Tuesday, July 5, 2011

என்று ஒழியும் இந்த பொறியியல் மோகம்? பகுதி-1

சமீபத்தில் வந்த செய்தியின் படி, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 495. மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,37,800. எனக்குத் தெரிந்தவரையில், பொறியியலில் சேரும் மாணவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் தாங்கள் விரும்பிய படிப்பை அல்லது கல்லூரியை எதோ ஒரு காரணத்தால் விட்டுவிட்டு கிடைத்த படிப்பை, கிடைத்த கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த இழி நிலைமைக்கு பெற்றோர்கள் மற்றும் சமுதாயம் ஆற்றிய பங்கு மிக அதிகமானது.

மாணவர்கள் தங்களின் படிப்பை தானாக தேர்ந்தெடுக்காது, பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற தங்களது ஆசைகளை, கனவுகளை குப்பையில் போடுகிறார்கள். பெற்றோர்களின் வற்புறுத்தலால் தேர்ந்தெடுத்த துறையில் ஆர்வத்தை கொண்டுவந்து விட மெனக்கெடுகிறார்கள். தன்னால் படிக்க முடியாமல் போன படிப்பை தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து, பெற்றோர்கள் தாங்களே அந்த படிப்பை படித்து போல், அதற்கான சமூக அங்கீகாரத்தை அடைந்து விடுவதாக நினைக்கிறார்கள். நிறைய பெற்றொர்களுக்கு, மருத்துவம் அல்லது பொறியியல் - இவற்றில் ஒன்றை தான் தனது குழந்தை படிக்க வேண்டும், அப்படியானால் மட்டுமே நிறைய சம்பாதிக்கவும், சமூக அங்கீகாரத்தையும் பெற முடியும் என நினைக்கிறார்கள். அவர்களின் இளமைக்கால சமூகத்தில் மருத்துவத்துக்கும், பொறியியலுக்கும்இருந்த மரியாதை இப்பொழுதும் இருப்பதாக எண்ணுகிறார்கள்.

சமுதாயமோ வேலை வாய்ப்பையும், பணம் சம்பாதிப்பதையும் மனதில் கொண்டு பொறியியல் படிப்பே சிறந்தது என்று சான்றிதழ் அளிக்கிறது. இச்சான்றிதழை பெருகி வரும் பொறியியல் கல்லூரிகள் தங்களின் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதற்கு ஆதாரம், விலை வாசி உயர்ந்துவிட்டாலும், தமிழக அரசு நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கல்விக்கட்டணத்தை உயர்த்தவில்லை. காரணம் என்னவென்றால் பொறியியல் கல்லூரிகளில் வரவு அதிகம், செலவு குறைவு என்கிறது.

பெற்றோர்களாலும், சமுதாயத்தாலும் மருத்துவம் அல்லது பொறியியலை படிக்க சிறு வயது முதலே குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.
குழந்தைகளின் ஆர்வம் எங்கிருக்கிறது அவர்களுக்கு அந்த படிப்புகளை படிக்க தேவையான திறன்கள் இருக்கிறதா என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், படித்தால் மருத்துவம், விட்டால் பொறியியல் என்று கூறி குழந்தைகளை அதற்கேற்றவாறு தயார் செய்ய தனிப்பயிற்சி வகுப்புகள் பலவற்றுக்கு செல்ல வைக்கிறார்கள். தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தால் போல் இல்லையெனில், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள், திட்டுகிறார்கள். வேறு சில பெற்றோர்கள் தாங்கள் படும், பட்ட கஷ்டங்களை சொல்லி, "நீ மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க முடிந்தால் மட்டுமே எனது குழந்தை" என நிபந்தனை அன்பு காட்டுகிறார்கள்.

நான் ஒரு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில், கல்வி ஆலோசனைகள் அளித்துக் கொண்டிருந்த போது, ஒரு பெற்றோர் தொலைபேசியில் கேட்கிறார் "என் மகனை மெக்கானிக்கலில் சேர்ப்பது நல்லதா அல்லது சிவிலில் சேர்ப்பது நல்லதா?". எனக்கு மனதுக்குள் கோபம் வந்துவிட்டது. "என்னடா இது? தன் மகனிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் வந்து கேட்கிறார்கள்?" என்று நினைத்துக்கொண்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், உங்கள் மகனுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதில் சேருங்கள்!" என்று சொல்லிவிட்டேன். நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சி முடிந்த பிறகு சொன்னார். "தொலைக்காட்சிகளில் கல்வி ஆலோசனைகள் சொல்பவர்களில் நீங்கள் மிகவும் வித்யாசமானவர், வேலை வாய்ப்பை மனதில் கொண்டே மற்றவர்கள் ஆலோசனைகள் சொல்வார்கள், நீங்களோ மாணவர்களின் விருப்பம் பற்றி கேட்கிறீர்கள்! எனக்கு தெரியவில்லை, பெற்றோர்கள் உங்கள் ஆலோசனைகளை விரும்பி இருப்பார்களா என்று!"

ஓர் உளவியலாளனாய், என்னால் அறிவியற்பூர்வமான உண்மைகளை மட்டுமே கூற முடியும். அறிவியல் சொல்கிறது, ஒரு மாணவன் படிப்பை தேர்ந்தெடுக்க அவனது ஆர்வம், திறன்கள், குணங்கள்/பண்புகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று! அவ்வாறு அவர்கள் படிப்புகளை தேர்ந்தெடுக்கும் போது, வேலை வாய்ப்பை சரியாக கண்டுபிடிக்கிறார்கள், கண்டுபிடிக்க முடியவில்லை எனில் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள். தாங்கள் விரும்பிய படிப்பை படிக்க முடியாது, வாழ்க்கை சுழலில் சிக்கிக்கொண்டு, என்னிடம் உளவியல் ஆலோசனை பெற வருபவர்களின் வாழ்க்கை பெரும்பாலான நேரங்களில் பின்வருமாறு தான் இருக்கிறது.

பெற்றோர்களின் வற்புறுத்தலால், மனதுக்குள் புழுங்கி புழுங்கி தங்களை அப்படிப்புகளை படிக்க திறனுள்ளவர்களாக மாற்றிகொள்ள முயல்கிறார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றாலும், தங்கள் வாழ்க்கையின் அர்தத்தை காற்றில் பறக்கவிட்டு, கனவுகளை தியாகம் செய்கின்றனர். இயற்கையில் இருக்கும் திறன்களை விட்டு விட்டு, பயிற்சிகள் மூலம் செயற்கையாக திறன்களை பெற முயற்சித்து வாழ்வையே பறிகொடுக்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களுக்காக எடுத்த முடிவுகள் அவர்களின் முடிவு எடுக்கும் திறமைகளை வளர விடாமல் தடுத்துவிடுகிறது. கடைசியில் சுயமாய் சிந்திக்கும் திறனை, தன்னம்பிக்கையை இழந்து, வாழ்க்கை முழுக்க பெற்றோர்கள், நண்பர்கள், வாழ்க்கைத்துணை, உடன் வேலை பார்ப்பவர், உயரதிகாரி என யாரோ ஒருவர் சொல்லும் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

No comments:

Post a Comment