Wednesday, June 15, 2011

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்-எதிர்பார்ப்புகள்! ஏமாற்றங்கள்!! தீர்வுகள்!!


பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், மணமகனுக்கு மணமகள் இப்படி இருக்க வேண்டுமென ஆயிரம் கனவுகள்,எதிர்பார்ப்புகள் அவரின் குடும்பத்தினருக்கு வேறாயிரம் கனவுகள், எதிர்பார்ப்புகள். இதே நிலை தான் மணப்பெண்ணுக்கும், அவரது வீட்டாருக்கும்! இவர்களின் கனவுகளுக்கும்,எதிர்பார்ப்புகளுக்கும் பின்னால் இருப்பது அவர்களின் நம்பிக்கைகள், தங்களின் கடந்தகால கசப்பான நிகழ்வுகள் மற்றும் அவை மீண்டும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும். இந்த எதிர்பார்ப்புகளால் தான் பல நேரங்களில் திருமணங்கள் தள்ளிப்போகின்றன. மணமகனும், மணமகளும், அவர்களது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

முந்தின காலத்தில் மணமகன் வீட்டார் சொல்வது போலெல்லாம் மணமகள் வீட்டார் ஆடினால் தான் பெண் பார்க்கும் படலம் திருமணத்தில் போய் முடியும். இன்றைய நவீன காலத்தில், முன்பிருந்தது போல் மணமகன் வீட்டின் கையே ஒங்கி இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. இப்பொழுதெல்லாம், மணமகளும், அவரது வீட்டாரும் கூட பல நிபந்தனைகள் விதிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக மாப்பிள்ளை சொந்த வீடு வைத்திருக்க வேண்டும், அரசு வேலையில் இருக்க வேண்டும், தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை செய்யக்கூடாது என்பது போன்று!

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு வழியாய் திருமணம் முடிவதற்குள், இரு வீட்டாரிடத்திலும் உள்ள எதிர்பார்ப்புகள் பல சங்கடங்களை உருவாக்கி இரு வீட்டாரையும் பல கவலைகளுக்குள் உள்ளாக்கி இருக்கும். இதற்கு நடுவில் சில மணமகள் வீட்டார் மாப்பிள்ளையை பற்றி விசாரிக்கிறேன் என்று டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து துப்பு துலக்குகிறார்கள். மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்வது அவசியம் தான் என்றாலும் டிடெக்டிவ் ஏஜென்சி வரையிலும் செல்வது சரி தானா? இவர்கள் தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா அல்லது குற்றவாளியை உளவு பார்க்கிறார்களா? இந்த விஷயம் மாப்பிள்ளைக்கு தெரிய வந்தால் எப்படி இருக்கும்? என்றெல்லாம் அவர்கள் நினைத்து பார்ப்பதில்லை.

சரி, இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியான இல்லறங்களை அமைப்பதில்லை. திருமணத்திற்கு முன்பு உள்ளது போன்றே, திருமணத்திற்கு பின்பும், மணமக்களும் அவரது வீட்டாரும் பல எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு சங்கடப்படுகிறார்கள். பழைய காலத்தில் வேண்டுமானால் மணப்பெண்ணும் அவரது வீட்டாரும் மணமகன் வீட்டாரின் வீம்புகளுக்கு அனுசரித்து போனார்கள். அதனால் அன்று அமைதியான இல்லறம் அமைந்திருந்தது. ஆனால் இன்றோ, இரு வீட்டாரும் சரி சமமாய் வீம்பு விட, உடைந்து போவது மணமக்களின் இல்லறங்கள் தான். குழந்தைகள் இருந்தால் அவர்களின் கதி அதோகதி தான்.

திருமணங்கள் என்ன தான் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டாலும், வாழப்போவது என்னவோ மணமக்கள் தான். அதில் வரும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகம் இருக்க வேண்டியது மணமக்களுக்கு தான். "இந்தியாவில் திருமணம் என்பது இருவருக்குள் அல்ல, இரு குடும்பங்களுக்குள்" என்பதை ஓர் உளவியலாளனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இச்சொற்றொடர் மணமக்கள் தங்கள் திருமணத்தை கட்டி காக்கும் பொறுப்பை தட்டி கழிப்பதாய் எனக்கு தோன்றுகிறது.

மேலும் அதிக பணமும் படிப்பும் இக்கால திருமணங்களில் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்குகின்றன. அதனால் அதிகம் படிக்க கூடாது, சம்பாதிக்க கூடாது என சொல்ல வரவில்லை. யார் என்ன படித்தாலும், பணம் எவ்வளவு சம்பாதித்தாலும், பல அனுசரிப்புகள், விட்டு கொடுத்தல்கள் இருந்தால் தான் இல்லறம் நல்லறமாய் இருக்க முடியும். எந்த ஒரு திருமணத்திலும் 100% எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது.


இதை புரிந்து கொண்டு மணமக்கள் இருவரும் வயது பாகுபாடின்றி, பால் பாகுபாடின்றி திருமணத்தை தங்களது பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது மகனும், மகளும் பொறுப்புகளை ஏற்க உதவி மட்டுமே செய்ய வேண்டும்.பிரச்சனைகளை அவர்கள் இருவரும் சரி செய்ய முடியாமல் போனால் மட்டுமே அவர்கள் அனுமதியோடு, பெற்றோர்கள் தலையிட வேண்டும்.

No comments:

Post a Comment