Thursday, April 14, 2011

கல்வி-எவ்வழியில்? எம்மொழியில்?


ஒரு தாய் தன் குழந்தையுடன் பேசும் மொழியைத் தான், நாம் தாய் மொழி என்று அழைக்கிறோம். ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு தான் பேசும், குறிப்பிட்டதொரு மொழியை பிறந்தது முதல் தொடர்ந்து புகட்டி வருகிறார். தாயைத் தொடர்ந்து தந்தை, மற்ற குடும்பத்தார்கள் என அனைவரும் அம்மொழியில் குழந்தையுடன் உரையாடி வருவர். அக்குழந்தையும் புரியாமல் போனால் கூட, தொடர்ந்து அம்மொழியை கவனித்துக் கேட்டுக் கொண்டே வரும். இவ்வாறு மெதுவாக குழந்தைகள், தனது தாய் மொழியை முதலில் புரியாமல் கேட்டும், இரண்டாவதாக சொற்களை அதற்குரிய பொருளுடன் பொருத்திப்பார்த்தும், பிறகு தப்பும் தவறுமாக பேசியும் கற்றுக்கொள்கின்றனர். கடைசியாகத்தான் எழுத்து வடிவமும், இலக்கணமும் கற்பிக்கப்படுகிறது. முதலில் பேச்சு வடிவத்தைக் கற்பதன் மூலம், சொற்களின் ஆழமான மற்றும் விசாலமான அர்த்தங்களையும், அச்சொற்கள் பயன்படுத்தப்படும் இடங்களைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும். ஆகவே தான் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்க பேச்சு வடிவத்தில் தொடங்கி, கடைசியாகத்தான் எழுத்துவடிவத்தைதையும் இலக்கணத்தையும் கற்றல் வேண்டும் என மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

பிறந்தது முதல் ஆங்கிலத்தைக் கேட்டு, தாயும் மற்ற குடும்பத்தாரும் குழந்தையோடு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாடி வந்தார்களேயானால், ஆங்கிலவழியில் கல்வி என்பது அக்குழந்த்தைக்கு மிகவும் உகந்தது என்பேன். ஆனால் தமிழைத் தாய் மொழியாய் கொண்டவர்கள், ஆங்கிலத்தை வீட்டில் பேசாதவர்கள் கூட பெரும்பாலும் ஆங்கில வழியிலேயே தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். ஆங்கிலத்தில் புலமை என்பது இக்காலத்தில் மிகவும் அவசியமானது, அதைப் பெற ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது; ஆங்கிலத்தில் கற்பதன் மூலம், உலக விஷயங்களை அவர்களால் அதிகம் கிரகித்துக் கொள்ள முடியும், உலகம் முழுவதும் செல்ல முடியும்; பின்னாட்களில் நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பளம் பெற உதவும்; சுதந்திரமாக வாழ உதவும் எனப் பலவாறு பெற்றோர்கள் தங்கள் நோக்கங்களை கூறுவார்கள்.

பல ஆங்கில வழியில் கற்கும் குழந்தைகளிடம் நான் கொண்ட உரையாடலில், பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தை முதலில் எழுத்து வடிவமாகவும், பின்னரே பேச்சு வடிவமாகவும் கற்றுக்கொள்ளத் தொடங்கினர் என்றும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற புரியாமல் மனப்பாடம் செய்கின்றனர் என்றும் நான் அறிந்து கொண்டேன். மேலும் அவர்களால் சொற்களின் ஆழமான மற்றும் விசாலமாக அர்த்தங்களை புரிந்து கொள்ள இயலவில்லை என்பதையும், மனப்பாடம் செய்வதனால் கல்வி அவர்களுக்கு கசப்பாய் உள்ளதென்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

தாய் மொழியில் கல்வி கற்ற எனக்கு அமைந்ததைப் போல அவர்களுக்கு இனிமையானதாய், உள்ளத்துக்கு உரம் சேர்ப்பதாய் கல்வி அமையாமல் போனதைக் கண்டு நான் மனம் நொந்து போனேன். அடிப்படையில் மெக்காலே பிரபுவின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கல்வி முறையையே நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம். வெள்ளையனுக்கு எழுத்தராய் இந்தியரை ஆக்கவே அக்கல்வி முறை அன்று பயன்பட்டது. நம்மை சிந்திக்க விடாது, கட்டளைகளை நிறைவேற்றும் அடிமைத்தனத்தையே இந்தியருக்கு அக்கல்வி தந்தது. 1835 முதல் ஒன்றறை நூற்றாண்டுகளுக்கு மேலாக அக்கல்வித்திட்டத்தில் மூழ்கிப் போன நாம், அதிலிருந்து வெளிவர முடியாமல் இன்னும் தவிக்கிறோம். வேற்று மொழியில் எழுத்தர்களை உருவாக்கும் இக்கல்வி முறையால் நம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் ஒரு தொய்வு ஏற்பட்டு விட்டது.

மேலை நாடுகள் அறிவியற் கருவிகளை, தத்துவங்களை, இலக்கியங்களை உருவாக்கித்தர, நாம் அவற்றை நுகரும் நுகர்வோராக மாறிவிட்டோம். இந்தியாவில் இங்கும் அங்கும் சிலர் அறிவியற் கருவிகளை, தத்துவங்களை, இலக்கியங்களை உருவாகினாலும், மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது அவைகள் மிகக் குறைவானவையே! நம் நாட்டின் மனித வளத்திற்கு, நாம் எத்தனை அப்துல் கலாம்களையும், கண்ணதாசன்களையும், சி.வி. இராமன்களையும், விவேகானந்தர்களையும் உருவாக்கி இருக்க வேண்டும். அவ்வாறு நடந்ததா? இல்லையே!!

கல்வி என்பது வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்; ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து, சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இந்நோக்கங்களை நிறைவேற்றுவதையே உண்மையில் கல்வி என நான் கருதுவேன். நம் கல்வி முறை குழந்தைகளை அவ்வாறு ஆக்குகிறதா? ஒருவேளை "இல்லை" என்பது உங்கள் விடையாக இருந்தால், என்ன செய்வது? என்னைக் கேட்டீர்களானால், பெற்றோர்கள் மட்டுமே மேற்கூறிய சீரிய நோக்கங்களை நிறைவேற்ற குழந்தைகளுக்கு உதவ முடியும். பெற்றோர்கள் தன் குழந்தைகள் எந்த வழிக்கல்வி படித்தாலும் அவர்கள் புரிந்து படிக்கிறார்களா? சொற்களின் ஆழமாக மற்றும் விசாலமான அர்த்தங்களை விளங்கிக்கொள்கிறார்களா? அவர்களின் சிந்தனை ஒட்டம் மற்றும் ஆக்கத்திறன் முறையாக உள்ளதா? என்பனவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் அவ்வாறு செய்ய முடியாமல் போனால், பெற்றோர்கள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கான பொருளையும் புரிந்து படிக்க அவர்களுக்கு உதவ வேண்டும்; அவர்களின் சிந்தனைகளை தூண்டி விட பல்வேறு உத்திகளை கையாள வேண்டும்; முடியாது போனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வல்லமை பெற்றவர்களையாவது நாட வேண்டும். ஒன்றும் நடக்கவில்லையென்றால், ஒரு எளிய வழி உள்ளது! தமிழ் வழிக் கல்விக்கு குழந்தைகளை மாற்றி அவர்களை புரிந்து படிக்க வையுங்கள். மேலும் ஆங்கிலப் புலமை பெற மாலை நேர சிறப்புப் பயிற்சி கொடுங்கள். இதை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு கடினமாகத் தான் இருக்கும், நன்கு ஆழ்ந்து சிந்தித்து பார்த்தீர்களானால், இதில் உள்ள உண்மை உங்களுக்கு நிச்சயம் புரியும்!

கடைசியாக ஒரு கேள்வி! நீங்கள் ஒருவேளை ஆங்கில வழியில் கல்வி கற்றிருந்தால், உங்கள் பள்ளி நாட்களை எண்ணிப் பாருங்கள். உங்களுக்கும் கல்வி கசப்பாக இருந்ததா? அவ்வாறு கசப்பாக இருந்ததெனில், உங்களுக்கு இருந்ததைப் போல உங்கள் சந்ததியனருக்கும் கல்வி கசப்பாக இருக்க வேண்டுமா??

1 comment:

  1. மிகச் சிறந்த பதிவு கார்த்திக். மொழி மற்றும் அதனைச் சார்ந்த அறிவு குறித்து உளவியல் சார்ந்த பார்வையை வைத்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete