Sunday, May 1, 2011

ஆசிரியர்கள் பல வகை; ஒவ்வொருவரும் ஒரு வகை!

திரு. பாரதி கிருஷ்ணகுமார், வேலூர் அமைதி பூங்கா பள்ளியில்

திரு. பாரதி கிருஷ்ணகுமார் ஒரு சமூக சிந்தனையாளர், சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து குறும்படங்களை இயக்குபவர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து, வெண்மணி தீண்டாமை கொடுமையால் பலர் கொல்லப்பட்டது போன்ற குறும்படங்கள் அவரை பலருக்கும் தெரியப்படுதியது. நான் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில், நான் பிறப்பதற்கு முன்பே ஆங்கில இலக்கியம் படித்தவர். தற்போது சென்னை சாலிகிராமத்தில் வசித்துவருகிறார். வேலுர் அருகிலுள்ள கணியம்பாடி கிராமம் அமைதி பூங்கா பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆசிரியர்களின் மன நலத்தையும், அவர்கள் மாணவர்கள் பெற்றோர்களிடம் நடந்துகொள்ளும் விதங்களை மேம்படுத்தவும் உளவியலாளனாக அங்கு அழைக்கப்ப்ட்டிருந்தேன். நான் ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்து கொண்டிருந்த போது, அவர் பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். அவர் ஆசிரியர் கூட்டத்தில் பேச வந்த போது, நானும் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அவர் பேசி என்னை பாதித்த, நான் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கும் விஷயங்களை இங்கு எழுதுகிறேன். அவர் பேசும் போது என்னால் குறிப்புகள் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஒன்று, அவரது பேச்சின் வேகமும், சாரமும். இரண்டு, குறிப்பு எடுக்க தலை குனிந்தால் அவர் முகபாவங்களை பார்க்க முடியாமல் போய்விடும். பின்வருமாறு அவர் பேசினார்.

வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்கள் சொர்க்கத்திற்கு செல்லமாட்டார்கள் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.

விருது நகர் மாவட்டத்தில் சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தில் குழந்தை தொழிலார்களாக இருந்த பலரை பள்ளியில் சேர்த்து, இரண்டு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் தொடர்ந்து கல்வி பெறுகிறார்களா என்பதையும் நான் கண்காணித்து வந்தேன். இதில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனையும் நான் பள்ளிக்கு சேர்ர்த்துவிட்டிருந்தேன்.வேலைப்பளு காரணமாக அதற்கு மேல் என்னால் அவர்களை கண்காணிக்க முடியாது போனது. பிறகு ஒராண்டு கழித்து, அம்மாணவர்களை காணச்சென்றதில், மேற்குறிப்பிட்ட சிறுவன் பள்ளியில் இல்லை. ஆசிரியரிடம் கேட்டால் சலிப்போடு எனக்குத் தெரியாது என சொல்லிவிட்டார்கள். அவனை கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று அவனை சென்று பார்த்தால் அவன் பழைய மாதிரி மாடுமேய்த்துக்கொண்டிருந்தான். உன்னை அரும்பாடுபட்டு பள்ளியில் சேர்த்துவிட்டால், ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டால், அதைப்பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டான். கடலை மிட்டாய் வாங்கி கொடுத்து தாஜா செய்து கேட்டதில் நடந்ததை சொன்னான். அடிக்கடி ஆசிரியர் அவனை "நீ மாடு மேய்க்கதாண்டா லாயக்கு" என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் மீண்டும் பள்ளியில் சேர மறுத்துவிட்டான். முதல் தலை முறை கல்வி பெறும் அவன் கேட்டான் "எனக்கு நல்லா மாடு மேய்க்க தெரியும்-னு எனக்கே தெரியும், இதை கண்டுபிடிச்சு சொல்றதுக்கா அவங்களுக்கு அவ்வளவு பெரிய படிப்பும், டீச்சர் வேலையும்?"

ஒரு ஆசிரியர் கல்வி ஆண்டின் முதல் நாளில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு மாணவன் வெறித்து ஜன்னலையே பார்த்துகொண்டிருந்தான். இதை கவனித்த ஆசிரியர், "என்னடா, நான் ஆரம்பத்திலேர்ந்து பாக்குறேன், ஜன்னலையே பாத்துக்கிட்டு இருக்க? அங்க என்ன தெரியுது?" எனக் கேட்டார். "எங்க அம்மா 'கேட்' பக்கத்திலிருந்து என்ன பாத்துகிட்டு இருந்தாங்க, அதான் பாத்தேன்." " அம்மாவாவது? ஆட்டுக்குட்டியாவது? இங்க வா, கிளாஸ்-க்கு வெளிய முட்டி போடு, அடுத்த டீச்சர் வர வரைக்கும் இப்படியே இருக்கணும், என்ன?" எனக் கூறிய ஆசிரியரிடம் என்ன சொல்வது எனத்தெரியாமல் அமைதியாக தலையாட்டி விட்டு முட்டி போட்டுக் கொண்டிருந்தான். வகுப்பை விட்டு சென்ற ஆசிரியர், அடுத்து வரும் ஆசிரியரிடம் நடந்ததை சொல்லிவிட்டு அவன் முட்டி போட்டிருக்கிறானா என கண்காணிக்கவும் சொன்னார். அம்மாணவனின் பெயரைக்கேட்ட அந்த ஆசிரியரோ, வேக வேகமாக ஓடிச்சென்று அவனை உள்ளே உட்கார வைத்து விட்டு, இந்த ஆசிரியரை கண்டு சொன்னார் "லீவுல அந்த பையனோட அம்மா செத்துப்போச்சு" தன் தவறை எண்ணி அழ ஆரம்பித்தார் அந்த ஆசிரியர்.

ஆசிரியர்களின் தவறுகள் மாணவர்களை எந்தளவுக்கு பாதிக்கிறது பாருங்கள். அதே போல் பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களால் மறக்க முடியா
த வாழ்வை மாற்றியவர்களும் இருக்கிறார்கள். நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு என் கை பிடித்து எழுத கற்றுக்கொடுத்த எங்கள் லில்லி டீச்சர் தான் காரணம், என்னால் அவரை என்றும் மறக்க முடியாது. அவர் நிச்சமாய், சொர்க்கம் என்று ஒன்றிருந்தால் சொர்க்கத்துக்கு தான் நிச்சயம் சென்றிருப்பார். என் கையெழுத்து அழகாக இருக்க எனது ஆசிரியர் இராமகிருஷ்ணன் தான் காரணம். அவர் தான் சொன்னார் "தலையெழுத்து நல்லா இருந்தா, கையெழுத்து நல்லா இருக்காது, கையெழுத்து நல்லா இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காது சொல்றவங்களை நம்பாத, ஒ தலையெழுத்த யாரலும் பாக்கமுடியாது, ஒ கையெழுத்த தான் எல்லாரும் பாப்பாங்க, அதனால அழகா எழுதணும்". என் கல்லூரிக்காலங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மதுரைக்கல்லூரியின் நாரயணன் என்ற தமிழாசிரியர். அவரிடம் படித்த நாங்கள் பலரும் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று விட்ட நிலையில், அவர் இறந்த செய்தியை எனது நண்பன் தொலைபேசியில் சொல்கிறான் "நம்ம நாரயணன் சாரு எறந்துட்டாரு. He was found dead on a road side" சொல்லும் போதே வார்த்தைகள் அழுகையாகின்றன. எனக்குத்தெரியவில்லை, தன் தாயோ தந்தையோ இறந்ததற்கு கூட நாங்கள் அவ்வளவு அழுதிருப்போமா என்று!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பள்ளியின் விழாவிற்கு, அப்பள்ளியின் பழைய மாணவர்கள் பலரை அழைத்து அவர்கள் அனைவருக்கும் "என் பள்ளிக்கால நினைவுகள்" என ஒரே தலைப்பு கொடுத்து பேசச்சொன்னார்கள். நானும் அந்த பள்ளி விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். பழைய மாணவரான் அமைச்சர் துரை முருகனும் அங்கு பேசிகிறார். தான் ஒரு அமைச்சர் என்பதை மறந்து, குழந்தையாகி தன் பள்ளிக்கால நினைவுகளை நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். நான் இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறேன் என்றால் அதற்கு இந்த மண்ணும், ஆசிரியர்களும் தான் காரணம் என கதறி அழுகிறார். அழுதால் இதயத்திற்கு நல்லதல்ல என்று தடுக்க சென்ற அவரது உதவியாளரை, மனம் விட்டு அழுதால் நல்லது தான் எனக் கூறி பிடித்துக்கொண்டேன்.

தான் எந்த வகையான ஆசிரியராக இருக்க வேண்டுமேன நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆசிரியருக்கு மரியாதை கொடுப்பார்கள், பட்டப் பெயர் வைக்கமாட்டார்கள். ஒரு முறை, ஒரு பள்ளி மாணவனை கேட்டேன் "புதுசா வந்திருக்காங்களே அந்த டீச்சர் பெரு என்னடா? " அவன் சொன்னான் "இனிமே தான் வைக்கணும்!".

நீங்கள் மாணவர்களை மேம்படுத்தினால், எல்லா பேருந்துகளிலும் உங்களுக்கு நிச்சமாய் ஓர் இருக்கை உண்டு. கடமைக்கு வந்து சென்றீர்கள் என்றால்..................................................................................................!

No comments:

Post a Comment