'இல்லை'. ஏனெனில் அந்த வேலையை செய்யக் கூடிய திறனை பெற்றுவருகிறார்களா என திரும்பத் திரும்ப தேர்வு நடத்தி சரிபார்க்கிறார்கள். அதற்கு பிறகும் கூட அவ்வேலயை ஏற்கனவே செய்பவர்களுடன் அமர்ந்து, அந்த வேலையை சரியாக கற்றுக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நடந்த பின்னரே, முறையான வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது

நிறைய நிறுவனங்கள், மிக அடித்தள வேலைக்கு கூட மிக சிறந்த ஆள் தேவை என நினைக்கிறது. ஏனெனில் இன்று அடித்தள வேலையில் இருப்பவர் பின்னாளில் மிக முக்கிய பணியிடங்களை அடையலாம் என்ற பிண்ணனியில்! இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வேலைக்காக வரும் 70% இளைஞர்கள் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வதில்லை; அதனால் அவர்களுக்கு அவ்வளவு எளிதில், வேலையும் கிடைப்பதில்லை என்கிறது. அப்படியெனில் 30% இளைஞர்கள் மட்டுமே அந்த வகையில் தகுதியானவர்களா? இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவலாகவே எனக்குப் பட்டது. இதற்கு காரணம் இளைஞர்களே என்று அவர்களை ஒரேடியாய் தவறு சொல்ல முடியாது; அடிப்படையில் எதோ ஒரு பிரச்சனை இருப்பதையே இந்த ஆய்வு காட்டுவதாக நான் கருதுகிறேன்.

எஜுகேஷன் எனும் ஆங்கில சொல்லுக்கு மூலச்சொல் 'எடியூஸ்' என்பதாகும்; அதற்கு 'உள்ளிருப்பதை வெளிக்கொணர்தல்' என்று பொருள். அதாவது உள்ளிருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர உதவுவதே கல்வி என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். மேலும் நம் வாழ்வின் முதல் பகுதியான இளைமைக் காலம் வரையில், நாம் படிக்க வைக்கப்படுகிறோம்; அதற்கு பின் வரும் காலங்களில் அந்த படிப்பு நம்மை வழி நடத்தும் என்ற கணிப்பில்! இன்றைய கல்வித்திட்டம் உண்மையில் என்ன செய்கிறது? நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கிறதா? அல்லது மனப்பாடம் செய்து, தேர்வுகளை எழுதி படித்ததை உடனுக்குடன் மறக்க வைக்கிறதா? நிறுவனங்களில் எதிர்பார்க்கப்படும் சிந்தனை மற்றும் ஆக்கத்திறன்களை வளர்க்க அது ஏதாவது உதவி புரிகிறதா? வாழ்க்கை முழுவதற்கும் பயன்படும் விஷயங்களை நமக்கு சொல்லித்தருகிறதா? இந்த கேள்விகளுக்கு பெரிய அளவில் 'இல்லை' என்பதே பதில்!

இவற்றையெல்லாம் உணந்து, நம்மை சிந்திக்க வைக்கும், ஆக்கத்திறனை மேம்படுத்தும் ஒரு கல்வித்திட்டம் வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் எதிர்காலத்தில் நடைமுறை படுத்தப்படும் என்று நம்பிக்கை கொள்வோம். சரி! நிகழ்காலத்தில் என்ன செய்வது? குழந்தைகளை எவ்வாறு இந்த போட்டி உலகில் வாழ உதவுவது?

கல்வித் திட்டங்களில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் போது, அவற்றைக் களைய என்ன செய்வது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டுமன்றோ? நாம் முதலில் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, நம் பள்ளி கல்லூரிகளால் வாழ்க்கை முழுவதற்கும் பயன்படும் ஒரு முழுமையான கல்வியை அளிக்க முடியாது என்னும் உண்மையை! நிறுவனங்களால் எதிர்பார்க்கப்படும் மென்திறன்களை வளர்க்க, குடும்ப-பொருளாதார நடைமுறைகளில் பங்கேற்பது, விளையாட்டு, பலருடனும் பேசி பகிர்ந்து கொள்வது, வாழ்க்கைக் கல்வி புத்தங்கள் படிப்பது என பல வழிகள் உள்ளன. இதனயே ஆங்கிலத்தில் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி என குறிப்பிடுகிறார்கள். எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி என்பது பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதை மட்டும் குறிப்பதில்லை என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் பகுதி நேர வேலைகள், அம்மென்திறன்களை எளிதில் தர வல்லவை. படிக்கும் போது செய்யப்படும் பகுதி நேர வேலைகள், பின்னாளைய முழு நேர வேலைகளுக்கு ஒத்திகையாக இருக்கும். பள்ளி கல்லூரி வேலை நாட்களில் அவ்வாறு செய்யமுடியாமல் போனாலும் கூட, விடுமுறை நாட்களில் செய்யலாம் அல்லவா?

எனவே, தயவு செய்து விடுமுறை நாட்களிலாவது வழக்கமாக செய்யும் பள்ளி கல்லூரி வேலைகளை செய்யாமல், புத்துணர்வு அளிக்கும் வேறுபட்ட செயல்களை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு வெளியில் உள்ள கல்வியை பெற்றிடமுடியும்! நம்மை உயரிய வேலைகளுக்குத் தகுதிபடுத்திக் கொள்ளமுடியும்! தொலை நோக்கில் நம் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இது உதவும்!!

3 comments:

  1. உண்மை... மிக அருமை.

    ReplyDelete
  2. kalvi yendra tamil sollirkku agarathiyil "thonduthal" yendru porul. oruvanukkul irukkum peratralai thondi yenduthal yenpathayeh athu kurikkum.

    naam palli, kaloorigalil padippathu sinthanai valarvatharkaaga allamal, verumana panam sambathippathu yendragi pona soolalil.

    velaikku thayaar seiyum oru iyanthira thana mana kalviyil sinthanaikku yethu neram.

    our education system is text based one and not student based.

    ReplyDelete
  3. Idhu padika romba nala irunthuchu.. And End part unmaiyana visayam. Thanks for written this. Career Counseling in Chennai

    ReplyDelete