Thursday, May 5, 2011

அனைவருக்கும் அவசியம் தேவை அசர்ட்டிவ்னெஸ்!


நாம், ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது, சில நேரங்களில் மற்றவர் மனம் புண்படுமாறு நடந்து கொள்கிறோம் அல்லது மற்றவர் மனம் புண்படக்கூடாது எனக் கருதி நம் மனதை நாமே துன்புறுத்திக் கொள்கிறோம். புண்படுதல் என்பது மனிதத்திற்கு ஏற்றதல்ல. அது தனக்கு ஏற்பட்டாலும் சரி, மற்றவருக்கு ஏற்பட்டாலும் சரி, இரண்டுமே தவறானது தான்.

இந்த புண்படுதலை போக்க உளவியலால் முன் வைக்கப்படும் திறனே அசர்ட்டிவ்னெஸ்.

'அசர்ட்டிவ்னெஸ்' என்பதன் பொருள்:
  • மற்றவரையும் கஷ்டப்படுத்தாது, தன்னையும் கஷ்டப்படுத்தாது தொடர்புகொள்ளல் மற்றும் நடந்து கொள்ளுதல்
  • தன்னையும், மற்றவர்களையும் சமமாக பாவித்தல்
  • மற்றவர்களை கஷ்டப்படுத்தாது, தான் தானாக வாழ்தல்
  • தன் தேவைகளையும், உணர்வுகளையும் மற்றவருக்கு ஒரு பொருத்தமான/சரியான முறையில் வெளிப்படுத்துதல்
  • மற்றவர்கள் மற்றும் தன் மீது கோபப்படாமலும், வருத்திக்கொள்ளாமலும் செயல்களை செய்தல்
  • மற்றவர்களின் பிரச்சனைகளை, தன் பிரச்சனைகளாக பாவித்து பொறுமையாய் கவனித்து கேட்டு புரிந்து கொள்ளுதல்
  • அவரவருக்கு உரிய உரிமைகளை மதித்தல்
  • நம் தேவைகளையும் மற்றவர் தேவைகளையும் அனுசரித்து முடிவுகளை எடுத்தல்

எனவே அசர்ட்டிவ்னெஸ் என்பதை தமிழில் 'யாரும் புண்படா வண்ணம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளல்' என மொழி பெயர்க்கிறேன். 

எவ்வாறு இதனை நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பது?
  • முடிந்த வரை மற்றவரையும், உங்களையும் வருத்தாது, உங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் நேர்மையாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
  • மற்றவர்கள் விரும்பினால் மட்டும் அவர்கள் மாற உதவி செய்யுங்கள். மற்றவர்களை மாற்ற உங்களது வாழ்வை அடமானம் வைக்காதீர்கள்/மெனக்கெடாததீர்கள்,மெனக்கெட்டு விரக்தி அடையாதீர்கள்.
  • உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அனைவருக்கும் உரிமை உண்டு. உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டால், நல்லது. இல்லையெனில் காலம் அவர்களுக்கு தேவையானதை கற்றுக்கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  • மற்றவர்கள் அவரவருக்குரிய உரிமைகளை பெற்றிருக்கிறார்கள் (நீங்களும் தான்). அவற்றை மதித்து செயல்பட வேண்டும். பின்வரும் உரிமைகள் உலக அளவில் பல அறிஞர்களால் கூறப்பட்டவை, சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.
  1. பால், இனம், வயது என எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒரு சமமான தனிமனிதனாக நடத்தப்பட உரிமை
  2. செயல் திறன் கொண்ட மனிதனாக, உரிய மரியாதையோடு நடத்தப்பெற உரிமை
  3. எப்படி தனது நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை
  4. 'எனக்கு தெரியாது' என்று ஒத்துக்கொள்ளும் உரிமை
  5. அழ உரிமை
  6. என்ன வேண்டுமோ அதை கேட்க உரிமை 
  7. (தெரியாமல்) தவறு செய்ய உரிமை
  8. 'முடியாது' என குற்ற உணர்வு இல்லாமல் சொல்லும் உரிமை
  9. தன் தேவைகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் உரிமை
  10. 'எனக்கு புரியவில்லை' என உண்மையை சொல்லும் உரிமை
  11. தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை
  12. சுதந்திரமாக இருக்க/வாழ உரிமை
  13. நான் நானாக வாழ உரிமை (மற்றவர்கள் என்னை எப்படி வாழ சொல்கிறார்களோ அப்படி அல்ல)
  14. தன் மனதை மாற்றிக்கொள்ள உரிமை (யாராலும் கட்டாயப் படுத்தபடாது)

இந்த 21ம் நூற்றாண்டில், நாம் மனித உரிமைகள் பற்றி அதிகம் பேசுகிறோம். கல்வி பெற உரிமை, தகவல் பெறும் உரிமை என சட்டத்தின் மூலமாக அடிப்படை உரிமைகளில் பல உரிமைகளை சேர்க்கும் நாம், மேற்கூறிய சில உரிமைகளை தனி மனித வாழ்வில் இன்றும் மறுத்து தான் வருகிறோம். இதில் முக்கியமான பிரச்சனை என்னெவென்றால், நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் தாண்டி, மேற்சொன்னவாறு பல உரிமைகள் உள்ளன என்பதை தெரியாமல் இருப்பதே!! 

No comments:

Post a Comment